2010-01-09 16:27:53

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
15 ஆண்டுகளுக்கு முன் புத்தாண்டு தினத்தன்று நடந்த ஒரு சம்பவம், என் மனதில் ஆழமான எண்ணங்களையும், மாற்றங்களையும் பதித்துச் சென்ற ஒரு சம்பவம். நானும், இன்னுமொரு குருவும் புத்தாண்டு தினத்தன்று சென்னை அரசு மருத்துவ மனைக்குச் சென்றோம். எங்கள் இயேசு சபையைச் சார்ந்த ஒரு குரு அன்று காலை சாலை விபத்தில் இறந்து விட்டார். நள்ளிரவு, காலைத் திருப்பலிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவர் வேறொரு வாகன ஓட்டியின் தவறால் உயிரிழந்தார். அவரது உடலை அந்த மருத்துவமனையின் சவக்கிடங்கிலிருந்து மீட்டு வரச் சென்றோம். அந்த சவக்கிடங்கில் நான் அடைந்த அதிர்ச்சியை என்னால் பல ஆண்டுகள் மறக்க முடியவில்லை. வருடக் கடைசி அன்று இரவு நடக்கும் சாலை விபத்துக்களை நாம் அறிவோம். எனவே, அந்த சவக்கிடங்கில் பல உடல்கள், பலவாறாக சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அத்தனை சவங்களின் மத்தியில் எங்கள் குருவை அடையாளம் காட்டினோம் அங்கிருந்த காவல் துறையினரிடம். நானும், என்னுடன் வந்த குருவும் அங்கிருந்த நேரம் ஒருவேளை 5 நிமிடங்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அது 5 மணி நேரங்கள் போல் தெரிந்தது. அந்த சவக்கிடங்கில் ஆரம்பித்து பல நாட்கள், இரவும் பகலும் என்னுள் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி: வாழ்க்கை இவ்வளவு தானா? உயர்ந்த ஒரு மலைமேல் நின்று பார்க்கும் போது ஒரு பரந்துபட்ட பார்வை கிடைப்பதைப் போல், அந்த சவக்கிடங்கில், இறந்த உடல்களுக்கு மத்தியில் வாழ்வைப் பற்றிய ஏதோ ஒரு தெளிவு எனக்குக் கிடைத்ததை உணர்ந்தேன்.
பிணி, முதுமை, சாவு இவற்றைப் பார்த்த புத்தரின் அகக்கண்கள் திறக்கப்பட்டன. அவரது வாழ்க்கை மாறியது. புத்தருக்குக் கிடைத்த ஞான ஒளியில் ஆயிரத்தில் ஒரு பங்கு, அல்லது அதற்கும் சிறிய அளவில் எனக்கும் ஒரு ஞானம், தெளிவு கிடைத்தது உண்மை. அந்த சவக்கிடங்கின் அனுபவம் வாழ்க்கையில் பல முறை என்னைச் சிந்திக்க வைத்தது. நான் எடுத்த பல முடிவுகளை மாற்ற உதவியது.
அந்த புத்தாண்டு தினத்தின் அனுபவம் எனக்குக் கிடைத்த மற்றொரு திருமுழுக்கு என்று சொல்வேன். என்னுடைய இந்த அனுபவம் வரலாறு ஆகுமா என்பது எனக்குப் பின் வருபவர்களது பொறுப்பு. ஆனால், எனக்கு முன் உள்ள வரலாற்றில் எத்தனையோ பேருடைய வாழ்வைப் புரட்டிப் போட்ட சம்பவங்களை நான் அசைபோட ஆசைப்படுகிறேன்.
கொலை வெறியோடு கிறிஸ்தவர்களைக் கைது செய்து எருசலேமுக்குக் கொண்டுவர தமஸ்கு நகர்நோக்கிச் சென்ற சவுலைப் பார்வை இழக்கச் செய்து, பின்னர் மறுபார்வை தந்த இறைவன் சவுலின் வாழ்வைப் புரட்டிப் போட்டார். பாம்பலோனா கோட்டையில், காலில் பட்ட குண்டு, லயோலா இனிகோவின் வாழ்வைப் புரட்டிப் போட்டது.
தென்னாப்பிரிக்காவில், புகைவண்டியிலிருந்து பலவந்தமாய் வெளியேற்றப்பட்ட ராஜ் மோகனின் அந்த பயணம், அவரது வாழ்வைப் புரட்டிப் போட்டது. அவரை மகாத்மாவாக்கியது. கொல்கத்தாவின் சாக்கடைகளும், சேரிகளும் அன்னை தெரசாவின் வாழ்வைப் புரட்டிபோட்டன. ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால், இவர்களுக்குக் கிடைத்த இந்த அனுபவங்கள் எல்லாம் இவர்களுக்குக் கிடைத்த திருமுழுக்கு. இறைமகன் இயேசுவின் வாழ்வைப் புரட்டிப் போட்ட ஒரு நிகழ்வாக அவரது திருமுழுக்கை நாம் சிந்திக்க இன்று ஒரு வாய்ப்பு நமக்கு. இந்த நிகழ்வைக் கூறும் நற்செய்தி இதோ:
லூக்கா நற்செய்தி 3: 15-16,21-22 
முன்பு ஒரு முறை படித்த சிரிப்புத் துணுக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்கின்றனர்.


சிரிப்புகள் பலநேரங்களில் சிந்தனைகளைத் தூண்டிவிடும் நெருப்புக் குச்சிகள்.  இல்லையா?
 கடவுளே, இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பாக்குறியே. ஒன்னும் செய்ய மாட்டியா? என்ற இந்தக் கேள்வியைப் பல கோடி மக்கள் இதுவரை கேட்டிருப்பர். இனியும் கேட்பார்கள். நானும் இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்ததுண்டு. கேட்டதில்லை. எனக்கும் இதே பயம். இந்தக் கேள்வியை விண்ணை நோக்கி நான் ஏவி விட்டால், அது மீண்டும் ஒரு மின்னலாக, இடியாக, எதிரொலியாக என்னைத் தாக்குமோ என்ற பயம்.
சாதாரண மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசுவுக்கும் இந்தக் கேள்வி கட்டாயம் உள்ளத்தில் எழுந்திருக்கும். 30 ஆண்டுகள் அமைதியாக, நாசரேத்தூரில், தானுண்டு, தன் வேலையுண்டு, தன் தாயுண்டு என்று வாழ்ந்து பழகி விட்டாலும், அவ்வப்போது இயேசுவைச் சுற்றி நடந்த பல அநியாயங்கள் அவர் மனதில் பூகம்பங்களாய் வெடித்திருக்கும்.
இந்த அநியாயங்களுக்கு விடை தேடி தன் நண்பர்கள், தெரிந்தவர்கள் பலரும் புரட்சிக் குழுக்களை உருவாக்கியதையும், அந்தக் குழுக்களில் சேர்ந்ததையும் இயேசு கட்டாயம் அறிந்திருந்தார். தீவிரவாதமும், வன்முறையும் தான் தீர்வுகளா? வேறு வழிகள் என்ன? என்று அவரும் கட்டாயம் சிந்தித்திருப்பார். இந்த சிந்தனைகளின் விடையாக அவர் எடுத்த முதல் முடிவு... மக்களோடு மக்களாகத் தன்னைக் கரைத்துக் கொள்ள வேண்டும். அந்த முடிவோடு, அந்த முனைப்போடு  யோர்தான் நதியில் இயேசு இறங்கினார்.
மக்களை மீட்க வந்தவர் மக்களோடு மக்களாக மாறுவதா? இவரையெல்லாம் தலைவர் என்று யார் ஏற்றுக்கொள்ள முடியும்? தலைவர் என்றால்... அன்பு நெஞ்சங்களே, ‘தலைவர் என்றால்…’ என்று விரியும் இலக்கணத்தைச் சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. நாம் கேள்விப்பட்டு, பார்த்து சலித்துப் போன பல தலைவர்களுக்கும் இயேசுவுக்கும் ஆறு வித்தியாசங்கள் அல்ல... அறுநூறுகோடி வித்தியாசங்கள் உண்டு.
இயேசு யோர்தானில் மக்களோடு மக்களாய் இறங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் தந்தையின் மீது அவர் வைத்திருந்த அளவு கடந்த நம்பிக்கை. கடவுள் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்க முடியும் என்பதற்கு பல கதைகள் நாம் கேட்டிருக்கிறோம்.
பாதாளத்தில் தவறி விழுந்து விடும் ஒருவன், ஒரு மரத்தின் கிளையையோ, வேரையோ பற்றிக்கொண்டு கடவுளைப் பார்த்து வேண்டுவதும், கடவுள் அவனிடம் நீ உண்மையிலேயே என்னை நம்புகிறாயா என்று கேட்பதற்கு ஆம் என்று அந்த மரண பயத்தில் அலறுவதும் அந்த மனிதனிடம் கடவுள் “நீ என்னை முழுவதும் நம்புவதாக இருந்தால், நீ பற்றியிருக்கும் அந்த மரத்தின் கிளையை விட்டுவிடு” என்று சொல்வதும் நமக்குத் தெரிந்த கதை.
அந்தக் கதையின் தொடர்ச்சியாக எனது கற்பனை இது. பற்றியிருக்கும் கிளையை விட்டுவிடு என்று கடவுள் சொன்னதும், கொஞ்ச நேரம் மனிதன் யோசிக்கிறான். பின்னர் இன்னும் உரத்தக் குரலில், "வேறு கடவுள் யாராவது இருக்கிறீர்களா, என்னைக் காப்பாற்ற?" என்று அலறுகிறான். இயேசுவைப் போன்ற இறை நம்பிக்கை கொண்டவர் அந்தச் சூழலில் இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று கற்பனை செய்யலாம். கடவுள் அந்தக் கிளையை விட்டுவிடு என்று சொன்னதும், கிளையை ஆனந்தமாய் விட்டு விடுவர். இதில் என்ன அற்புதம் என்றால், அந்தக் கிளையை விட்டதும், அவர்கள் அந்த பாதாளத்தில் கீழே செல்வதற்கு பதில் மேலே பறக்க ஆரம்பித்திருப்பர். இயேசுவுக்கு அப்படி ஒரு அற்புத உணர்வு அந்த யோர்தான் நதியில் ஏற்பட்டது.
ஏழை பணக்காரன், ஆண்டான் அடிமை என்று பிளவுபட்ட, ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சமுதாயத்தைப் பார்த்து அலுத்துவிட்ட யூத மக்கள் எப்போது இந்த வேறுபாடுகள் மறையும் என்று காத்துக் கிடந்தார்கள். இந்த வேறுபாடுகள் மறையும், மலைகள் தாழ்த்தப்படும், பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும் என்று ஏசாயா போன்ற இறைவாக்கினர்கள் பலர் பல நூறு ஆண்டுகளாய்க் கூறிவந்தனர். அந்த இறைவாக்குகளின் ஒரு பகுதியை இன்றைய ஞாயிறு வாசகமும் நமக்குத் தருகிறது. 
எசாயா 40: 1-5,9-11

இந்த இறைவாக்குகளை உண்மையாக்கும் முயற்சிபோல் இருந்தது இயேசுவின் இந்தச் செயல். மக்களோடு மக்களாக கலந்து வந்த இயேசுவைக் கண்டு, அவருக்குத் திருமுழுக்கு அளிக்க இருந்த யோவான் திகைத்தார். எனக்குப் பின் வருபவர் என்னைவிட உயர்ந்தவர் என்று மக்களிடம் அடிக்கடி கூறிவந்தவர் யோவான். இயேசுவைக் கண்டதும், "இதோ மெசியா" என்று உரக்கக் கத்த நினைத்தார் யோவான். அவரை இயேசு அமைதிபடுத்தி, திருமுழுக்கு பெறுகிறார். இயேசுவின் இந்த பணிவு, மக்களோடு மக்களாய் கரைந்து விட அவர் கொண்ட ஆர்வம் ஆகியவை விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்விக்கிறது.
தன் மகனோ, மகளோ அர்த்தமுள்ள, பெருமை சேர்க்கும் செயல்களைச் செய்யும் போது, நெற்றியில் முத்தமிட்டு, ஆசீர்வதிக்கும், அரவணைக்கும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். நாமும் இந்த ஆசீர், அரவணைப்பு இவற்றை அனுபவித்திருப்போம். அதுதான் அன்று யோர்தானில் நடந்தது. மக்களோடு மக்களாகத் தன்னை முழுவதும் இணைத்துக் கொண்ட இயேசுவைக் கண்டு ஆனந்த கண்ணீர் பொங்க தந்தையாம் இறைவன் சொன்ன வார்த்தைகள்:"என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்." உள்ள பூரிப்புடன், உன்னத இறைவன் இந்த வார்த்தைகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லக் காத்திருக்கிறார். நம்மையும் வாரி அணைத்து உச்சி முகந்து இந்த அன்பு மொழிகளை அவர் சொல்லும் வண்ணம் நம் வாழ்வை மாற்றி அமைக்க அதே இறைவனின் அசீரை வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.