2010-01-09 16:50:43

மெக்சிகோ நகரில் உண்மையான திருமணம் மற்றும் குடும்பத்திற்கு ஆதரவாக ஆயர் பேரவை


சன.09,2010 : மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ நகரில் ஓரினச் சேர்க்கைத் திருமணங்களைத், திருமணத்திற்குச் சமமாகக் கொண்டு வருவதற்கானச் சர்ச்சைக்குரிய மசோதா குறித்து அதிகமான விவாதங்கள் இடம் பெறுமாறு அந்நாட்டு ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

உண்மையான திருமணம் மற்றும் குடும்பத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ள மெக்சிகோ ஆயர் பேரவை செயலர் ஆயர் விக்டர் ரெனெ ரொட்ரிக்கெஸ், இவ்விவகாரத்தில் மெக்சிகோ உயர்மறைமாவட்டம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆயர்களின் ஆதரவு இருக்கும் என்று கூறியுள்ளார்.

குழந்தைகளைப் பெற்றெடுக்கவும், ஒரு தந்தை-தாய் இருக்கும் சூழலில் குழந்தை வளரவும் பொறுப்பைக் கொண்டிருப்பது குடும்பமே என்றும் ஆயர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, போர்த்துகீசிய நாடாளுமன்றம், அந்நாட்டில் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தை அனுமதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதன் மூலம் போர்த்துக்கல், ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில் ஆறாவது நாடாக இணைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது







All the contents on this site are copyrighted ©.