2010-01-12 15:27:42

சனவரி, 13 - நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3
பழையன கழிதலும் புதியன புகுதலும்... இதுவே போகிப்பண்டிகையின் மையம். புதியன புகுவதைப் பற்றி அதிகம் பிரச்சனை இருக்காது. பழையன கழிதல் என்பதில்தான் பல பிரச்சனைகள்.
Zen குருவைக் காண வந்தார் ஒரு கல்லூரி பேராசிரியர். அவர் முன் அமர்ந்ததும், தன்னை அறிமுகம் செய்வதாய் எண்ணிக்கொண்டு, தான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளைப் பற்றி, தான் வாங்கிய பல பட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டேயிருந்தார் பேராசிரியர். குரு அவரிடம், "மிக்க மகிழ்ச்சி. என்னைத் தேடி வந்த நோக்கம் என்ன?" என்று கேட்டபடி, வந்திருந்த பேராசியருக்கு ஒரு சிறு கிண்ணத்தில்  தேநீரை ஊற்ற ஆரம்பித்தார். Zen குறித்து தான் பெரியதொரு ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார் பேராசிரியர். கிண்ணம் தேநீரால் நிறைந்து வழிந்தது. இருந்தாலும், குரு ஊற்றுவதை நிறுத்தவில்லை. கிண்ணம் நிரம்பி விட்டது என்று பேராசிரியர் குருவிடம் சொன்னார். "நீங்களும் இப்படித்தான். உங்களைப் பற்றிய எண்ணங்களிலேயே நிறைந்து வழிகிறீர்கள். Zen பற்றி அறிந்து கொள்வதற்கு உங்களிடம் இடமே இல்லை." என்று குரு சொன்னார். புதியன புக வேண்டுமெனில் "நான்" என்று நம்மை நிறைத்திருக்கும் பழையனவற்றில் கொஞ்சமாகிலும் கழிய வேண்டும். புதியன புக வேண்டுமென்று பழையனவற்றை எரிக்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வண்ணம் பெருநகரங்களில் பல தேவையற்ற பொருட்கள் எரிக்கப்படும். சுற்றுச்சூழலை மதிக்க வேண்டும் என்று அண்மைக்காலங்களில் வளர்ந்துவரும் நம் புதிய எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து,
இந்த பழக்கம் கடந்த சில ஆண்டுகளில் குறைந்து வருகிறதென்பதே போகி பண்டிகையின் ஒரு வெற்றி. நம்மில் தேவைக்கதிகமாய் குவிந்திருக்கும் "நான்" எனும் அகந்தையையும் கொஞ்சம் எரித்துவிட்டால், கழித்துவிட்டால், புதியன புகுவதற்கு அதிகம் வாய்ப்புகள் இருக்கும்.







All the contents on this site are copyrighted ©.