சர்வதேச ஆயுத வியாபார உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திடுமாறு இந்திய ஆயர் பேரவையின்
நீதி மற்றும் அமைதி ஆணையம் அழைப்பு
சன.22,2010 ஆயுத வியாபாரத்திலும் ஆயுதப் பயன்பாட்டிலும் பொறுப்பான முறையில் ஈடுபடுவதற்குமென
இந்தியா, சர்வதேச ஆயுத வியாபார உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு இந்திய ஆயர் பேரவையின்
நீதி மற்றும் அமைதி ஆணையம் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில்
அமைதி மற்றும் ஆயுதக்களைவுக்காக உழைக்கும் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்திய ஆயர்
பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையச் செயலர் கப்புச்சின் அருள்தந்தை நித்ய சகாயம் அனுப்பியுள்ள
கடிதத்தில் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அஹிம்சாவில் நம்பிக்கை கொண்டுள்ள
இந்தியா இன்னும் ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருப்பது குறித்து அதில் அவர் சுட்டிக்
காட்டியுள்ளார். இந்தக் கையெழுத்து நடவடிக்கையில் இளையோரை ஈடுபடுத்துவதன் மூலம் பாராளுமன்ற
உறுப்பினர்களையும் சட்ட அமைப்பாளர்களையும் தூண்டுவதற்கு முடியும் என்றும் அக்கடிதம் குறிப்பிடுகின்றது.
இது தொடர்பாக இந்த ஆணையம் இந்தியாவின் சுமார் இரண்டாயிரம் கல்லூரிகளைத் தொடர்பு கொண்டுள்ளதாகச்
சொல்லப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவில் அணுசக்தி நாடுகள் என நோக்கப்படும் இந்தியாவும்
பாகிஸ்தானும் சர்வதேச ஆயுத வியாபார உடன்பாட்டில் இன்னும் கையெழுத்திடாத 19 நாடுகளுள்
உள்ளடங்கும்.