2010-01-18 15:19:27

வாரம் ஓர் அலசல்


ஒருவரை அடையாளம் காட்டுவது எது? சன.18,2010 தமிழகத்தில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் புகழ் பெற்ற ஒருவர், ஒருநாள் பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தாராம். அப்பொழுது ஒருவர் வந்து அவரிடம், ஐயா, வெளியே புறப்பட்டுட்டீங்க போல, எனது கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப் போங்க, ஏன்னா எனக்கு உடனே பதில் தெரிஞ்சாகணும், இல்லாட்டினா மண்டை காய்ந்துவிடும் என்றாராம். சரி சொல்லுங்க என்றதும், ஐயா தேர்தல்ல, ஒவ்வொரு கட்சிக்காரரும் வந்து, உங்க ஓட்டு எங்களுக்குத்தான் என்று சொல்லி கையில் பணத்தையும் திணிச்சுட்டுப் போறாங்க, இப்ப யாருக்கு ஓட்டுப் போடணும்னு தெரியலை, அதான் உங்கள்ட்ட ஆலோசனை கேட்க வந்தேன் என்றாராம். சரி உங்க மனசுல யாரை நினைச்சு இருக்கீங்க என்று அவர் கேட்டதும், ஐயா, நான் ஏற்கனவே ஒரு கட்சியை மனசுல தீர்மானுச்சுட்டேன். அக்கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்றதும், அப்புறம் எதுக்கு என்கிட்டே கேட்குறீங்க என்றாராம். சும்மா, ஏதாச்சும் பேசணும்னு வந்தேன் என்றாராம் கேள்வி கேட்டவர். அப்பொழுது அவரை வழியனுப்ப வந்த அவரது வீட்டுக்கார அம்மா, ஏங்க இவருக்குப் பேச மட்டும்தாங்க தெரியும் என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாராம்.
அன்பர்களே, சிலர், நமக்குத் தெரிந்த தொழில் பேச்சுதான் என்று சொல்லி பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் எதைப் பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? எவ்வளவு பேச வேண்டும்? எங்கு, எப்போது பேச வேண்டும்? யாரிடம், எதைப் பேச வேண்டும்?, யாருக்காகப் பேச வேண்டும்? என்பன போன்ற நெறிமுறைகளை உணர்ந்து பேசுபவர்களைக் காண்பது அரிதாகிவிட்டது! இப்போது தமிழர் திருநாளையும் தமிழ்ப் புத்தாண்டையும் முடித்துள்ளோம். இவ்விழாக்களுக்குப் பலர் சொன்னதையே சொல்லி வாழ்த்தியதைக் கேட்டிருப்பீர்கள். நீங்களுமே, உங்களுக்கு எமது இனிய பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியிருப்பீர்கள். ஏன் ஆங்கில புத்தாண்டு தினத்தன்றும், ஹேப்பி நியு இயர் (Happy New Year) என்றுதான் வாழ்த்தினோம். இங்கு இத்தாலியில் எல்லாருமே, Tanti Auguri Buon Anno என்றுதான் வாழ்த்தினார்கள். மொழிகளில் வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லாதது போன்று, கிளிப்பிள்ளைகள் போல, வாழ்த்தி வருகிறோம். மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கு நம் வாயிலிருந்து சொற்கள் குறைவாக வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
'எப்படிப் பேச வேண்டும்?' பேச்சில் என்ன வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து நம் பெரியோர்கள் நிறையவே பேசியிருக்கிறார்கள். இனியவை கூறல், வாய்மை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, சொல்வன்மை என்று பல அதிகாரங்களில் வள்ளுவர், வாக்கை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி விளக்கியிருக்கிறார். இப்படிச் சொல்லும் போது, அண்மையில் இணையதளத்தில் வாசித்த ஒரு நிகழ்ச்சியும் இந்த உரோமையில் சாலை ஒன்றில் பார்த்த ஒரு நிகழ்வும் நினைவுக்கு வருகின்றன. ஒரு பெண், முகத்தை மூடிக்கொண்டு குப்புற விழுந்து கிடந்தது. அப்பெண்ணுக்கு முன்னால் துணி விரிக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த அட்டையில், நான் ஏழை. வேலை கிடையாது. வேலை செய்யவும் முடியாது. உதவி செய்யுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. அந்தத் துணியில் காசுகளே விழவில்லை. மற்றொரு சாலையில் கண் தெரியாத ஒருவர் ஓர் அறிவிப்புப் பலகையை முன்னால் வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தார். அதில், ''இன்று மிக அழகான நாள். ஆனால், அதை என்னால்தான் பார்க்க இயலாது' என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வாசகங்களைப் பார்த்த போது The story of a sign என்ற குறும்படக் கதை நினைவுக்கு வந்தது. ஒருவேளை அதைப் பார்த்த யாரோ ஒருவர் இதனை எழுதியிருக்க்க்கூடும் என்றுகூட நினைக்க வைத்தது. அந்தப் படத்தில், தெருவோரத்தில் கண் தெரியாத ஒருவர் தர்மம் கேட்டுக் கொண்டிருப்பார். அவர் முன் வைக்கப்பட்டிருந்த அட்டையில், 'ஐயா, எனக்குப் பார்வை கிடையாது. உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்' என்று எழுதப்பட்டிருக்கும். அவ்வழியே எத்தனையோ கால்கள் கடந்து செல்லும். ஆனால் யாரும் காசு போடமாட்டார்கள். இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன், அந்த அட்டையைத் திருப்பி, ''இன்று மிக அழகான நாள். ஆனால், அதை என்னால்தான் பார்க்க இயலாது' என்று நேர்மறை வார்த்தைகளை எழுதி வைப்பான். வெகு சீக்கிரம் அவரது பிச்சைக் குவளை நிரம்பி விடும். கண்தெரியாதவர்க்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.
எவ்வளவோ “சிம்பனி”களை உருவாக்கிய இசைமேதை லுட்விக் பீத்தோவன் (Ludwig van Beethoven) ஒருமுறை தமது இசை நிகழ்ச்சி ஒன்றை வழங்குவதற்காக வெளியூர் சென்றார். முதல் நாள் ஒத்திகை பார்ப்பதற்காக இசைக்குழுவினர் கூடினர். அடுத்த நாள் நடக்கப்போகிற இசை நிகழ்ச்சிக்காக முதல்நாளே கலையரங்கம் களைகட்ட ஆரம்பித்தது. இந்த மேதையின் வழிகாட்டுதலில் இசைவெள்ளம் அரங்கத்தை நிறைக்கத் தொடங்கியது. ஆனால் அந்த அரங்கின் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருந்த தச்சு வேலையால் தட்.. தட்... என்ற சத்தம் வந்து கொண்டிருந்தது. இசைக் குழுவில் இருந்தவர்கள் பொறுமை இழந்தார்கள். தமது குழுவினரின் தடுமாற்றத்தைக் கவனித்த இசைமேதை உடனே ஒத்திகையை நிறுத்தினார். தச்சு வேலை செய்கிறவர்கள் பக்கம் தலையைத் திருப்பி, ஐயா, எங்களின் இசை உங்களுக்குத் தொந்தரவாக இருக்கிறதா என்று கேட்டார். ஆணியை அடிக்கக் கையை ஓங்கியவர்கள், உடனே நிறுத்தினார்கள்.
ஓர் உண்மையை உணர்த்துவதற்குக்கூட சரியான வார்த்தைகள் தேவைப்படுகின்றன. எதை, எங்கு, எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொன்னால் எவ்வளவு பெரிய காரியங்களையும் சாதித்து விடலாம் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். ஏன், அண்மையில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படத்தில்கூட இதையொத்த ஒரு நிகழ்வைப் பார்க்க முடிகின்றது. வகுப்பில் பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருப்பார். வெளியில் தச்சு வேலை செய்பவர்கள் எழுப்பும் ஒலி பாடம் நடத்துவதற்குத் தொந்தரவாக இருக்கும். அதனால் பேராசிரியர் வகுப்பறை சன்னல்களை மூடுவார். அதனால் வகுப்பறையில் காற்று இல்லாமல் சிலர் சங்கடப்படுவர். ஆனால் கதாநாயகன் சன்னலைத் திறந்து, வெளியில் வேலை செய்பவர்களிடம் இதமாகச் சொல்வார். தச்சுவேலை சத்தம் நின்றுவிடும்.
சரியான, கனிவான வார்த்தைகள் நம்மை மாற்றிவிடும் என்பதில்தான் எத்தனை உண்மை இருக்கின்றது. ஒருவரிடம் இருக்கின்ற குறையைச் சொல்வதற்குக்கூடச் சரியான வார்த்தைகள் வேண்டும். அன்பர்களே, நம்மை மாற்றிக் கொள்வதற்குச் சரியான வார்த்தைகள் மிகவும் முக்கியம். இந்த வார்த்தைகள் தரும் நம்பிக்கை அலாதியானது. கீழே விழுந்து விடும் குழந்தையைத் தூக்கித் தாய் சொல்லும் வார்த்தைகள் அக்குழந்தைக்கு விழுந்ததால் ஏற்பட்ட வலியையே இல்லாமல் ஆக்கி விடுகின்றன. நிலநடுக்கத்தால், பெருவெள்ளத்தால், பல இடர்களால் மக்கள் கஷ்டப்படும் போது அவர்கள் அருகில் ஆறுதலாக அமர்ந்து நாலு வார்த்தைகளை இதமாகச் சொன்னால் அதுவே பாதித் துன்பத்தை அகற்றி விடும். தமிழகத்தில் சுனாமி நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட பலர் இதேமாதிரியான அனுபவங்களைப் பெற்றதாகப் பகிர்ந்து கொண்டது ஞாபகத்திற்கு வருகிறது. மருத்துவர் தனது நோயாளியிடம், 'உனக்கு ஒன்றும் இல்லை. நீ நலமாக இருக்கிறாய்!' என்று சொல்லும் சொற்கள், எந்த மருந்தையும்விட வலிமையானது. ஆசிரியப் பணியாற்றிய வருடங்களில் எத்தனையோ மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு எமது வார்த்தைகள் உதவியிருக்கின்றன என்பது சொந்த அனுபவமும்கூட. நேயர்களே நீங்கள்கூட உங்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் திருப்பிப் பார்க்கும் பொழுது அம்மாவோ அப்பாவோ மாமாவோ பள்ளி ஆசிரியரோ இப்படி யாராவது ஒருவரது சில வார்த்தைகள் தந்த ஊக்கமும் நம்பிக்கையும்தான் உங்களை உயர்த்தியிருக்கிறது என்பதை உணருவீர்கள். அதுபோலவே, சிலரின் கடுஞ்சொற்களும் உங்களைப் பாதித்திருக்கலாம்.
ஆம். சொற்களால் வாழ வைக்கவும் முடியும், சாகடிக்கவும் முடியும். 'நாம் பேசிய சொற்கள் நமக்கு எஜமானர்கள்; பேசாத சொற்களுக்கு நாம் எஜமானர்கள்' என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். வீசும் அம்பும் சொல்லும் சொல்லும் அதனதன் பயனை அறுவடை செய்துவிட்டுத்தான் திரும்பும். ஆத்திரத்திலும் அவசரத்திலும் அள்ளி இறைக்கும் சொற்கள், கேட்பவரின் உயிரைக் குடிக்கவும் செய்கின்றன. வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவன், பேச்சைக் குறைப்பான்; கவனத்தை செயலில் காட்டுவான் என்பார்கள். சொற்களை அலட்சியமாகப் பயன்படுத்தும் மனிதன், சுற்றியுள்ள மனிதர்களை, இயற்கையை, இறைவனை, தன்னை உற்று நோக்கத் தவறி விடுகிறான்.
சொல்லை அறிவதும், பயன்படுத்துவதும் ஒரு கலை. எனவே, சொற்களுக்குள் மாட்டிக் கொள்ளாமல், சொற்களை ஆளும் கலையை அறிய வேண்டும். வாரம் ஒரு முறையோ அல்லது ஒரு நாளில் சில மணி நேரமோ, மௌன விரதம் இருக்கப் பழகி, சொற்களின் மதிப்பை அறிய முயற்சிக்க வேண்டும். 'பேச்சைக் குறைப்பதே யோகத்தின் முதல் படி' என்கிறார் பதஞ்சலி மகரிஷி. பேச்சைக் குறைத்தால்தான் மனதை உள்முகமாகத் திருப்ப முடியும் என்கிறார்கள் யோகிகள்.
பெரியோர்கள், பிறரது குணங்களையே பேசுவர்; குற்றங்களைப் பெரிதாகச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். வீண் பேச்சுகளால், நமது நேரம் மட்டுமல்ல, அருகில் இருப்பவர் நேரமும் வீணாகும். குறைவாகப் பேசி, நிறையக் கேட்க வேண்டும் என்பதற்காகவே, ஒரு வாயையும் இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறார் இறைவன்.
 ஆம். வார்த்தைகள் பலரது வாழ்க்கையைக் காப்பாற்றி இருக்கின்றன... மாற்றியிருக்கின்றன. வார்த்தைகளே ஒருவரை அடையாளம் காட்டுகின்றன.







All the contents on this site are copyrighted ©.