2010-01-11 15:27:17

நெருப்பை நெருப்பால் அணைக்க முடியமா?


சன.11,2010 கடந்த சனிக்கிழமை இரவு எட்டு மணி செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மருத்துவ அவசர உதவி வாகனங்களில் இரத்த வெள்ளத்தில் மக்கள் தூக்கிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் பின்னால் அழுது கொண்டே பெண்களும் பிள்ளைகளும் சென்றனர். இதற்கு காரணம், கடந்த வியாழனன்று தென் இத்தாலியின் கலாபிரியா மாகாணத்திலுள்ள ரொசர்னோ என்ற நகரில் இத்தாலிய இளைஞர் குழு ஒன்று, அந்நகரில் விவசாயப் பண்ணைகளில் கூலி வேலை செய்து வரும் ஆப்ரிக்கர்களில் இரண்டு பேரைத் துப்பாக்கியால் சுட்டதுதான். டோகோ, கானா, நைஜீரியா போன்ற ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த இவர்கள் பிழைப்பு தேடி இங்கு குடியேறி, பழம் பொறுக்குதல் போன்ற வேலைகளைக் குறைந்த கூலிக்குச் செய்து வயிற்றை நிரப்பி வருகின்றனர். இவர்கள் தாக்கப்பட்டதையடுத்து உள்ளூர்காரர்களுக்கும் குடியேற்றதார ஆப்ரிக்கர்களுக்குமிடையே இரண்டு நாட்களாக இடம் பெற்ற வன்முறையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியேற்றதார ஆப்ரிக்கர்களும் காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர். இது இப்படி என்றால்,

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். மெல்பெர்னில் ஒரு வாரத்திற்கு முன்னர், அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட 21 வயது Nitin Garg என்ற பஞ்சாபி இளைஞனின் உடல் இஞ்ஞாயிறன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் கொலையின் அதிர்ச்சி அலை ஓய்வதற்குள் அதே நாட்டில் மற்றுமோர் இந்தியர் தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 29 வயது நிரம்பிய Jaspreet Singh என்பவர் மீது நான்கு பேர் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் அவரது உடம்பில் 15 விழுக்காட்டுப் பகுதி எரிந்து விட்டது. மேலும், இலண்டனில் ஒரு பெண்ணின் கைப்பையை பறித்து சென்ற 2 திருடர்களை மடக்கி பிடித்த சுக்விந்தர்சிங் என்ற 31 வயதாகும் இந்தியர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்ரிக்காவில், நாடுகளுக்கிடையிலான ஆப்பிரிக்கக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் விளையாடுவதற்காக டோகோ அணியினர் பயணம் செய்த பேரூந்து துப்பாக்கிதாரிகளால் தாக்கப்பட்டதில் ஓட்டுனர், ஓர் ஊடக அதிகாரி, துணை பயிற்றுவிப்பாளர் என மூவர் இறந்துள்ளனர். இதில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இதனால் இந்த அணி போட்டியில் கலந்து கொள்ளாமல் நாடு திரும்புவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு உலகில் ஒவ்வொரு நாளும் கொலைகளும், வன்முறைகளும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. எடுத்துக்காட்டுக்கு கூகுள் இணையதளச் செய்தியைத் திறந்தால் முதல் பக்கத்தில் வந்துள்ள 19 செய்திகளில், 14 பயங்கரவாதம் மற்றும் குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்டவை. இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் பல அடிப்படைவாதக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் எந்த அளவுக்கு இருக்கின்றதென்றால், விமான நிலையங்களில் பயணிகளை உடல் முழுவதும் ஸ்கேன் பண்ணுவதற்கு நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.

2010ம் ஆண்டின் தொடக்கமே இப்படி இருக்கிறதே என்று மனத்தில் ஒருவித ஆதங்கம் ஏற்படுகின்றது. உயிரும் உடமையும் மனித உரிமையும் என்றுமே பாதுக்காக்கப்பட வேண்டிய ஒன்று என்பது ஏனோ மறக்கப்பட்டு விடுகின்றது. வன்முறைகள் வரலாற்றில் நெடுந்தொடராகத்தான் இருந்து வருகின்றன. Daniel Jonah Goldhagen என்ற எழுத்தாளர், “Worse Than War; Genocide, Eliminationism” என்ற தனது நூலில் வரலாற்றில் இடம்பெற்ற இனப்படுகொலைகளையும் இன அழிப்புக்களையும் பட்டியலிட்டுள்ளார். 1904ம் ஆண்டில் ஜெர்மன் பேரரசு தற்போதைய நமீபியாவில் Herero மக்களில் 80 விழுக்காட்டினரை ஈவுஇரக்கமின்றி அழித்துள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டு 33வது அரசுத்தலைவர் Harry Truman, இரண்டாம் உலகப் போரில் மூன்று இலட்சம் ஜப்பானியர்களை அழித்தார். துருக்கியர்கள், 12 இலட்சம் அர்மேனியர்களைக் கொலை செய்தனர், மேலும் எட்டு இலட்சம் பேரை நாடு கடத்தினர். Hitler, Kim Il Sung, அவரது மகன் Kim Jong Il, Pol Pot, Stalin, Mao Zedong போன்றோரது ஆட்சிகளில் இவை போன்ற இனஅழிப்புகள் நடந்தன என்று அவரது பட்டியல் நீள்கிறது. 1994ம் ஆண்டில் Rwanda வில் Hutu இனத்தவர் எட்டு இலட்சம் Tutsi இனத்தவரைப் படுகொலை செய்தனர். மொத்தத்தில் இனஅழிப்பு நடவடிக்கையில் கடந்த நூற்றாண்டில் 12 கோடியே 70 இலட்சம் முதல் 17 கோடியே 50 இலட்சம் பேர் வரை இறந்துள்ளனர் என்று Goldhagen எழுதியிருக்கிறார். கடந்த நூற்றாண்டு என்ன, கடந்த ஓராண்டில் மட்டுமே இலங்கையில் நடந்தது என்ன என்று விவரிக்கத் தேவையே இல்லை.

அன்பு நேயர்களே, “அடிப்பவன் மாறலாம், ஆனால் அடிவாங்குபவன் ஒருவனே!” என்ற நிலைதான் இங்கு இப்போது உணரப்படுகின்றது. திருத்தந்தை 16ம் பெனடிக்டும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், தென்இத்தாலியில் குடியேற்றதாரர், எகிப்தில், ஈராக்கில், மலேசியாவில் கிறிஸ்தவர்கள் என வன்முறையை எதிர்நோக்குகிறவர்களை மனத்தில் கொண்டு, வன்முறை ஒருபொழுதும் தீர்வாக முடியாது என்று சொல்லி, இந்த வன்முறைகள் நிறுத்தப்படுமாறு உலகினரிடம் உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். RealAudioMP3

சமூகங்களில் நடக்கும் இந்த வன்முறைகளுக்கு, அன்பர்களே, நாமும் ஒருவிதத்தில் பொறுப்பாளிகள் என்று சொன்னால் ஏற்பதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்ற தத்துவ அறிஞர் காந்திஜி கொல்லப்பட்டது பற்றிக் குறிப்பிடுகின்ற போது, “தனிப்பட்ட ஒருவரில் வெளிப்பட்ட இந்த வன்மம், ஒட்டு மொத்த சமூக வன்மத்தின் வெளிப்பாடு” என்று சொல்லியிருக்கிறார். இதற்கு விளக்கமளிக்கும் அறிஞர்கள், “நாம் அனைவருமே வன்மத்தை மனத்தில் தேக்கி வைத்திருக்கிறோம். இந்த வன்மம் இன்னொருவர் மூலம் வெளிப்பட முடியும்” என்கிறார்கள்.

ஒரு பொருளை அல்லது ஒருவரின் செயலைப் பார்க்கும் பொழுது கோபம் வருகிறது. ஆனால் அதனை அந்த நேரத்திலோ அல்லது அந்த ஆளிடமோ காட்ட முடியாத சூழல் உருவாகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தக் கோபத்தை அடக்கி வைக்கிறோம். ஆனால் அது மற்றோர் இடத்தில் அல்லது மற்றொரு நபர் மீது வெளிப்படுகிறது. எனவே கோபப்பட வேண்டியவர் மீது அக்கோபம் பாயாமல் அப்பாவிகள் மீது திணிக்கப்படலாம். எனவே இந்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால் நாம், நம்மிலிருக்கின்ற வனமத்தைச் சிறிது சிறிதாக அகற்ற முடியும். இந்த வன்மம் குறையக் குறைய நாம் வாழுகின்ற சமூகம் அன்பு மயமாகும். உலகம் முழுவதுமே அன்பு மயமாகும் என்று உளவியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

நான் எனது துறவு பயிற்சியின் துவக்க காலத்தில் ஆசிரம அனுபவத்திற்குச் சென்றிருந்தேன். ஒருநாள் மாலையில் அங்கு நடந்து கொண்டிருந்த போது ஒரு செடியின் ஓர் இலையைக் கிள்ளிப் போட்டேன். சிறிது நேரம் கழித்து, கீழே கிடந்த ஒரு கல்லைத் தூக்கி எறிந்தேன். அதைக் கவனித்துக் கொண்டிருந்த பயிற்சியாளர் சகோதரி, என்னைக் கூப்பிட்டு, இதுவும் ஒருவகையான வன்மம்தான் என்றார்கள். சுவரின்மீது எச்சிலைத் துப்புவது, அறைக் கதவை டமார் என்று சாத்துவது, நாற்காலியை வேகமாகத் தூக்கி அதற்கு வலிக்கும்படி இழுப்பது இப்படி உயிரற்ற பொருட்களின் மீதுகூட வன்மம் காட்டக்கூடாது என்றார்கள். புத்தகத்தின் பக்கங்களைக் கிழிப்பதுகூட, அவற்றை மடக்குவதுகூட அவற்றைக் கிள்ளுவதற்குச் சமம். செருப்பை வேகமாகக் கழற்றி எறிவதுகூட அதனை உதாசீனப்படுத்துவதற்குச் சமம். ஒரு செடியைத் தேவையில்லாமல் பிடுங்கும் போது, ஒரு நாயைக் கல்லால் அடிக்கிற போது நாம் வன்முறையாளர்களாக மாறுகிறோம் என்று இறையன்பு என்பவர் சொல்கிறார்.

இவ்வாறு சின்னச் சின்னச் செயல்களின் மூலம் நாம் வன்முறையாளர்களாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கவியரசர் கண்ணதாசன் சொன்னதுபோல், மனிதன் என்பவன் தெய்வமாகலாம். வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்; வாழை போல தன்னைத்தந்து தியாகி ஆகலாம்; உருகியோடும் மெழுகு போல ஒளியை வீசலாம்; ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்; உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்; யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்; மனம், மனம் - அது கோவிலாகலாம்; மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்; வழியிருந்தால், கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்; துணிந்து விட்டால், தலையில் எந்த சுமையும் தாங்கலாம்; குணம், குணம் அது கோவிலாகலாம்;

இப்படி மனிதர்களாகிய நாம் உயர்ந்து நிற்க முடியும் என்கின்ற போது, சின்னச் சின்னச் செயல்கள் மூலம் ஏன் வன்முறையாளர்களாக மாறி இந்த சமூகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்? நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. அம்புகளை எய்துவிட்டு அன்பை எதிர்பார்க்க முடியாது. கற்களை எறிந்து விட்டு பூமாலைகளை எதிர்பார்க்க முடியாது. கடவுள் கத்தியினால் அல்ல, வார்த்தையினால், செயலால் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார் என்று John Foxe என்பவர் சொல்கிறார். எனவே நாமும் நமது சொல்லால், செயலால் வன்மமற்ற சமூத்தைச் சமைப்போம். அன்பை விநியோகிப்போம். நாம் அன்புமயமாக மாறுகிற போது நம் எதிரே இருப்பவர்களும் அன்புமயமாக மாறுவார்கள்.

ஒரு சிறிய பயிற்சி - இன்று நீங்கள் சந்திக்கும் ஆட்களிடம் குறைந்தது ஒருவரைப் பார்த்தாகிலும் புன்முறுவல் காட்டிப் பாருங்கள். நிச்சயம் அதே புன்னகை உங்களுக்குத் திருப்பிக் கிடைக்கும்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.