2010-01-12 15:27:56

விவிலியத் தேடல்:


RealAudioMP3
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியை, திரைப்பட பாடலைக் கேட்டிருக்கிறோம். தை பிறக்கப் போகிறது. வழி பிறக்கும் என்றும் நம்புகிறோம். வழி பிறக்கும் என்று சொல்லும்போது, பல எதிர்பார்ப்புகள் மனதில் எழும். வழிபிறக்கும் என்றால், குழந்தை பிறக்கும்; படிக்கும் குழந்தை நன்கு தேர்ச்சி பெறும்; தேர்ச்சி பெற்று பட்டதாரியான மகனுக்கு, மகளுக்கு வேலை கிடைக்கும்; வேலை கிடைத்த கையோடு வாழ்க்கைத் துணையும் கிடைக்கும்; திருமணம் நடைபெறும்; வீடு கட்டும் வாய்ப்பு வரும்... வழிபிறக்கும் என்பதில்தான் எத்தனை, எத்தனை கனவுகள்?
தை பிறந்தால், வழிபிறக்கும் என்ற வார்த்தைகளை வைத்து இணையதளத்தில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் இந்த பழமொழியை "தை பிறந்தால், வலி பிறக்கும்." என்று பதிவு செய்திருந்தார். இன்னொருவர் அதைக் குறிப்பிட்டு, "நண்பா, அது வலி அல்ல, வழி." என்று திருத்தி எழுதி இருந்தார்.
நம் தமிழுக்கே உரிய உச்சரிப்பு பிரச்சனைகளில் ல, ள, ழ என்ற இந்த மூன்றும் பெரும் பிரச்சனைகள். தமிழில், வலி, வளி, வழி என்று மூன்று வார்த்தைகளும் உள்ளன. வலி = துன்பம், வளி = காற்று, வழி = பாதை. தை பிறந்தால், பாதை பிறக்கும் என்பதைத் தான் நம் பழமொழியில் சொல்லிவருகிறோம். ஆனால், அந்த வழி பிறக்க, வலிகளைத் தாங்க வேண்டும். வீசுகின்ற வளியை, சூறாவளியைச் சமாளிக்கவேண்டும். இவைகள் இல்லாமல், எளிதாக வழி பிறக்காது. அப்படி வலிகளைத் தாங்கி, சூறாவளிகளைச் சமாளித்து நாம் மேற்கொள்ளும் ஒரு முயற்சி நமது இல்லங்களில் நடைபெறும் திருமணங்கள். நாம் துவக்கத்தில் பட்டியலிட்ட கனவுகளிலேயே மிகக் கடினமான கனவுகள் என்று நமது பழமொழிகளும் உணர்த்தும் இரு கனவுகள்: "கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்." இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும், கல்யாணங்களும் நடக்கின்றன, வீடுகளும் கட்டப்படுகின்றன.
தை மாதத்தில் பல இல்லங்களில் திருமணங்கள் நடைபெறும். இந்தச் சூழலில் வரும் ஞாயிறன்று இயேசு கலந்து கொண்ட ஒரு திருமணத்தைப் பற்றி சிந்திக்க திருச்சபை நம்மை அழைக்கிறது. கானாவூரில் நடந்த அந்த திருமணத்தை அதில் இயேசு ஆற்றிய புதுமையை இன்றைய விவிலியத் தேடலிலும், வரும் ஞாயிறு சிந்தனையிலும் தொடர்ச்சியாகச் சிந்திப்போம். இன்று நாம் பகிர்ந்து கொள்வது: கானாவூர் திருமணம் - பாகம் ஒன்று.
கானாவூர் திருமணத்தில் கலந்து கொண்ட இயேசுவின் தாயை இந்த விவிலியத் தேடலில் முக்கியமாக சிந்திப்போம். இந்த சம்பவத்தைக் கூறும் யோவான் நற்செய்தியின் முதல் பகுதியை மட்டும் நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

நற்செய்தி: யோவான் 2: 1-3 
மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″ திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ″ என்றார்.

கானாவூரில் திருமணம். இயேசுவின் தாய் அங்கிருந்தார். இயேசுவும், சீடர்களும் அழைப்பு பெற்றிருந்தனர். இரசம் தீர்ந்துவிட்டது. இப்போது நாம் வாசித்த நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் இவை.
இயேசுவின் தாய் அங்கிருந்தார். இயேசுவின் தாய்க்கு அழைப்பு இருந்ததா? சொல்லப்படவில்லை. ஆனால், அவர் அங்கிருந்தார். இருந்தார் என்று சொல்லும் போது, திருமணத்திற்கு முன்பே அவர் அங்கு சென்றிருக்கக் கூடும் என்ற கோணத்திலும் சிந்திக்கலாம்.
ஒரு குடும்பத்தில் திருமணம் என்றால், மிக மிக நெருங்கியவர்கள் ஒரு சில நாட்களுக்கு முன்னரே அங்கு சென்று அந்தத் திருமண ஏற்பாடுகளில் கலந்து கொள்வார்கள், இல்லையா? நமது கிராமங்களில், சின்ன ஊர்களில், ஒரு சில தாராள மனம் கொண்ட நல்ல உள்ளங்கள் அந்த ஊரின் திருமணம் என்றால், அவர்கள் சொந்தம், சொந்தமில்லை என்பதையோ, அழைப்பு வந்தது வரவில்லை என்பதையோ கொஞ்சமும் சிந்திக்காமல், அந்த வீடுகளுக்கு உரிமையுடன் சென்று வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்வதைப் பார்த்திருக்கிறோம். இவர்களில் பலர், திருமணங்கள் முடிந்ததும், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதையும் பார்த்திருக்கிறோம். ஒரு நல்ல காரியம், மிக நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன், வேறு எந்த நோக்கமும் இல்லாமல், வேறு எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செயல் படும் இந்த அன்பு உள்ளங்கள் உலகத்தில் இன்றும் நடமாடுகிறார்கள். அதுவே நாம் சிந்திக்க வேண்டிய முதல் புதுமை! வாழும் இந்தப் புதுமைகளின் முன்னோடியாக, நம் அன்னை மரியா கானாவூர் திருமணத்தில் கலந்து கொண்டார். மரியாவை இந்த கோணத்தில் நாம் பார்க்க உதவியாகத் தான், யோவான் தனது நற்செய்தியில் "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்." என்று எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ‘சிம்பிளா’ச் சொல்லியிருக்கிறார்.
மரியாவின் அழகே இதுதான். எங்கெல்லாம் அவரது உதவி தேவை என்று உணர்கிறாரோ, அங்கெல்லாம் எந்த வித அழைப்பும் இல்லாமல் சென்று உதவுவார். எலிசபெத்தைப் பற்றி வானதூதர் சொன்னதும், மரியா கிளம்பி சென்றது நமக்கு நினைவிருக்கும்.
கானாவூரிலும் திருமணத்திற்கு முன்னரே அந்த வீட்டுக்குச் சென்று அவர்களது பல தேவைகளை நிறைவு செய்தார் மரியா. கல்யாண நாளன்றும், இந்த அன்புத் தாயின் உள்ளமும், கண்களும் யார் யாருக்கு என்னென்ன தேவை என்பதைத் தேடிக் கொண்டிருந்தன. எனவேதான், குறைந்து வரும் திராட்சை இரசம் அவரது கண்களில் முதலில் பட்டது.
குறையில்லாத திருமணங்கள் உலகத்தில் எங்கும் இல்லை. திருமணங்களில் பெரும்பாலும் சாப்பாட்டு நேரங்களில் தான் குறைகள் கண்டுபிடிக்கப்படும், பிரச்சனைகள் வெடிக்கும்.  கானாவூரிலும் சாப்பாட்டு விஷயத்தில்தான் குறை ஏற்பட்டது. யூதர்களின் வைபவங்களில், சிறப்பாக திருமணங்களில், இரசம் தீர்ந்து போவதென்பது பெரிய மானப் பிரச்சனை.
இப்படி குறைகள் ஏற்படும் போது, அவைகளை பகிரங்கப் படுத்தி, பெரிதாக்கி வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. பிரச்சனைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பவர்களும் உண்டு. மரியா இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். குறையைக் கண்டதும் அதைத் தீர்க்க நினைக்கிறார். தன் மகனிடம் கூறுகிறார். ஏன் இயேசுவிடம் இதைக் கூற வேண்டும்?
இது என்ன குழந்தைத் தனமான கேள்வி?
இயேசு புதுமைகள் செய்வார் என்று மரியாவுக்குத் தெரிந்திருக்கும். அதனால், அவரிடம் இதைச் சொல்கிறார். ஆனால், யோவான் நற்செய்தியில் இதுதான் இயேசு செய்த முதல் புதுமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்க, புதுமைகள் நிகழ்த்தும் ஆற்றல் இயேசுவுக்கு உண்டு என்று மரியாவுக்கு ஏற்கெனவே தெரியுமா? சிந்திக்க வேண்டிய கருத்து.
தன் மகன், மகள் இவர்களிடம் புதைந்திருக்கும், மறைந்திருக்கும் திறமைகளை நல்ல அன்னையர் உணர்ந்திருப்பார். அவர்களது குழந்தை இவைகளை வெளியில் இதுவரைக் காட்டவில்லை எனினும், அவர்களது திறமைகளை நல்ல தாய் உள்ளத்தில் உணர்ந்திருப்பார். இயேசுவின் இந்த அற்புத ஆற்றலை மரியா ஏற்கெனவே உள்ளூர உணர்ந்திருந்தால், அடுத்து ஒரு கேள்வி எழுகிறது. புதுமை நிகழ்த்தும் திறமை இயேசுவுக்கு உண்டு என்பதை மரியா உணர்ந்திருந்தால், அதை ஏற்கனவே பயன்படுத்தியிருக்கலாமே. நாசரேத்தூரில், அவர்களது தினசரி வாழ்க்கைக்குத் தேவையானவைகளை இயேசுவின் மூலம் தீர்த்திருக்கலாமே.
மரியா அப்படி செய்ததாகத் தெரியவில்லை. சுய நலனுக்காக, சுய விளம்பரத்துக்காக தன் திறமைகளை, அதுவும் இயற்கையைத் தாண்டிய திறமைகளை, சக்திகளைப் பயன்படுத்துபவர் வெறும் மந்திரவாதிகளாய் இருப்பார்களே தவிர, இறைவனாகவோ, உண்மையான இறையடியாராகவோ இருக்க முடியாது.
உண்மை இறையடியாரைப் பற்றிய ஒரு சிறுகதை இது: நாள் முழுவதும் தன்னையே நினைத்து, தியானித்து வாழ்ந்து வரும் ஒரு இறையடியாருக்கு முன் கடவுள் தோன்றுகிறார். அவருக்கு ஏதாவது ஒரு வரம் தர விழைகிறார். “இறைவா, உம்மைத் தியானிக்கும் ஒரு வரம் எனக்குப் போதும், வேறு வரம் எதுவும் வேண்டாம்” என்று கூறும் பக்தரிடம், ஏதாவது ஒரு வரம் கேள் என்று அவரைக் கடவுள் கட்டாயப்படுத்துகிறார். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், பக்தர் சொல்கிறார். "கடவுளே, தரையில் விழும் என் நிழலைத் தொடும் அனைவரும் நலம் பெற வேண்டும். அனால், ஒரு நிபந்தனை. எப்போதெல்லாம் என் நிழல் எனக்குப் பின்னே விழுகிறதோ, அந்த நிழலைத் தொடும் மக்களே குணமாக வேண்டும். எனக்கு முன் விழும் நிழலுக்கு அந்த சக்தி இருக்கக் கூடாது." என்று வரம் கேட்கிறார் அந்த இறையடியார்.தனது சக்தியால் நன்மை நடக்க வேண்டும், ஆனால், அது தனக்குத் தெரியாமல் நடக்க வேண்டும் என்பதில் அந்த இறையடியார் மிகத் தெளிவாக இருந்தார். தன்னலத்தை அறவே துறந்த இறையடியார்களின் ஒட்டுமொத்த உருவாக, அவர்களுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக மரியா வாழ்ந்தார் என்பதற்கு கானாவூர் திருமண நிகழ்வு மற்றொரு எடுத்துக்காட்டு. அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தி தன் மகனிடம் இருப்பதை அவர் உணர்ந்திருந்தாலும், அந்த சக்தி மற்றவருக்கு மட்டுமே பயன்பட வேண்டுமேயொழிய, தன் நலனுக்காக அல்ல என்பதில் மரியா தெளிவாக, தீர்க்கமாக இருந்தார். மரியாவின் இந்த வேண்டுகோளுக்கிணங்க, இயேசு ஆற்றிய புதுமையை ஞாயிறு சிந்தனையில் தொடர்ந்து சிந்திப்போம்.







All the contents on this site are copyrighted ©.