2010-02-06 15:27:02

திருத்தந்தை : எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்திலும் தொழிலாளர், வாடிக்கையாளர், விநியோகிப்பவர் என ஒட்டு மொத்த சமூகமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்


பிப்.06,2010 ACEA என்ற மின்சாரம் மற்றும் தண்ணீர் அமைப்பின் உரோம் மாநகராட்சியின் ஏறத்தாழ 400 பேரை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இந்த அமைப்பு கடந்த நூறு ஆண்டுகளில் உரோம்வாழ் மக்களுக்கு ஆற்றியுள்ள சேவைகளைப் பாராட்டினார்.

1909ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கப்பட்ட ACEA அமைப்பு, வத்திக்கான் நகர நாடு உருவாக்கப்பட்டதன் எண்பதாம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் போது, புனித பேதுரு பசிலிக்கா உட்பட பல ஆலயங்களுக்குச் செய்த பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

தற்போது எதிர்நோக்கப்படும் கடும் சர்வதேச நெருக்கடிகள், நிதி மற்றும் இலாபத்தை மையப்படுத்திய வளர்ச்சி பற்றி மீண்டும் சிந்திக்க வைத்துள்ளன என்றுரைத்த திருத்தந்தை, எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்திலும் தொழிலாளர், வாடிக்கையாளர், விநியோகிப்பவர் என ஒட்டு மொத்த சமூகமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.

பொருட்களின் உற்பத்தி மற்றும்பிற பணிகள் பொருளாதார ஆதாயத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் அனைவரின் நலனில் அக்கறை கொண்டதாய் அமையுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

ஒரு நகரத்தை மனிதாபிமானம் கொண்டதாய் எப்பொழுதும் மாற்றுவதற்கு, நிறைவான மனிதனான கிறிஸ்துவில் நம் கண்களைப் பதித்து அவரின் செயல்கள் மனித சமுதாயத்தில் வளருவதற்கு வழிசெய்ய வேண்டும் என்றும் பாப்பிறை தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.