2010-01-27 15:23:48

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


சன. 27. கடந்த சில வாரங்களாக, மத்திய காலத்தின் கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்து மறைபோதகம் வழங்கி வரும் திருத்தந்தை 16 ம் பெனெடிக்ட், இவ்வாரமும் அதன் தொடர்ச்சியாக புனித பிரான்சிஸ் அசிசி குறித்து எடுத்தியம்பினார்.



திருச்சபை வரலாற்றில் மிக முக்கியத்துவம் நிறைந்தவர்களுள் ஒருவர் புனித பிரான்சிஸ் அசிசி. அவரின் வாழ்வு, மனமாற்றம், கிறிஸ்துவுக்கும், ஏழைகளுக்கும், துன்புருவோருக்குமான அவரின் முழுமையான அர்ப்பணம் போன்றவை குறித்த வரலாறு மிகவும் பிரபலமானது. புனிதத்துவத்தில் திருச்சபையைப் புதுப்பிப்பதற்கும், நற்செய்தியை அறிவிப்பதற்கும் என புனித கிளாரா உள்ளிட்ட தன் சீடர்களையும், தன் உடன் உழைப்பாளர்களையும் கொண்ட இயக்கத்தைத் துவக்கிய பிரான்சிஸ் அசிசி, அவ்வியக்கத்தின் அங்கீகாரத்தை திருத்தந்தை மூன்றாம் இன்னசென்டிடம் கோரினார். சிலுவையில் அறையுண்ட இயேசுவைப் போன்ற புனித பிரான்சிஸ் அசிசியின்  தன்னுருவாக்கம், La Verna எனுமிடத்தில் ஐந்து காயங்களைத் தன்னுடலில் பெற்றதில் உச்சத்தை அடைந்தது. கிறிஸ்துவின் உண்மை பிரசன்னத்தின் அருளடையாளமான திருநற்கருணை மீதான பெரும் பக்தியிலும், இறைவனின் கைவண்ணமான படைப்பின் மீதான அசிசியின் அன்பிலும், அவரின் ஆழமான பக்தி தன் வெளிப்பாட்டைக் கண்டது. உள்மன மற்றும் வெளிப்படையான ஏழ்மையைத் தழுவுவதன் வழி எண்ணற்றோர் இயேசுவைப் பின்பற்றி நடக்க, பிரான்சிஸ் அசிசியின் வாழ்வும் போதனைகளும் தூண்டுதலாக இருந்துள்ளன. இப்புனிதரின் எடுத்துக்காட்டானது, கடவுள் மற்றும் அவரின் திருச்சபை மீதான மேலும் கூடிய அன்பை நமக்குக் கற்பிப்பதாக. மேலும், கிறிஸ்துவைப் போல் வாழ்வதிலும், புனிதத்துவத்தை நோக்கிய தேடலிலும் கிட்டும் அளவிட முடியா ஆன்மீக மகிழ்வு குறித்தும், புனித பிரான்சிஸ் அசிசியின் எடுத்துக்காட்டு நமக்குக் கற்பிப்பதாக.

இவ்வாறு தன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இப்புநதனன்று உலக நினைவு தினம், அதாவது, நாத்சி வதைப்போர் முகாமில் கொல்லப்பட்டோர், அந்த யூதர்களைக் காப்பாற்ற தங்கள் வாழ்வையே பணயம் வைத்தோர் என பல்லாயிரக்கணக்கானோரை நினைவு கூரும் தினம் சிறப்பிக்கப்பட்டதை எடுத்துரைத்தார். சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர் 1945 ல் சனவரி 27 ஆம் தேதி Auschwitz வதைப்போர் முகாம் திறக்கப்பட்டு, எஞ்சிய சில யூதர்கள் விடுவிக்கப்பட்டதையோட்டி அதே நாளில் இத்தினம்,  நாத்சி படுகொலைகளுக்கு உள்ளானவர்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் நினைவு கூரப்படுகின்றது. இத்தகைய ஒரு குருட்டு  இனவெறி / மதவெறி மீண்டும் இடைபெறாவண்ணம் இறைவன் மக்கள் மனங்களை ஒளிவிப்பாராக என வேண்டிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.



இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார். 








All the contents on this site are copyrighted ©.