2010-01-18 14:58:12

திருத்தந்தையின் மூவேளை செப உரை


சன.18,2010 இவ்வாரம் துவங்கியுள்ள கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான எட்டு நாள் செபக் கொண்டாட்டம், கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான நம் உணர்வுகளுக்கு புத்துயிர் ஊட்டுவதாக இருக்கும் என்றார் திருத்தந்தை 16ம் பெனெடிக்ட்.
இஞ்ஞாயிறன்று ரோம் நகர் புனித ராயப்பர் பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களோடு இணைந்து நண்பகல் மூவேளை செபத்தை செபித்து உரையாற்றிய திருத்தந்தை, ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18 முதல் 25 வரை கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான செப வாரம் கொண்டாடப்படுவதைச் சுட்டிக் காட்டி, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அறிவிக்கும்போதுதான் கிறிஸ்துவின் நற்செய்தி பலனுடையதாயும், நம்பிக்கையுடன் பிறரால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாயும் இருக்கும் என்றார்.
கிறிஸ்தவர்களின் முழு ஒன்றிப்பிற்காக பங்குத் தளங்கள், துறவு சபைகள் கிறிஸ்தவ அமைப்புகள் என அனைவரும் தொடர்ந்து செபிக்கவேண்டும் எனவும் விண்ணப்பித்தார் பாப்பிறை.
மூவேளை செப உரையின் போது, ஹெயிட்டியில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கென உதவிகளுக்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
ஹெயிட்டி நாட்டின் நிலைகள் குறித்து அந்நாட்டின் திருப்பீடத் தூதுவர் பேராயர் Bernadito Auza மூலம் தொடர்ந்து தகவல்களைப் பெற்று வருவதாகவும், மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க பிறரன்பு நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் கூறினார் பாப்பிறை.உலக அகதிகள் மற்றும் குடியேற்றதாரர் தினம் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டது பற்றியும் குறிப்பிட்ட பாப்பிறை, நாடு விட்டு நாடு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இவ்வப்பாவி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுபவர்களாய் கிறிஸ்தவர்கள் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.