2010-01-23 14:41:29

44 வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கானத் திருத்தந்தையின் செய்தி


சன.23,2010 கத்தோலிக்கத் திருச்சபையில் வருகிற மே மாதம் 16ம் தேதி சிறப்பிக்கப்படும் 44 வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கானத் திருத்தந்தையின் செய்தியை திருப்பீட சமூகத் தொடர்பு அவைத் தலைவர் பேராயர் Claudio Maria Celli தலைமையிலான குழு இச்சனிக்கிழமையன்று வெளியிட்டது.

“டிஜிட்டல் உலகில் குருவும் மேய்ப்புப்பணியும்:இறைவார்த்தைப் பணியில் புதிய ஊடகம்” என்ற தலைப்பிலான திருத்தந்தையின் இச்செய்தி, புதிய தொழிற்நுட்பத்தின் அதிவேகமான வளர்ச்சி, குறிப்பாக இணையதள வளர்ச்சி குருக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சிறந்த வாய்ப்பாக இருக்கின்றது என்று கூறுகிறது.

குருக்கள், புதிய தொழிற்நுட்ப ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் திருச்சபையின் வாழ்வில் ஈடுபடுத்தவும் இக்காலத்தவர் கிறிஸ்துவின் முகத்தைக் கண்டு கொள்ளவும் உதவ முடியும் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

ஊடகத் துறையில் பணியாற்றும் இருபால் துறவிகளுக்குச் சிறப்பான பொறுப்பு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ள திருத்தந்தை, தனிப்பட்டவர்களின் ஆன்மீகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறு கூறியுள்ளார்.

ஊடகத்துறையில் மனிதனின் மாண்பும் மதிப்பும் மதிக்கப்படும் கலாச்சாரத்தை ஊக்குவிக்குமாறும் திருச்சபை இன்றைய டிஜிட்டல் உலகில் கிறிஸ்தவ கலாச்சாரத்தை செயல்படுத்துவதற்கான வழிகளில் இதுவும் ஒன்று என்றும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.