2010-01-26 14:51:58

விவிலியத் தேடல்:


RealAudioMP3 விவிலியத் தேடலில் இயேசு ஆற்றிய பல புதுமைகளைப் பற்றி பகிர்ந்து வந்திருக்கிறோம். இன்று யோவான் நற்செய்தி 9ஆம் அதிகாரத்தில் பார்வையற்ற ஒருவரை இயேசு குணமாக்கும் புதுமையைச் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.
இந்தப் புதுமையில் ஒரு தனி சிறப்பு என்னவெனில் யோவான் இந்த புதுமையை ஒரு இறையியல் பாடமாக நம்முன் வைக்கிறார். இயேசு நிகழ்த்தும் இந்தப் புதுமை முதல் ஏழு திருவசனங்களில் முடிவடைகிறது. ஆனால், புதுமையைத் தொடர்ந்து 34 இறை வசனங்கள் வழியாக யோவான் நாம் அனைவரும் அகம், புறம் இவற்றில் பார்வை பெறுவது, பார்வை இழப்பது என்பன குறித்து ஒரு இறையியல் பாடமே நடத்துகிறார். வகுப்பறையாக, வழக்காடு மன்றமாக அமையும் இந்த அதிகாரம் இந்த ஒரு விவிலியத் தேடலில் முடியாது. இதன் முதல் பகுதியை, அதாவது இயேசுவுக்கும் சீடருக்கும் நடக்கும் ஒரு சிறு உரையாடல், அதைத் தொடர்ந்து பார்வையற்றவர் குணமாவது என்ற இந்த இரு எண்ணங்களை மட்டும் இந்த விவிலியத் தேடலில் சிந்திப்போம். இந்த முதல் பகுதியை யோவான் நற்செய்தியில் வாசிக்கக் கேட்போம்.
யோவான் 9 1-7
இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். “ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது. நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி” என்றார். இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, “நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்” என்றார். சிலோவாம் என்பதற்கு ‘அனுப்பப்பட்டவர்’ என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.

இயேசுவும் சீடர்களும் நடந்து செல்லும் போது, பார்வையற்ற அந்த மனிதரைப் பார்க்கின்றனர். சீடர்களிடமிருந்து கேள்விகள் பறக்கின்றன. உடலளவில் குறையுள்ள ஒருவரைப் பார்த்ததும் நம் மனதில் "ஐயோ, பாவம்." என்ற எண்ணம், உணர்வு எழும். நாம் சொல்லும் 'பாவம்' என்ற சொல் பரிதாப உணர்வுகளை, அல்லது இரக்கத்தை வெளிப்படுத்தும் சொல். ஆனால், தமிழில் பாவம் என்ற சொல்லுக்குள் மற்றொரு அர்த்தமும் புதைந்திருக்கிறது. நாமோ பிறரோ புரியும் பாவம்.
யாருடைய பாவமோ, இவர் இந்த நிலைக்கு வந்துவிட்டார் என்ற கேள்வியைச் சீடர்கள் இயேசுவிடம் கேட்டார்கள். “ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?”

மனித குலம் துவங்கியதிலிருந்து நம்மை தேட வைத்துள்ள கேள்விகள் இவை.
ஏன் துன்பம்? அதுவும் மாசற்றவர்கள் ஏன் துன்பப்பட வேண்டும்?
துன்பம் என்பது ஒரு பெரும் மறையுண்மை. அவ்வளவு எளிதாக அதற்கு விளக்கம் சொல்வது முடியாது. துன்பத்தை நான் எப்படி புரிந்து கொள்கிறேன் என்பதை முடிந்தவரை விளக்க முயல்கிறேன். இது முழு விளக்கமும் அல்ல. இது ஒன்று தான் விளக்கம் என்பதுமல்ல.  இதுவும் ஒரு விளக்கம். அவ்வளவுதான்.
துன்பத்தை இரு வகையாகப் பார்க்கலாம். காரணம் உள்ள துன்பங்கள், காரணமற்ற துன்பங்கள். ஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி, ஒரு மரத்தின் மீது மோதி அடிபடுகிறார். அந்த அடி, வலி, அந்தத் துன்பத்தை அவராகத் தேடிச் சென்றார் என்று சொல்லலாம். அவரது துன்பத்திற்கு காரணம் உண்டு.
அதே நிகழ்வில், அந்த மனிதர் மரத்தில் மோதுவதற்கு பதில் சாலையோரம், platformல் நடந்து கொண்டிருந்த என் மீது மோதி, நான் கீழே விழுந்து அடிபட்டால்... நான் அடைந்த விபத்துக்கு காரணம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. நான் அந்த நேரத்தில், அந்த இடத்தில் இருந்தேன் என்பது காரணமாகி விடுமா? ஆனால், நீ ஏன் அந்த நேரத்துல அங்கே இருந்த? என்று கேட்பவர்களும் உண்டு. அல்லது, ஏதோ பெரிய விளக்கம் சொல்வது போல் "உனக்கு அந்த நேரத்துல அப்படி நடக்கணும்னு இருந்தது." என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.
காரணம் இல்லாமல் நம்மை வந்தடையும் துன்பங்களுக்கு இப்படி எதையாவது சொல்ல முற்படுகிறோம்.
முன் வினைப் பயன் என்று சொல்வோம்.
நம்மைச் சோதிக்கக் கடவுள் அனுப்பிய துன்பம் என்போம்.
அல்லது அந்த சீடர்கள் சொன்னது போல், நம் மூதாதையர் செய்த குற்றம் என்போம்.

வாழ்வில் இன்பமும் துன்பமும் வருகின்றன. கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலில் வரும் வரிகள் இவை: "ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும். மனித இன்ப துன்பம் எதிலும் கேள்வி தான் மிஞ்சும்." இன்பம் வரும் போது, அதிகம் கேள்விகள் எழுவதில்லை. எதிர்பாராத மகிழ்ச்சி நம்மை திக்கு முக்காட வைக்கும் போது, ஒரு சில கேள்விகள் எழும். ஆனால், துன்பங்கள் சின்னதோ, பெரியதோ, கூடவே கேள்விகளைக் கூட்டமாய் இழுத்துக் கொண்டு வரும்.
காரணத்தோடு வரும் துன்பம், அறிந்து வரும் துன்பம் இவைகளைத் தாங்கிக்கொள்ள முடியும். அறியாமல் வரும், காரணம் இல்லாமல் வரும் துன்பத்தைத் தாங்கிக் கொள்வது கடினம்.

உடலில் படும் அடிகளோடு ஒப்புமைப்படுத்தி இந்த துன்பங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். உடலில் படும் அடிகளில் ஒரு சில நாம் எதிர்பாக்கும் இடத்திலிருந்து, எதிர்பார்க்கும் நேரத்தில் வரும். இந்த அடிகளை நாம் எதிர்பார்ப்பதால், அந்த அடிகள் விழும் இடங்களில் உள்ள தசைகள் ஏற்கனவே அடியைத் தாங்கிக் கொள்ளும் வகையில் கடினமாகிவிடும். குத்துச் சண்டை பயிற்சியில் சில நேரங்களில் உடலில் ஒரு சில பகுதிகளில் யாரையாவது குத்தச் சொல்லி அவற்றைத் தாங்கிக்கொள்ள பழுகிக் கொள்கிறோம் இல்லையா? எதிர்பார்க்கும் அடிகளுக்கு உடல் தயாராகி விடுகிறது.
எதிர் பாராமல் விழும் அடிகள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. நாம் ஏதோ ஒரு நினைவில் நடந்து போய் கொண்டிருக்கும் போது, பின்னிருந்து ஒருவர் முற்றிலும் எதிபாராத நேரத்தில் முதுகில் அடித்தால், அந்த அடி சக்தி வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். காரணம், அந்த அடிக்கு உடல் தயாராக இல்லை. அதேபோல் எதிர்பார்க்கும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள மனம் தயாராகி விடுகிறது. தேர்வு சரியாக எழுதவில்லை. அடுத்த வாரம் வரப்போகும் முடிவுகள் சரியாக இருக்காது என்று என் மனம் தயாராகி இருக்கும்.
எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத வடிவங்களில் வரும் துன்பங்கள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. கேள்விகளை எழுப்புகின்றன. கேள்விகளை எழுப்புவதும் மனதை  உறுதி படுத்தும் வழிகளாக இருக்கலாம். ஆனால், கேள்விகளிலேயே தங்கி விட முடியாது. சீடர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இயேசு அளித்த பதில், அதைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட செயல் ஒரு சில சிந்தனைகளை எழுப்புகின்றது. 
Harold Kushner என்ற யூத குரு ஒருவர் எழுதிய புத்தகம்: When Bad Things Happen to Good People. “பொல்லாதவைகள் நல்லவர்களுக்கு நடைபெறும்போது” என்ற இந்த நூல் வாழ்வில் நாம் சந்திக்கும் பல வகை துன்பங்களை ஆராய்கிறது. Kushnerன் மகன் ஜோஷ்வாவுக்கு (Progeria) என்ற ஒரு புதிரான வியாதி. பலகோடி குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே வரும் வியாதி. அதாவது இந்தக் குழந்தை வெகு சீக்கிரம் வயதாகி போகும். ஜோஷ்வா ஒரு வயதை எட்டிய போது, ஒரு 10 அல்லது 15 வயதுள்ளவரைப் போல் இருந்தான். வெகு சீக்கிரம் முதுமை அடைந்தவரைப் போல் மாறி, 14 வயதில் அந்தச் சிறுவன் இறந்தான். இந்த வியாதிக்கு மருத்துவமே கிடையாது. இந்தத் துன்பத்தை அனுபவித்த Kushner தன் வாழ்வில் எதிர்பாராமல், எந்த காரணமும் இல்லாமல் வந்த இந்த துன்பத்தை தான் எப்படி சமாளித்தார் என்று கூறி, இது போல் துன்பங்களைச் சந்திக்கும் பலருக்கும் இந்தப் புத்தகம் உதவும் என்ற நம்பிக்கையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஒருவருக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக்கை உதாரணமாகச் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்கிறார் Kushner. அவரது விளக்கமும் இயேசு சீடர்களுக்குத் தந்த பதிலும் ஒரே சிந்தனையில் இருப்பதால், அந்த உதாரணத்தைக் கூறுகிறேன். ஒரு பெரிய நிறுவனத்தில் பணி புரியும் ஒருவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக். மருத்துவ ரீதியில் இந்த அட்டாக்கின் காரணங்கள் பல வகையில் ஆராயப்பட்டு, அதற்கான தீர்வுகளும் காணப் படுகின்றன. அதே நேரத்தில் அவரது மனதில், அவரது குடும்பத்தினர் மனங்களில் பல்வேறு மற்ற கேள்விகள் எழும். எல்லாக் கேள்விகளையும் கூட்டி, கழித்து, வடிகட்டி... கடவுள் பக்தி உள்ளவர்கள் என்றால், இறுதியில் ஒரு கேள்வியை அவர்கள் எழுப்புவார்கள். "கடவுள் ஏன் இந்த ஹார்ட் அட்டாக்கைக் கொடுத்தார்? என்பது தான் அந்த கேள்வி. கடவுளையும், துன்பத்தையும் இணைத்துப் பார்ப்பது நமக்கு எளிதில் தோன்றும் ஒரு எண்ணம். இந்தக் கேள்வியை Kushner ம் எழுப்புகிறார். பதிலும் சொல்கிறார்.
அவர் சொல்லியுள்ள பதிலை ஓரளவு மொழிபெயர்க்க முயல்கிறேன். அவருக்கு வந்த ஹார்ட் அட்டாக் கடவுளிடமிருந்து வரவில்லை. மாறாக அந்த அட்டாக் கொடுத்த அதிர்ச்சியில் அவர் பல மாற்றங்களை வாழ்க்கையில் மேற்கொண்டால், அந்த மாற்றங்கள் கடவுளிடம் இருந்து வந்தன என்று சொல்லலாம். ஹார்ட் அட்டாக் வந்தவர், சிகரெட் குடிப்பதையோ மது அருந்துவதையோ நிறுத்த எடுத்த முடிவு, தன் வேலையை மட்டுமே நினைத்து வாழ்ந்தவர், தன் நலம், தன் குடும்பம் இவைகளை நினைக்க தீர்மானித்தது... இந்த முடிவுகள், மாற்றங்கள் கடவுளிடமிருந்து வந்தன. ஏனெனில் இந்த ஒரு அட்டாக்கினால், அவருக்கு வாழ்வின் மையத்தை இறைவன் காட்டியுள்ளார். எது வாழ்வில் முக்கியம், முக்கியமில்லை என்பதை அந்த ஹார்ட் அட்டாக் அதிர்ச்சி அவருக்கு சொல்லித்தந்துள்ளது. ஏன் இந்த ஹார்ட் அட்டாக் என்ற கேள்வியிலேயே அவரும் அந்தக் குடும்பமும் தங்கிவிட்டால், வாழ்க்கையைத் தொடர்ந்திருக்க முடியாது. ஏன் என்ற விளக்கம் தேடும் கேள்விகளை ஒதுக்கி வைத்து விட்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திப்பது நல்லது. அதுதான் அந்த துன்பத்திற்கான ஆக்கப்பூர்வமான ஒரு தீர்வு.கேள்விகளைக் கேட்ட சீடர்களிடமும் இயேசுவின் பதில் இந்த பாணியில் தான் அமைந்தது. யாருடைய பாவமென்பது இப்போது முக்கியமல்ல. அந்த பார்வையற்றவர் பார்வை பெற வேண்டும். அதன் வழி கடவுளின் செயல் வெளிப்பட வேண்டும். அதற்கான வழியை பார்ப்போம் என்று கூறி, இயேசு செயலில் இறங்கினார். அவருக்குப் பார்வை அளித்தார். தொடர்வோம் நம் தேடலை.







All the contents on this site are copyrighted ©.