2010-01-16 13:17:52

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி நாட்டினருக்கு ஆதரவை வழங்குமாறு கத்தோலிக்கத் தலைவர்கள் அழைப்பு


சன.16,2010 நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி நாட்டினருக்கு, உலகினர் தங்களது ஆதரவை வழங்குமாறு பல நாடுகளிலுள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
பிரிட்டன் ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கையில், பிறரன்பு நிறுவனங்கள் மற்றும் நிவாரண அமைப்புகள் வழியாக பொது மக்கள் தங்களது உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இஞ்ஞாயிறன்று அனைத்து ஆலயங்களிலும் வாசிக்கப்படவிருக்கின்ற கியூபா நாட்டு ஹவானா பேராயர் கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அலமினோவின் அறிக்கையில், ஹெய்ட்டி மக்களுக்கென நாடு தழுவிய நிதி சேகரிக்கப்படுமாறு கேட்டுள்ளார். அத்துடன் கியூப மக்கள் தங்களிடம் எது இருக்கின்றதோ அதைத் தாராள மனத்துடன் வழங்குமாறு கூறியுள்ளார்.
இன்னும், ஒருமைப்பாட்டுணர்வில் வெளிப்படுத்தப்படும் அளப்பரிய அன்பானது, நிலநடுக்கத்தின் பாதிப்பால் துன்புறும் ஹெய்ட்டி நாட்டவர்க்கு ஒரே ஆறுதலாக அமையக்கூடும் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை Federico Lombardi கூறினார்.
"Octava Dies" என்ற வத்திக்கான் தொலைக்காட்சியில் இந்த கரீபியன் நாட்டில் இடம் பெற்ற நிலநடுக்கம் மற்றும் திருச்சபையின் உதவிகள் பற்றிப் பேசும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், ஹெய்ட்டி மக்களுக்கென, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பல அமைப்புகள் 56 கோடியே 20 இலட்சம் டாலர் நிதி உதவிக்கு விண்ணப்பித்துள்ளன.







All the contents on this site are copyrighted ©.