2010-02-04 15:06:28

இலங்கையில்  கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளையோர் சார்பில் ஆயர்களின் விண்ணப்பம்


பிப்.04,2010 இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு போரின்போது கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளையோரை நீதி விசாரணைக்கு முன் கொண்டு வரவோ அல்லது விடுவிக்கவோ அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென இலங்கையின் வட பகுதியில் உள்ள ஆயர்கள் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த இளையோர் சாதாரண குடும்பங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் மீண்டும் குடும்பங்களுடன் இணைவதையே திருச்சபையும் இக்குடும்பங்களும் அதிகம் விரும்புகின்றன என்றும் யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் கூறியுள்ளார்.

இந்த இளையோர் கடந்த 10 அல்லது 15 ஆண்டுகள் எவ்வித விசாரணையும் இன்றி சிறைகளில் வாடுவது வேதனையைத் தருகிறதென்றும், இவர்களை விடுவிக்கக் கோரி, நீதி மற்றும் சட்டச் சீர்திருத்த அமைச்சர் Milinda Moragoda வுக்குத் தான் விண்ணப்பித்துள்ளதாகவும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த ஏழு மாதங்களில் 11,000 இளையோர் பல்வேறு காரணங்களுக்காக சிறைபடுத்தப் பட்டுள்ளனர் என்றும், ஏற்கனவே 10,000க்கும் மேற்பட்ட இளையோர் சிறைகளில் உள்ளனர் என்றும் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.