2010-02-06 15:28:00

கடல் தொழில் செய்வோருக்கான ஆன்மீகப் பணியில் ஈடுபட்டுள்ள மாகாண ஒருங்கிணைப்பாளர்களுக்கென வத்திக்கானில் மூன்று நாள் கருத்தரங்கு


பிப்.06,2010 மீன்பிடிப் படகுகள், மீன்பிடி அமைப்புகள் போன்ற மீன்பிடித் துறையில் ஏற்பட்டுள்ள அண்மை தொழிநுட்ப வளர்ச்சிகள், பல மீனவர்களையும் அவர்களின் சமூகங்களையும் வெகுவாய்ப் பாதித்துள்ளன என்று, குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவைத் தலைவர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ கூறினார்.

இத்திருப்பீட அவை, கடல் தொழில் செய்வோருக்கான ஆன்மீகப் பணியில் ஈடுபட்டுள்ள மாகாண ஒருங்கிணைப்பாளர்களுக்கென வத்திக்கானில் வருகிற திங்கள் முதல் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கை நடத்தவுள்ளது.

இக்கருத்தரங்கு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் மர்க்கெத்தோ, கப்பற்பயணம் செய்வோருக்கான மேய்ப்புப்பணிகள் குறித்த விதிமுறைகள் இதில் முடிவு செய்யப்படும் என்றார்.

கடல்சார்ந்த சர்வதேச நிறுவனம், 2010ம் ஆண்டை கடற்பயணிகள் ஆண்டாக அறிவித்துள்ள வேளை, கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் அன்றாட வாழ்வு பற்றி அறிவதற்கு இது உதவும் என்றும் பேராயர் கூறினார்.

கப்பற்பயணம் செய்வோருக்கானத் திருச்சபையின் மேய்ப்புப்பணிகள் குறித்த முதல் கூட்டம் 90 ஆண்டுகளுக்கு முன்னர், Glasgowவில், 1920ம் ஆண்டு அக்டோபர் நான்காம் தேதி தொடங்கப்பட்டது என்றும், இக்கருத்தரங்கு இதனைக் கொண்டாடுவதாக இருக்கும் என்றும் பேராயர் மர்க்கெத்தோ கூறினார்.

இக்கருத்தரங்கை குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட மேய்ப்புப்பணி அவை நடத்துகிறது. உலகில் அதிகப்படியாக மீன்கள் கிடைக்கும் 15 பகுதிகளில் நான்கில் தற்போது மீன்கள் கிடைப்பதில்லை, இன்னும் 9 பகுதிகள் இந்நிலையை எதிர்நோக்குகின்றன என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.