2010-01-11 14:35:04

வன்முறை ஒருபொழுதும் தீர்வாக முடியாது-திருத்தந்தை


சன.11,2010 : வன்முறை ஒருபொழுதும் தீர்வாக முடியாது என்று சொல்லி குடியேற்றதாரர்

மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராய் இடம் பெறும் தாக்குதல்கள் நிறுத்தப்படுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான புனித பேதுரு சதுக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுடன் சேர்ந்து மூவேளை செபம் செய்த பின்னர் எந்த இடங்களையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் இவ்வாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

பல்வேறு காரணங்களால் நாடுகளில் நல்லதொரு வாழ்க்கையைத் தேடும் குடியேற்றதாரர் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் குறி வைத்து தாக்கப்படும், ஏன் வன்முறைகள்கூட பயன்படுத்தப்படும் கிறிஸ்தவர்கள் ஆகியோர் பற்றிக் குறிப்பிட்ட அவர், இப்பிரச்சனைகளின் மையத்திலிருந்து மீண்டும் நாம் தொடங்க வேண்டும் என்றார்.

மனிதனின் அர்த்தம் என்ன என்பதிலிருந்து நாம் தொடங்க வேண்டும் என்ற திருத்தந்தை, குடியேற்றதாரர், பல்வேறு கலாச்சார, மரபுகளைக் கொண்டிருந்தாலும் அவர்களும் மனிதர்களே என்றும், ஓர் ஆள் அவரது உரிமைகளோடும் கடமைகளோடும், குறிப்பாக, அவர்கள் வேலை செய்யும் இடங்களில் மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

வேலை செய்யும் இடங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சோதனை வலுவாக இருக்கின்றது, வாழ்வின் நிலைகளிலும் இது தெளிவாகத் தெரிகின்றது என்ற திருத்தந்தை, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வன்முறை ஒருபொழுதும் தீர்வாக முடியாது என்று சொன்னார்.

முதன் முதலில் இப்பிரச்சனை மனிதனை மையம் கொண்டது, எனவே ஒவ்வொருவரும் மற்றவரின் முகத்தில் தன்னைப் பார்த்து, மற்ற மனிதனுக்கும் ஓர் இதயம், ஒரு வரலாறு, ஒரு வாழ்க்கை இருக்கின்றது, அவனும் மனிதன், கடவுள் தன்னை அன்பு செய்வது போல, அந்த மனிதனையும் அன்பு கூர்கிறார் என்று உணர அழைப்பு விடுப்பதாகக் கூறினார் திருத்தந்தை.

சில நாடுகளில் கிறிஸ்தவர்கள் வன்முறைக்கு உள்ளாகின்றனர், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு மிகவும் புனிதமான நாட்களில் இவை நடக்கின்றன, எனவே அரசியல் மற்றும் சமய நிறுவனங்கள் தங்கள் பொறுப்பிலிருந்து விலகக் கூடாது என்று கூறினார் அவர்.

மேலும், மலேசியாவில் கடந்த நான்கு நாட்களில் ஒன்பது கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. எகிப்தில் காப்டிக் ரீதி கிறிஸ்துமஸ் அன்று ஆறு கிறிஸ்தவர்களும் ஒரு முஸ்லீம் பாதுகாப்புப் பணியாளரும் கொல்லப்பட்டனர்








All the contents on this site are copyrighted ©.