2010-01-29 15:26:36

மனித வியாபாரத்திற்குப் பலியாகுவோருக்காகச் செபிக்குமாறு கானடா ஆயர்கள் விண்ணப்பம்


சன.29,2010 கானடாவின் வான்கூவரில் வருகிற பிப்ரவரி 12 முதல் 28 வரை நடைபெறவிருக்கின்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது மனித வியாபார விவகாரம் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும் என்று அந்நாட்டு ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தப் பெரிய விளையாட்டுகளின் அமைப்புகள், பாலியல் இன்பத்திற்கென மனிதர் விலை கொடுத்து வாங்கப்படுவதற்கான சூழலை உருவாக்குகின்றன என்று தங்களது மேய்ப்புப்பணி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், மனித வியாபாரத்திற்குப் பலியாகுவோருக்காகச் செபிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

கானடாவில் விபச்சாரம் சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை எனக்கூறும் ஆயர்களின் அறிக்கை, கத்தோலிக்கர் இந்த மனித வியாபாரம் குறித்த விழிப்புணர்வைக் கொண்டிருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

உலகில் 24 இலட்சம் பேர் மனித வியாபாரத்திற்குப் பலியாகின்றனர். இவர்களில் 13 இலட்சம் பேர் பாலியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர் என்று உலக தொழில் நிறுவனம் கணக்கிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.