2010-01-15 15:27:57

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வன்முறைகள் நிறுத்தப்படுமாறு பல்சமயத் தலைவர்கள் அழைப்பு


சன.15,2010 இலங்கையில் இம்மாதம் 26ம் தேதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வன்முறைகள் நிறுத்தப்படுமாறு அந்நாட்டு பல்சமயத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தேர்தல் கமிஷன் தலைவர், தேர்தலுக்கு முன்னான வன்முறைகளை நிறுத்துவதற்கு ஒன்றும் செய்ய இயலாத நிலையை எதிர்நோக்கும் வேளை, இந்தத் தேர்தல் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனையிலும் தாங்கள் நேரிடையாகத் தலையிட்டு அதனைத் தீர்த்து வைக்க இருப்பதாக சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த காலங்களில் தேர்தல் சார்ந்த எண்ணற்ற மீறல்களைக் காண முடிந்தது என்றும் ஊடகத்துறையினர் சுதந்திரமாக எழுதவும் வாக்காளர்கள் சுதந்திரமாக சிந்திக்கவுமான சுதந்திரம் குறைவுபடுகின்றது என்றும் கத்தோலிக்க குரு Jayalath Balagalla கூறினார்.

இலங்கையின் முக்கிய சமயத் தலைவர்கள், தேர்தல் சம்பந்தப்பட்ட மோதல்களைத் தடுப்பதற்கென, பல்சமய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர். தேர்தல் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் நிருபர் கூட்டத்தில் அண்மையில் விளக்கியுள்ளனர்.

எதிர்க்கட்சி ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று இப்புதனன்று துப்பாக்கி மனிதர்களால் தாக்கப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த வாரங்களில் இது போன்ற தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.








All the contents on this site are copyrighted ©.