2010-01-23 14:44:29

இலங்கையில் இடம் பெறும் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படுமாறு ஆம்னஸ்டி இன்டெர்நேஷனல் அழைப்பு


சன.23,2010 இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் காலத்தில் பரவலாக இடம் பெறும் மனித உரிமை மீறல்களும், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க வழி செய்வதும் நிறுத்தப்படுமாறு ஆம்னஸ்டி இன்டெர்நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமைகள் கழகம் அழைப்புவிடுத்துள்ளது.

வருகிற செவ்வாயன்று இலங்கையில் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்புடைய வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்து வேட்பாளர்களுக்குமென வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் நடவடிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படவேண்டும் எனவும் கோரியுள்ளது.

திட்டமிட்ட கைதுகள், சித்ரவதைகள், காணாமற்போதல் போன்றவற்றை நிறுத்தவும், வாழ்வு மற்றும் பேச்சு சுதந்திரம் வழங்கப்படவும் வேண்டுமென அக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தற்சமயம் இலங்கையின் வட பகுதியில் பள்ளிக் கட்டிடங்கள் மற்றும்பிற தடுப்பு முகாம்களில் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எவ்வித விசாரணைகளுமின்றி இராணுவத்தால் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆம்னஸ்டி இன்டெர்நேஷனல் கூறியது.

இதற்கிடையே, அரசியல் தலைவர்களை கொலை செய்ய முயற்சித்தது உட்பட 600 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசுப் படையினருக்கும் இடையேயான இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அம்மனித உரிமைகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், இதனால் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மிகவும் அவசியமானதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மனித உரிமை மீறல் தொடர்பில் பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட வீடியோக் காட்சியின் நம்பகத் தன்மை தொடர்பில் இலங்கை அரசு வெளியிட்டு வரும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது







All the contents on this site are copyrighted ©.