2010-01-15 15:25:50

இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ள தங்கள் உறவுகளை மீட்பதற்கு மக்கள் உதவிக்காகக் கெஞ்சுகின்றனர்- ஹெய்ட்டிக்கானத் திருப்பீடத் தூதுவர்


சன.15,2010 நிலநடுக்கத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி நாட்டில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ள தங்கள் உறவுகளை அவற்றிலிருந்து மீட்பதற்கு மக்கள் உதவிக்காகக் கெஞ்சுகின்றனர் என்று அந்நாட்டிற்கானத் திருப்பீடத் தூதுவர் பேராயர் Bernardito Auza கூறினார்.

மக்கள், தெருக்களில் தூங்குவதாகவும் எங்கு செல்வதென்று புரியாமல் அலைவதாகவும், இன்னும் சிலர் சுனாமிக்குப் பயந்து குன்றுகளுக்குச் செல்வதாகவும் பேராயர் அவுசா தெரிவித்தார்.

இப்பேரிடரில் Port-au-Prince லுள்ள நான்குமாடி பேராயர் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதில் பேராயர் Joseph Serge Miot ஏற்கனவே இறந்துள்ளார். இன்னும், அந்த உயர் மறைமாவட்ட குருகுல அதிபர் பேரருட்திரு Charles Benoit, சான்சிலர் போன்றோரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் திருப்பீடத்தூதர் கூறினார்.

ஹெய்ட்டியில் இச்செவ்வாய் மாலை இடம் பெற்ற இந்நிலநடுக்கத்தில் ஐம்பதாயிரம் பேர்வரை இறந்திருக்கலாம், முப்பது இலட்சம் பேர்வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும் உண்மையான எண்ணிக்கை சொல்ல முடியவில்லை, மீட்புப்பணிகள் தொடருகின்றன என்று செய்திகள் வந்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.