பிப்ரவரி 01. எல்லாமிருந்தும் அன்பில்லையேல் அவற்றால் எவ்விதப் பயனுமில்லை என்ற புனித
பவுலின் முதல் கொரிந்தியர் 13ம் அதிகார வார்த்தைகளை எடுத்தியம்பி, இஞ்ஞாயிறு நண்பகல்
மூவேளை ஜெப உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட்.
பிறரன்பு என்பது மிகப்பெரும்
கொடை, அது பொறாமைப்படாது, தற்புகழ்ச்சிக் கொள்ளாது, இறுமாப்பு அடையாது, மாறாக உண்மையிலும்,
பிறரிலான நன்மைத்தனத்திலும் மகிழ்ச்சிக் கொள்ளும் என்ற பாப்பிறை, இறுதி நாளில் இறைவனை
முகம் முகமாய் நோக்கும்போது பிறரன்பு என்பது மட்டுமே அங்கு எஞ்சி நிற்கும் எனவும் கூறினார்.
கிறிஸ்தவத்தை
வேறுபடுத்திக் காட்டுவது அதன் பிறரன்பே எனவும் கூறினார் அவர்.
நண்பகல் மூவேளை
ஜெப உரையின் இறுதியில், இஞ்ஞாயிறு உலக தொழுநோயாளர் தினமாக சிறப்பிக்கப்பட்டதை நினைவு
கூர்ந்து, புனித டேமியன் தே வூஸ்டரின் எடுத்துக்காட்டையும் முன் வைத்து, தொழுநோயாளர்களிடையே
பணிக்கான ஊக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தார் பாப்பிறை.
இன்றைய உலகில்
பொருளாதார நெருக்கடிகளால் பலர் வேலைகளை இழந்து வருவதையும் சுட்டிக்காட்டி கவலையை வெளியிட்ட
பாப்பிறை, புனித பூமியின் அமைதிக்காக இடம்பெறும் ஜெபங்களில் தன் ஜெபங்களையும் இணைத்துக்
கொண்டு, அனைத்து விசுவாசிகளின் செபத்திற்காகவும் அழைப்பு விடுத்தார்.