2010-01-30 15:45:50

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
சரியாக 30 ஆண்டுகளுக்கு முன், 1980ஆம் ஆண்டு மார்ச் 24 காலை 6 அல்லது 7 மணி அளவில் பேராயர் ஒருவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும் போது, கோவிலின் பின் புறம் வந்து நின்ற ஒரு படை வீரன் குறிவைத்து சுட்டான். ஒரே ஒரு குண்டு. பேராயரின் இதயத்தில் பாய்ந்தது. திருப்பலியை நிறைவு செய்யாமலேயே, பீடத்தின் மீது சாய்ந்து பலியானார்.
பேராயர் கொலையுண்டதற்கு என்ன காரணம்?
அதற்கு முந்திய நாள், அதாவது மார்ச் 23ஆம் தேதி பேராயர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களை அச்சுறுத்தும் வண்ணம் அவர்களைச் சுற்றி வளைத்து ஆயுதம் தாங்கி நின்றிருந்த வீரர்களைப் பார்த்து பேராயர் சொன்னது இது: “சகோதரர்களே, இங்கு நீங்கள் சூழ்ந்திருக்கும்  இந்த மக்கள் மத்தியில் தான் நீங்கள் பிறந்து வளர்ந்தீர்கள். இவர்கள் உங்கள் சகோதரர்கள். உங்கள் சகோதரர்களையே நீங்கள் கொன்று வருகிறீர்கள். மக்களைக் கொல்லும் படி உங்களுக்குத் தரப்படும் எந்த ஆணையும் இறைவன் தந்துள்ள 'கொலை செய்யாதே' என்ற அந்த கட்டளைக்கு உட்பட்டதே. இறை கட்டளையை மீறி உங்களுக்குத் தரப்படும் நெறியற்ற ஆணைகளுக்கு நீங்கள் கீழ்படியத் தேவையில்லை. இந்த நெறியற்ற ஆணைகளுக்கு கீழ்படிவதைவிட, உங்கள் மன சாட்சிக்குக் கீழ்படியுங்கள். இந்த அராஜகத்தைப் பார்த்துக் கொண்டு திருச்சபை மௌனமாய் இராது. கடவுளின் பெயரால், தினமும் விண்ணை நோக்கிக் குரல் எழுப்பும் இந்த மக்கள் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்கள் ஆயர் என்ற முறையில் ஆணை இடுகிறேன், உங்கள் அராஜகத்தை நிறுத்துங்கள்.”
"Brothers, you came from our own people. You are killing your own brothers. Any human order to kill must be subordinate to the law of God, which says, 'Thou shalt not kill'. No soldier is obliged to obey an order contrary to the law of God. No one has to obey an immoral law. It is high time you obeyed your consciences rather than sinful orders. The church cannot remain silent before such an abomination. ...In the name of God, in the name of this suffering people whose cry rises to heaven more loudly each day, I implore you, I beg you, I order you: stop the repression"
ஆயர் கூறிய சொற்கள், எடுத்துரைத்த உண்மைகள் மிகவும் கசந்திருக்க வேண்டும். அதனால், அடுத்த நாள் காலை அந்தப் படைவீரர்களில் ஒருவன் ஆயரது உயிரைப் பறித்தான். அன்புள்ளங்களே, நான் சொன்ன இந்த சம்பவம் நடந்தது எல் சால்வதோர் நாட்டில். அங்கு, சான் சால்வதோர் நகரில் பேராயராய் இருந்த ஆஸ்கார் ரொமேரோ 1980, மார்ச் 24 உயிரிழந்தார். இவ்வாண்டு அவர் இறந்து  30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரைப் புனிதராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எல் சால்வதோர் தலத் திருச்சபை. திருத்தந்தையாக இருந்த இரண்டாம் ஜான் பால், ரொமேரோ இறந்த பத்து ஆண்டுகளில் அவரை இறைவனின் அடியார் என்ற நிலைக்கு உயர்த்தினார். புனிதராக அவர் உயர்த்தப் படவில்லை எனினும், உலக அரங்கில் பல்வேறு நிலைகளில் அவரை உண்மைக்காக, நீதிக்காக உயிர் துறந்த ஒரு தலைவராகப் போற்றுகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் மனித சமுதாயத்தை நல் வழி நடத்திய பல தலைவர்களில் ஒருவராக பேராயர் ரொமேரோவைக் கருதுகின்றனர். பேராயர் ரொமேரோ ஒரு இறை வாக்கினர். இறைவனின் வார்த்தையை, அது கூறும் உண்மைகளைக் கலப்படமில்லாமல், எந்த வித அலங்காரமும் இல்லாமல் எடுத்துச் சொன்னவர். மனித வரலாற்றில் பல ஆயிரம் இறைவாக்கினர்கள் இதையேச் செய்தனர். உண்மையைச் சொன்னார்கள், உயிரைத் தந்தார்கள். உண்மைக்கும், உயிர்பலிக்கும் அப்படி ஒரு நெருங்கிய உறவு.
உண்மை கசக்கும், உண்மை எரிக்கும், உண்மை சுடும் என்று உண்மையின் பல விளைவுகளைச் சொல்கிறோம். உண்மை பல வேளைகளில் நம்மைச்  சங்கடப்படுத்தும். உலகத்தின் கண்களைக் கட்டிவிட்டதாய் நினைத்துக் கொண்டு, நம் கண்களை நாமே கட்டிக்கொண்டு தவறுகள் செய்யும்போது, உண்மை வந்து நம் கண் கட்டை அவிழ்க்கும். கட்டவிழ்க்கப்பட்டதும் அந்த ஒளியை, உண்மையைக் காண முடியாமல் நம் கண்கள் கூசி நிற்கும். உண்மை நம்மைத் தோலுரித்துக் காட்டும். உண்மையின் பின் விளைவுகளை இப்படி நாம் பட்டியலிடும் போது, ஒரு முக்கியமான அம்சத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும். உண்மை விடுவிக்கும். உண்மை மீட்பைத்  தரும். உண்மை தரும் சங்கடத்தை சமாளிக்க முடியாமல், பல நேரங்களில் உண்மையை மறைத்துவிட, அழித்து விட முயற்சிகள் நடக்கின்றன. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தான் உண்மை பேசும் இறைவாக்கினர்களின் முயற்சிகளைப் பல வகைகளில் நிறுத்த முயன்று, எல்லாம் தோல்வி கண்ட பின் இறுதியில் அந்த இறைவாக்கினரின் வாழ்வையே நிறுத்த வேண்டியதாகிறது.
இறைவாக்கினர்கள் சராசரி மனிதர்கள் அல்ல. கூட்டத்தோடு சேர்ந்து கோஷம் போடுபவர்கள் அல்ல. தனித்து நின்று, இறைவனின் வார்த்தையைத் தைரியமாக முழங்குபவர்கள். ஆஸ்கார் ரொமேரோ 80களில் இறைவார்த்தையை முழங்கினார். குண்டடிபட்டு இறந்தார். மார்ட்டின் லூத்தர் கிங் 60களில் அமெரிக்காவில் இறைவாக்கை எடுத்துரைத்தார். குண்டடிபட்டு இறந்தார். மார்ட்டின் லூத்தர் கிங் மனத்தைக் கவர்ந்த நமது காந்தியும் சத்தியத்தை வாழ்வில் மேற்கொண்டார். ஜனவரி 30 காந்தி சுடப்பட்டதை நினைவுகூர்ந்தோம், இல்லையா? அன்பர்களே, இந்த பட்டியல் மிக நீளமானது. நேரம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.
இறைவாக்கினர் பேசுவது பொதுவாக எல்லாரையும் சங்கடப்படுத்தும் என்பதால், அவருக்கு வரவேற்பு இருக்காது. இந்த எண்ணத்தை இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகச் சொல்கிறார். சென்ற வாரம் ஞாயிறு சிந்தனையில் நாம் எடுத்துக்கொண்ட பகுதியின் தொடர்ச்சியே இந்த வாரம் நம் சிந்தனைக்குத் தரப்பட்டுள்ளது. நற்செய்தியைக் கேட்போம். 
லூக்கா நற்செய்தி 4: 21-30

ஏசாயாவின் இறைவாக்கு இன்று, இப்போது, இங்கு நிறைவேறிற்று என்று நம்பிக்கையோடு இயேசு ஆரம்பித்தார். ஆரம்பம் ஆழகாகத்தான் இருந்தது. ஆனால், தொடர்ந்து தான் வளர்ந்த ஊரான நாசரேத்துக்கு இயேசு ஒரு சில உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தார். வளர்ந்த ஊர் என்பதால், சிறு வயதிலிருந்து இயேசு அங்கு நிகழ்ந்த பல காரியங்களைப் பார்த்து, உணர்ந்து வந்தவர். அவர்கள் எல்லாருக்குமே தெரிந்த பல நெருக்கமான, அதேநேரம் சஙகடமான, உண்மைகளைச் சொன்னார் இயேசு.
பல நேரங்களில் நமக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் உண்மைகளைப் பார்க்கத் தவறுகிறோம். ஒரு சின்ன உதாரணம். சின்னத்தனமான உதாரணமாகக்கூடத் தெரியும். ஆனால், இதுவும் உண்மை. நாம் சாப்பிடும் போது, சில சமயங்களில் மூக்கின் மீது, அல்லது முகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சாப்பாட்டுத் துகள் ஒட்டிக் கொண்டால், அதை நாம் உணர்வதில்லை. வேறு யாராவது அதை நமக்குச் சொன்னால் உண்டு, அல்லது ஒரு கண்ணாடியின் உதவி நமக்குத் தேவை. உண்மை வந்து நம் முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தாலும் நம்மால் பார்க்க முடியாது.
இன்னுமொரு சின்னக் கதை. சின்னத்தனமான கதை. வயதான ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மீசை அடர்த்தியாக இருந்தது. அந்த மீசை பல கேலிகளுக்கு ஆளான மீசை. அவரது பேரன் பெரிய குறும்புக்காரன். தூங்கிக்கொண்டிருந்த அவர் மீசைக்குள் ஒரு சின்ன கருவாட்டுத் துண்டை வைத்து விடுகிறான். தூக்கம் கலைந்து எழுந்த தாத்தா முகம் சுளிக்கிறார். ஒரே நாற்றம். வயதான தன் மனைவியைக் கூப்பிட்டு என் இந்த நாற்றம் என்று கேட்கிறார். பாட்டி ‘ஒன்றும் நாறவில்லை’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். தாத்தா அடுத்த அறைக்குச் செல்கிறார். அங்கும் அதே நாற்றம். வீட்டுக்கு வெளியே செல்கிறார். அங்கும் அதே நாற்றம். உலகமே நாற்றமடிப்பதைப் போல் உணர்கிறார். உலகம் நாறவில்லை. அவரது மீசைக்குள் ஒளிந்திருந்த கருவாடுதான் இந்த நாற்றத்தின் காரணம் என்று அவர் கண்டுபிடிக்க பல மணி நேரங்களாயின.
சங்கடமான உண்மைகள் மிக அருகில் இருந்தாலும் அவைகளை நாம் உணர முடியாமல் போகலாம். யாராவது அந்த உண்மையை எடுத்துச் சொல்லும்போது, நாம் திருந்திக் கொள்ள வாய்ப்புண்டு, திருப்பி அடிக்கவும் வாய்ப்புண்டு. இயேசு தன் சொந்த ஊரில் உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்ததும், அவர்கள் மனதில் இயேசுவின் மீது இதுவரை இருந்த ஈர்ப்பு, மரியாதை, மதிப்பு ஆகியவைக் கொஞ்சம் கொஞ்சமாய் விடை பெற ஆரம்பித்தன.
‘இவர் யோசேப்பின் மகன்’ என்று இயேசுவின் பூர்வீகத்தை அவர்கள் அலசிய போது, அதை நினைத்து பாராட்டியதாக நற்செய்தி சொல்கிறது. ஆனால், பூர்வீகங்கள் அலசப்படும் போது பல நேரங்களில் "ஓ, இவன் தானே" என்ற ஏளனம் அங்கு வந்து சேரும். அதுவும் சாதிய எண்ணங்களில் ஊறிப்போயிருக்கும் இந்தியாவில், தமிழகத்தில் பூர்வீகத்தைக் கண்டுபிடிக்க நாம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்காக அல்ல. மாறாக, மற்ற தேவையற்ற குப்பைகளைக் கிளற என்பது நமக்குத் தெரிந்த உண்மை. சுடுகின்ற உண்மைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது, சங்கடமாய் இருந்தாலும், இந்த உண்மையையும் சொல்லியே ஆக வேண்டும்.
உண்மைகளை மருந்துகளோடு ஒப்பிட்டுப் பார்க்க விழைகிறேன். ஏனோ தெரியவில்லை... மருத்துவ உலகில் நலம் விளைவிக்கும் பல மருந்துகள் கசப்பாகவே உள்ளன. கசப்பான மருந்துகள் நாவுக்கு, நமது ருசிக்குப் பகைவர்கள். ஆனால், உடலுக்கு நண்பர்கள். கசப்பு மருந்துகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, அவைகளைத் தேனில் குழைத்துக் கொடுப்போம். இதே கசப்பு மருந்தை நாம் ‘கேப்ஸ்யூலி’ல் அடைத்து முழுங்குவோம்.
உண்மை என்ற கசப்பையும், தேனில் குழைத்து, ‘கேப்ஸ்யூலி’ல் அடைத்துக் கொடுத்த இறைவாக்கினர்கள் உண்டு. சொல்ல வந்த உண்மையை நேரில் சொல்லாமல், கதை வழியே சொன்ன இறைவாக்கினர்கள் உண்டு. 2 சாமுவேல் நூலில் இப்படி ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம். (2 சாமு. 12: 1-14) தாவீது அடுத்தவரின் மனைவியை அபகரித்துக் கொண்டதை அவரது நண்பனும், இறைவாக்கினருமான நாத்தான் கதை மூலம் சொல்ல, கதை கேட்ட தாவீது கதையில் சொல்லப்பட்ட ஆள் மீது கோபம் கொண்டார். நாத்தான் அந்த ஆள் நீதான் என்று சொன்னார். நல்லவேளை, உண்மை உள்ளத்தை ஊடுருவிய போது, தாவீது மனம் திருந்துகிறார்.
ஆனால், உண்மைகள் சொல்லப்பட்ட பல நேரங்களில் இவ்வாறு நன்மைகள் நடப்பதில்லை. பெரும்பாலும் உண்மைகள் கோபத்தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளன. விவிலியத்தில் பல இடங்களில் உண்மைகள் சொல்லப்பட்ட போது, அந்த உண்மைகளை ஊமையாக்க, உண்மை சொன்னவர்களை ஊமையாக்க, அவர்கள் உயிரைப் பறித்த சம்பவங்கள் பல உண்டு.
இன்று நற்செய்தியிலும் இயேசுவுக்கு அந்த நிலைதான். இயேசு சொன்ன உண்மைகளைக் கேட்க முடியாமல், அவர்கள் கோபம் கொலை வெறியாகிறது. இந்த முறை இயேசு தப்பித்துக் கொள்கிறார். அவர் நம்மைப் போல் ஒரு சராசரி மனிதராய் இருந்திருந்தால், "இந்த ஒரு அனுபவம் எனக்குப் போதும். நான் ஏன் இந்த ஊருக்கு உண்மைகளைச் சொல்லி ஏச்சும், பேச்சும் பெற வேண்டும்? விட்டிருந்தால், இவர்கள் நம்மை இன்று கொன்றிருப்பார்கள். தேவையில்லை இவர்கள் சகவாசம்." என்று இயேசு ஒதுங்கி இருக்கலாம். ஆனால், அன்று இறைவாக்குரைக்கத் தொடங்கிய அவரது பணி, கல்வாரி பலியில் தான் முடிந்தது.
நம் இறுதி சிந்தனை. இறைவாக்கினரின் வழியே கடவுள் பயன்படுத்தும் ஆயுதம் இறைவாக்கு. கொஞ்சமும் பூசி மெழுகாமல், உண்மையைக் கூறும் இறைவாக்கு அறுவைச் சிகிச்சையில் உயிரை எடுப்பதற்கு பதில், உயிரைக் கொடுப்பதற்கு  பயன் படுத்தப்படும் கத்தியைப் போன்றது.
எபிரேயர் திருமுகத்தில் இறைவார்த்தையை ஒரு வாளுக்கு ஒப்புமைப்படுத்தி, அழகிய வரிகள் சொல்லப்பட்டுள்ளன. உடலினுள் சென்று  உதவிகள் செய்யும் கத்தியைப் போல், மனதினுள் சென்று இறைவாக்கு நமக்கு நலம் தரும்படி, இந்த இறைவாக்குடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 4: 12கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.







All the contents on this site are copyrighted ©.