2010-01-29 15:23:36

ஹெய்ட்டி நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு நீண்டகால யுக்திகள் தேவைப்படுகின்றன-ஓர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்


சன.29,2010 நிலநடுக்கத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டியில் வறுமையை ஒழிப்பதற்கும், நாட்டை மீண்டும் கட்டி எழுப்பி முன்னேற்றுவதற்கும் ஒருங்கிணைந்த நீண்டகால யுக்திகள் தேவைப்படுகின்றன என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சர்வதேச நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் கூறியுள்ளார்.

நியுயார்க்கின் அல்பனி ஆயர் ஹோவார்டு ஹூபார்டு, அதிபர் ஒபாமா நிர்வாகத்திலுள்ள அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஹெய்ட்டியை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு நிறுவனங்களின் முயற்சிகள் ஹெய்ட்டியில் பணி செய்த அனுபவம் வாய்ந்த குழுக்களுடன் சேர்ந்து செயல்படுவதாய் இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

ஹெய்ட்டியின் வெளிநாட்டு கடன் இரத்து செய்யப்படல், அந்நாட்டுனான வணிகத்தை விரிவாக்குதல், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் ஹெய்ட்டி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக தங்கும் அனுமதிகளை நீட்டித்தல், நிலையான கட்டுமானப்பணிகள் போன்றவை அந்நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான முக்கிய கூறுகள் என்று ஆயர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அரசுச் செயலர் ஹில்லரி கிளிண்டன் உட்பட சில முக்கிய அதிகாரிகளுக்கு ஆயரின் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.