2010-02-06 15:12:57

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
Shakespeare எழுதிய புகழ் பெற்ற ஒரு நாடகத்தில் வரும் பிரபலமான வரிகள் இவை:
What's in a name? that which we call a rose
By any other name would smell as sweet
ரோஜா மலரை என்ன பெயரிட்டு அழைத்தாலும், அதன் மணம் அதே இனிமையோடு இருக்கும் என்பது அதன் பொருள். எந்த மலருக்கும் இது பொருந்தும். பெயரை மாற்றுவதால் ஒரு பொருளின் அடிப்படை குணம் மாறுவதில்லையே.
அதேபோல், மனிதர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு புண்ணியத்தைப் பல பெயர்களால் அழைக்கிறோம். அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் இந்த புண்ணியம் அழைக்கப்படுகிறது. இந்தப் புண்ணியத்தைப் பற்றி பேசாத பெரியவர்கள் இல்லை.
“தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்” என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கமுடைமை என்று வள்ளுவர் அறத்துப்பாலில் கூறும் பத்து குறள்களை, அன்பர்களே, தயவுசெய்து ஒருமுறை இன்று வாசித்துப்பாருங்கள். 121 முதல் 130 வரையிலான பத்து குறள்களில் நாம் அனைவரும் மகிழ்வோடு, நிம்மதியோடு பெருமையோடு தலை நிமிர்ந்து வாழக்கூடிய வழிகளை மிக எளிமையாக வள்ளுவர் கூறியுள்ளார்.
தன்னடக்கம், புலனடக்கம் சிறப்பாக நாவடக்கம் என்ற பல எண்ணங்களைக் கூறியுள்ளார். நாம் அடிக்கடி இந்தக் குறள்களைக் கேட்டிருக்கிறோம். இவ்வாறு அடிக்கடி கேட்கும் உண்மைகள் உள்ளத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் போக வாய்ப்புண்டு. நீங்கள் அடிக்கடி கேட்டிருந்தாலும், இன்று மீண்டும் ஒருமுறை இக்குறள்களில் ஒரு சிலவற்றைக் கேட்போம்:
குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
குறள் 125:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
குறள் 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
குறள் 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

திருவள்ளுவர், திருக்குறள் பற்றிய விளக்கவுரை இப்போது ஏன் என்று குழம்பிப் போயிருக்கும் அன்பர்களே, இன்றைய ஞாயிறு வாசகங்களையும், இக்குறள்களோடு இணைத்து சிந்திக்க அழைக்கிறேன்.
இந்த ஞாயிறு திருவழிபாட்டில் நமக்குத் தரப்பட்டுள்ள மூன்று விவிலிய வாசகங்களிலும் பொதுவான ஒரு எண்ணம் உள்ளது. எசாயா, பவுல், பேதுரு என்ற மூன்று விவிலியத் தூண்களும் உள்ளத் தாழ்ச்சியோடு தங்களைப் பற்றிக் கூறும் வார்த்தைகளை இந்த மூன்று வாசகங்களும் தாங்கி வருகின்றன.
முதல் வாசகத்தில் இறைவனின் மாட்சியை கண்ணாரக் கண்டு எசாயா கூறும் வார்த்தைகள் இவை: எசாயா 6:5 - தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்.
இரண்டாம் வாசகத்தில், இயேசு அப்போஸ்தலர்கள் பலருக்குக் காட்சியளித்ததை வரிசைப்படுத்திச் சொல்லும் பவுல், இறுதியாக, இயேசு தனக்கும் தோன்றினார் என்பதை இவ்வாறு கூறுகிறார்: 1 கொரி. 5:8 - எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்.
நற்செய்தியில் இயேசு பேதுருவின் படகில் ஏறி போதித்தபின், அவர்களை அந்த நடுப்பகலில் மீன் பிடிக்கச் சொன்ன அந்த நிகழ்ச்சியில், பெருந்திரளான மீன்பிடிப்பைக் கண்டு பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து கூறும் வார்த்தைகள் இவை: லூக்கா. 5:8: - ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்

எசாயா, பவுல், பேதுரு என்ற மூவருமே உள்ளத்தின் நிறைவிலிருந்து பேசிய வார்த்தைகள் இவை. தன்னிரக்கத்தில், வேதனையில், இயலாமையில் தங்களையே வெறுத்து, தங்களையே தாழ்த்திச் சொன்ன வார்த்தைகள் அல்ல. இது நமக்குத் தரும் முக்கியமான பாடம்: தாழ்ச்சி என்பது, பணிவு என்பது உள்ள நிறைவிலிருந்து வரும் போதுதான் உண்மையாக இருக்கும், உண்மையாக ஒலிக்கும். குறையில் உள்ளவர்கள் தங்களையே தாழ்த்திச் சொல்லும் வார்த்தைகள் ஏக்கத்திலிருந்து வருவன. பிறரிடம் கையேந்தி தர்மம் தேடுவோர் தங்களையேத் தாழ்த்திக் கொள்வது போன்ற நிலை அது. நிறைவிலிருந்து சொல்லப்படும் உண்மைகளில் எந்த உள்ளர்த்தமோ, தேடலோ, ஏக்கமோ இருக்காது.
தன்னிடம் உள்ள நிறை குறைகளை முழுவதும் அறிந்த ஒருவர், தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்வதே பணிவு. ஒரு சின்ன உதாரணம்: நான் கல்லூரியில் வகுப்புகள் எடுக்கும் போது, அன்றைய பாடத்திற்கு என்னால் முடிந்தவரை தயாரிப்போடு செல்வது வழக்கம். அன்றைய பாடத்தோடு தொடர்புடைய, அதுவும் அண்மையில் வந்த தகவல்களைச் சேகரித்து செல்வேன். இருந்தாலும், என்னை விட  தொடர்பு சாதனங்களில் அதிகம் திறமையும், அறிவும் கொண்ட மாணவர்கள் என் வகுப்பில் இருந்தனர் என்பதும் எனக்கு நன்கு தெரியும். அவர்களில் ஒரு சிலர் தங்களுக்குத் தெரிந்தது ஆசிரியருக்குத் தெரிகிறதா என்று பார்ப்பதற்கு கேள்விகள் கேட்பர். வேறு சிலர் உண்மையில் அந்த விஷயங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் கேள்விகள் கேட்பர். கேள்வி எந்த கோணத்தில் வந்தாலும் சரி, அவர்கள் கேட்கும் கேள்விக்கு முழுமையான பதில் தெரிந்தால், நான் விளக்கம் தருவேன். பாதி தெரிந்தால், அல்லது சரிவரத் தெரிய வில்லை என்றால், அடுத்த நாள் அதைப்பற்றி சொல்வதாகச் சொல்லியிருக்கிறேன். தனக்குத் தெரியவில்லை, அடுத்த நாள் அது பற்றி தெரிந்து கொண்டு சொல்கிறேன் என்று சொல்லும் ஆசிரியர்கள் மேல் மாணவர்களுக்கு மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஆனால், இப்படிச் சொல்வதற்கு துணிவு, தன்னம்பிக்கை, தன்னைப் பற்றிய தெளிவு இவைகள் தேவை. இவைகள் இல்லாத போது, சில ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களை இழிவாக, குறைவாக நினைப்பார்களோ என்ற பயத்தில் தெரியாதவைகளை, தெரிந்தது போல் அரையும் குறையுமாகச் சொல்லும் போது மாணவர்கள் மதிப்பில் பல படிகள் இறங்கி விடுவர் அந்த ஆசிரியர்கள்.
நிறைவும், குறையும் இரட்டைப் பிறவிகள். துணிவும் பணிவும் அதேபோல் இரட்டைப் பிறவிகள். இன்னும் சொல்லப்போனால், துணிவிளிருந்து பிறப்பதே பணிவு. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது முரண்பாடாகத் தெரியலாம். ஆனால், நிதானமாகச் சிந்தித்தால், தெளிவு கிடைக்கும். நான் சொல்லும் துணிவு உண்மையின் அடிப்படையில் எழுகின்ற துணிவு. வன்முறையையே வாழ்வாக்கி இருக்கும் ரவுடிகள், தாதாக்கள் காட்டும் துணிவு உண்மையில் துணிவல்ல, தங்கள் பயத்தை மூடி மறைக்கும் ஒரு வேஷம். தன்னை நன்கு உணர்ந்தவர்கள் தங்கள் திறமைகள், குறைகள் இவைகளை ஏற்றுக் கொண்டவர்கள், தங்கள் திறமைகள் மேல் நம்பிக்கை கொண்டு துணிந்து செயல்களில் இறங்குவார்கள். குறையுள்ள பகுதிகளில் பணிவோடு விலகிக் கொள்வார்கள். இவர்கள் இறை நம்பிக்கை உடையவர்களானால், தனது திறமை, சக்தி இவைகளை மட்டும் நம்பாமல், இறைவன் நமக்குபின் இருந்து செயல் படுகிறார் என்ற நம்பிக்கையோடு குறையுள்ள பகுதிகளிலும் துணிந்து இறங்குவார்கள். துணிவில் பிறக்கும் பணிவுக்கு இதுதான் நான் காணும் விளக்கம். இந்தத் துணிவை, அதில் பிறந்த பணிவை பெரும் சாதனையாளர்களிடம் பார்க்கிறோம். அறிவியல் மேதை ஐசக் நியூட்டன் சொல்வது இது: மற்றவர்களை விட நான் இன்னும் அதி தூரம் பார்க்க முடிந்ததற்கு ஒரு முக்கிய காரணம், நான் எனக்கு முன் சென்றவர்களின் தோள்களின் மேல் ஏறிநின்றேன். Isaac Newton
இறைவனின் தோள்களில் துணிவுடன் ஏறி நின்ற எசாயா, பவுல், பேதுரு இவர்களின் பணிவை இன்றைய வாசகங்களில் கேட்டோம்.
தன்னிறைவு, தன்னைப் பற்றிய தெளிவு, துணிவு இவைகள் இல்லாத போது அடுத்தவர்களை எப்போதும் நமக்குப் போட்டியாக நினைப்போம். இந்தப் போட்டியைச் சமாளிக்க, ஒன்று நம்மையே தேவைக்கும் அதிகமாகப் புகழ வேண்டியிருக்கும், அல்லது தற்பெருமையோடு தவிக்க வேண்டியிருக்கும். அல்லது, மிகவும் பரிதாபமாக போலி தாழ்ச்சியுடன், பணிவுடன் நடிக்க வேண்டியிருக்கும். போலி தாழ்ச்சிபற்றி பல கதைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. இந்திய மதகுரு ஒருவர் சொன்ன கதை இது.

தற்பெருமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த ஒரு அரசனை ஞானி ஒருவர் பார்க்க வந்தார். அரசன் அவரை உடனே சந்திக்கவில்லை. பல அலுவல்களில் மூழ்கி இருப்பது போல் நடித்துக் கொண்டு, அந்த ஞானியை காத்திருக்கச் செய்துவிட்டு பிறகு அரசன் அவரைச் சந்தித்தான். அரசனுக்கு முன் ஞானி வந்ததும், தன் தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி அரசனை வணங்கினார். உடனே, அரசனும் தான் அணிந்திருந்த மகுடத்தைக் கழற்றி ஞானியை வணங்கினான். இதைக் கண்ட அமைச்சர்களுக்குப் பெரும் ஆச்சரியம். அவர்களில் ஒருவர், "அரசே, என்ன இது? அந்த மனிதன் சாதாரண குடிமகன். அவன் தன் தொப்பியைக் கழற்றி வணங்கியது முறையே. அதற்காக நீங்கள் ஏன் உங்கள் மகுடத்தை கழற்றினீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அரசன் சொன்ன விளக்கம் இது: "முட்டாள் அமைச்சரே, அந்த மனிதனை விட நான் குறைந்து போக வேண்டுமா? அவன் தன் பணிவைக் காட்ட தொப்பியைக் கழற்றி எனக்கு வணக்கம் சொன்னான். அவனுக்கு முன் நான் என் மகுடத்தைக் கழற்றவில்லையெனில், அவன் பணிவில் என்னை வென்றுவிடுவான். என்னைவிட உயர்ந்துவிடுவான். நான் அவன் முன் தோற்றுவிடுவேன். யாரும், எதிலும் என்னை வெல்லக்கூடாது. புரிகிறதா?" அரசன் தந்த விளக்கத்தைக் கேட்டு, தன் தாழ்ச்சியிலும் தன் பெருமையை நிலை நாட்டிய அரசனைக் கண்டு அமைச்சர் வாயடைத்து நின்றார். போலியான பணிவுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு இது.
வாழ்வில் சாதனைகள் பல புரிந்தாலும், தன்னடக்கத்தோடு வாழ்ந்த பலர் தாழ்ச்சியைப் பற்றி கூறியுள்ளனர்.
நம்மை விட உயர்ந்தோரிடம் பணிவாயிருப்பது நம் கடமை. நமக்கு இணையாய் இருப்போரிடம் பணிவாய் இருப்பது நல்ல பழக்கம். நமக்குக் கீழே பணிபுரிவோரிடம் பணிவாய் இருப்பதே உன்னதமானது, பெருமைக்குரியது. Benjamin Franklin
தாழ்ச்சி ஏன் இவ்வளவு விரும்பத்தக்கதெனின், கடவுளிடம் மிக நெருங்குவதற்கு இதுவே வழிவகுக்கும். Monica Baldwin
இதையே நம் தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரும் வேறொரு வகையில் சொல்கிறார்: அனைத்துக்கும் மேலானவரை நெருங்க, தாழ்ச்சியில் மேலோங்க வேண்டும். 
இறுதியாக, அன்புள்ளங்களே, தன்னிறைவு, தன்னம்பிக்கை இவைகளில் வளர்ந்து, இறைவனின் அருளோடு செயல்பட்ட பவுல் அடியார் சொல்லும் வார்த்தைகள் நமது இந்த ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்யட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12 9-10கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.







All the contents on this site are copyrighted ©.