2010-02-06 15:13:17

ஞாயிறு வாசகங்கள்


எசாயா 6 1-8
உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்: அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்: ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன: ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்: இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்: மற்ற இரண்டால் பறந்தனர். அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்: மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார். கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன: கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது. அப்பொழுது நான்: ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான். படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே என்றேன். அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது: உன் பாவம் மன்னிக்கப்பட்டது, என்றார். மேலும் யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும் என்றேன்.

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 15 1-11
சகோதரர், சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்: அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்: இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்: சிலர் இறந்து விட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை: என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராயிருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.
லூக்கா நற்செய்தி 5 1-11ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார். அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.







All the contents on this site are copyrighted ©.