2010-02-02 17:14:18

அமெரிக்க எழுத்தாளர் கவாலி திருத்தந்தை 12ம் பத்திநாதருக்கு ஆதரவு


பிப்.02,2010 நாத்சி வதைப்போர் காலத்தின் போது ஜெர்மனிக்கு எதிராகத் திருத்தந்தை 12ம் பத்திநாதர் தன் குரலை எழுப்பவில்லை என்ற குற்றச்சாட்டு எவ்வித ஆதாரமும் அற்றது என்று அமெரிக்க எழுத்தாளர் டிமிரிட்டி கவாலி குறிப்பிட்டுள்ளார்.

ஹாரெட்ஸ் என்ற இஸ்ராயேல் செய்தி பத்திரிகையில் இதனைத் தெரிவித்துள்ள இந்த எழுத்தாளர், இரண்டாம் உலகப் போரின் போது திருத்தந்தை 12ம் பத்திநாதர் மௌனம் காத்தார், நாத்சி அரசுக்கு ஆதரவாக இருந்தார், யூதர்களைக் காப்பாற்ற எதுவும் ஆற்றவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாதவை என அதில் குறிப்பிட்டுள்ளார்.

நாத்சி ஆட்சியாளர்களின் யூதவிரோதப் போக்குகளை எதிர்ப்பதற்கு தன்னால் இயன்றதை ஆற்றுமாறு ஜெர்மனிக்கானத் திருப்பீடத் தூதுவருக்கு 1933ல் அப்போதைய திருப்பீடச் செயலராக இருந்த கர்தினால் பச்செல்லி, அதாவது பின்னாளைய திருத்தந்தை 12ம் பத்திநாதர் ஆணையிட்டது சரித்திரச் சான்றாக உள்ளது எனவும் அமெரிக்க எழுத்தாளர் கவாலி கூறியுள்ளார்.

திருத்தந்தை 12ம் பத்திநாதர் பாப்பிறை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தாலேயே திருப்பீடத்துடனான உறவை முறிக்க ஜெர்மானிய பிரச்சார அமைச்சர் ஜோசப் கோபெல்ஸ் முயற்சியை மேற்கொண்டதும், திருத்தந்தையின் நாத்சி விரோதப் போக்கிற்கான சான்றே என்பதையும் சுட்டிக்காட்டிய எழுத்தாளர் கவாலி, 1942ம் ஆண்டின் திருத்தந்தையின் கிறிஸ்துமஸ் செய்தியில் யூதர்களுக்கு எதிரான ஜெர்மானிய அநீதிகளை எடுத்துரைத்தது தெளிவாக உள்ளது என மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.