2010-01-15 15:24:46

திருச்சபையின் போதனைகள், சமய நம்பிக்கையாளர்கள் மற்றும் சமய நம்பிக்கையற்றவர்கள் என உண்மையைத் தேடும் அனைவருக்கும் உரியது – திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


சன.15,2010 கிறிஸ்தவர்கள் அனைவரும் இணைந்து விசுவாசத்திற்குச் சாட்சி பகர்வதை அடைவதே, ஒவ்வொரு காலத்திலும் திருச்சபையின் பணியில் முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருப்பீட விசுவாசகாப்புப் பேராயத்தின் ஆண்டு கூட்டத்தின் பிரதிநிதிகளை இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அனைத்து கிறிஸ்தவர்களும் ஒன்றிணைவதற்கு இந்தத் திருப்பேராயம் எடுத்து வரும் முயற்சிகளையும் குறிப்பிட்டார்.

புனித பத்தாம் பத்திநாதர் சகோதரத்துவ இயக்கம் திருச்சபையோடு முழுவதுமாக ஒன்றிணைவதற்குத் தடையாக இருக்கும் சில கோட்பாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இப்பேராயம் தன்னை தொடர்ந்து அர்ப்பணிக்கும் என்பதில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார் அவர்.

இந்தத் திருப்பீட விசுவாசகாப்புப் பேராயம் 2008ம் ஆண்டில் வெளியிட்ட மனித மாண்பு குறித்த போதனைகள் ஏடு பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இதில் வெளியான சில உயிரியல் நன்னெறி சார்ந்த கேள்விகள் பற்றியும், கிறிஸ்தவ விசுவாசம் உயிரியல் நன்னெறித் துறைகளுக்கு உதவ முடியும் என்றும் குறிப்பிட்டார்.

திருச்சபையின் போதனைகள், தனது விசுவாசிகளின் மனச்சான்றை உருவாக்குவதில் மட்டுமல்லாமல் உண்மையைத் தேடுவோர் மற்றும் விசுவாசத்திலிருந்து பிறக்கின்ற விவாதங்களுக்குச் செவிமடுக்க விரும்புவோரின் மனச்சான்றை உருவாக்குவதற்கும் உதவும் நோக்கத்தைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தூய பேதுருவின் வழிவருபவர் விசுவாசத்தைப் பேணிப் பாதுகாப்பதில் முதன்மையானவர், எனினும் பாப்பிறையும் திருச்சபையும் தனிப்பட்டவர்களின் மனச்சாட்சிகளை உருவாக்குவதற்கு உதவ விரும்புகின்றனர் என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.