2010-01-29 15:22:01

திருத்தந்தை : ரோமன் ரோட்டாவை நீதி, பிறரன்பு, உண்மை ஆகியவை வழிநடத்த வேண்டும்


சன.29,2010 ரோமன் ரோட்டா எனப்படும் வத்திக்கான் உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற அலுவலகர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நீதி, பிறரன்பு, உண்மை ஆகிய கூறுகள் இந்நிறுவனத்தை வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிறுவனத்தின் பணிகள் நீதியை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, நீதி நிர்வாகத்தில் அடிப்படையானது நீதியின் பணியாகும், இந்தப் புண்ணியப் பண்பானது, கடவுளுக்கும் அயலாருக்கும் அவரவருக்குரியதைத் தருவதற்கான உறுதியான விருப்பத்தை உள்ளடக்கியதாகும், திருச்சபைக்குள்ளும் மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களை மீண்டும் கண்டுணர்வதற்கு இது மிகவும் முக்கியமானதாகும் என்று திருத்தந்தை கூறினார்.

திருச்சபையின் சட்டரீதியான செயல்பாடுகளின் நோக்கம் ஆன்மாக்களின் மீட்பு என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

எந்த ஒரு சூழலிலும், விசாரணையும் தீர்ப்பும் நீதியோடு அடிப்படையான தொடர்பைக் கொண்டுள்ளன என்றும் இவை மனித மற்றும் கிறிஸ்தவப் புண்ணியங்களால், குறிப்பாக விவேகம் மற்றும் நீதியால் நிறைந்திருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

சட்டத்துறையில் பணிசெய்யும் அனைவரும் அவரவர் பணியின் தரத்திற்கு ஏற்றவாறு நீதியால் வழிநடத்தப்பட வேணடும், ஆதாரங்களின் உண்மையின்படி செயல்பட வேண்டும் என்றும் வத்திக்கான் உச்சநீதிமன்ற உறுப்பினர்களிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.