2010-02-06 15:12:06

பிப்ரவரி 07 - நாளும் ஒரு நல்லெண்ணம் 


RealAudioMP3
Bankei என்ற சென் குரு உரையாற்றுகையில் மாணவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியிலிருப்பவர்களும் அவரது உரையைக் கேட்க கூட்டமாய் வருவது வழக்கம். அவர் தன் உரையில் வேதங்களையும், சூத்திரங்களையும் எடுத்துக் கூறாமல், பெரும் வேதாந்த விளக்கங்களில் நேரத்தைச் செலவழிக்காமல், தன் இதயத்திலிருந்து வரும் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். எனவே அவரது உரை அனைவரையும் கவர்ந்தது.
இதைக் கண்ட Nichiren என்ற மற்றொரு குருவுக்கு பொறாமையும், கோபமும் அதிகமானது. எனவே அவர் Bankei போதித்துக் கொண்டிருக்கும் போது, அவருடன் வாதிடும் நோக்கத்தில் அங்கு வந்து உரத்தக் குரலில், "ஏய், போதகரே, உம்மை மதிக்கும் எவரும் நீர் சொல்வதற்கு முற்றிலும் கீழ்படிவார்களாமே. எங்கே, என்னைக் கீழ்ப்படிய வைத்துவிடும், பார்ப்போம்." என்றார். Bankei அவரிடம், "இங்கே அருகில் வாருங்கள். நான் இதை எப்படி செய்கிறேன் என்று காட்டுகிறேன்." என்றார்.
Nichiren அவர் அருகில் சென்றார். Bankei புன்முறுவலுடன், "என் இடது பக்கமாய் வாருங்கள்." என்றார். Nichiren அப்படியே செய்தார். "மன்னிக்கவும். என் வலது பக்கம் வந்தால், நாம் இதைப் பற்றி இன்னும் தெளிவாகப் பேசலாம்." என்றார். Nichiren அப்படியே செய்தார். இப்போது, Bankei அவரிடம், "பார்த்தீர்களா? நான் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் செய்தீர்கள். நீங்கள் ஒரு உன்னதமானவர். இப்போது அமரவும், நாம் பேசுவோம்." என்றார்.வெள்ளம் வரும் போது, வளைந்து கொடுக்கும் நாணல் பின்னர் நிமிர்ந்து நிற்கும். எதிர்த்து நிற்கும் பெரும் மரம் வேரோடு, வெள்ளத்தோடு போய்விடும்.







All the contents on this site are copyrighted ©.