2010-01-09 16:51:43

மலேசியாவில் மற்றுமோர் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டுள்ளது


சன.09,2010 : மலேசியாவில், முஸ்லீம் அல்லாதவர்களும் கடவுளை குறிப்பதற்கு அல்லா என்கிற சொல்லை பயன்படுத்தலாம் என்கிற அண்மை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இச்சனிக்கிழமை காலை மற்றுமொரு கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்குப் புறநகர் பகுதியில் ஒரு கத்தோலிக்க மாதா ஆலயம் உட்பட மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் கெரசின் குண்டு வீசி இவ்வெள்ளி அதிகாலை தாக்கப்பட்டன.

இச்சனிக்கிழமையும் இத்தகைய வன்முறை தொடருவது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ஹெரால்டு என்ற கத்தோலிக்க இதழ் ஆசிரியர் அருள்திரு லாரன்ஸ் ஆன்ட்ரூ, இதுவரை பெரிய ஆபத்து என்று எதுவுமில்லை, ஆனால் நிலைமை கவலைக்குரியதாய் இருக்கி்ன்றது என்று தெரிவித்தார்.

எனினும், அல்லா என்ற பெயரை முஸ்லீம்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் தேசிய அளவிலான போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன என்றும் அக்குரு கூறினார்.

இது தொடர்பான வன்முறைகள் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கத்தில், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும்வரை, அல்லா என்ற பெயரை தங்களது கத்தோலிக்க இதழில் பிரசுரிக்கமாட்டோம் என்று குரு லாரன்ஸ் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.