2010-01-15 15:26:55

ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கத்தோலிக்கர் தாராள உதவிகளை வழங்கி வருகின்றனர்- திருப்பீட பிறரன்பு அவை


சன.15,2010 ஹெய்ட்டியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச அளவில் உதவிகள் வருவது குறித்தத் தனது திருப்தியை ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்டுள்ளவேளை, அந்நாட்டில் திருச்சபையின் இடர்துடைப்புப் பணிகளுக்குப் பொறுப்பேற்று நடத்துமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் சி.ஆர்.எஸ் என்ற கத்தோலிக்க நிவாரண அமைப்பைக் கேட்டுள்ளது வத்திக்கான்.

கோர் ஊனும் என்ற திருப்பீட பிறரன்பு அவை வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கம் போல் இந்த இயற்கைப் பேரிடருக்கும் கத்தோலிக்கர் தங்கள் தாராள உதவிகளை வழங்கி வருகின்றனர் என்று கூறியுள்ளது.

இன்னும், இத்தாலியில் இம்மாதம் 24ம் தேதி ஞாயிறன்று அனைத்து ஆலயங்களிலும் எடுக்கப்படும் உண்டியல், ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்கென அனுப்பப்படும் என்று ஆயர்கள் அறிவித்துள்ளனர். கொரிய கத்தோலிக்கத் திருச்சபையும் அவசரகால உதவி அமைப்பு என்று ஒன்றை உருவாக்கி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதென அந்நாட்டு கர்தினால் Nicholas Cheong Jin-suk கூறினார்.

சுமார் ஐம்பது நாடுகள், தங்களது தன்னார்வப் பணியாளர்கள், பணம் மற்றும்பிற பொருட்கள் வழியாக உதவி வருகின்றன.

உலக வங்கியும் சுமார் பத்து கோடி டாலர் அவசர உதவிக்கு உறுதியளித்துள்ளது. உலக உணவு திட்ட அமைப்பு 15 ஆயிரம் டன் உணவுப் பொருட்களை விநியோகிக்க முயற்சித்து வருகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் ஒரு கோடி டாலருக்கு விண்ணப்பித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.