2010-01-06 16:39:07

நாளும் ஒரு நல்லெண்ணம்:


RealAudioMP3 வீட்டின் வரவேற்பறையில் வயது முதிர்ந்து, அவ்வப்போது நினைவு தப்பும் 80 வயது நிரம்பிய தந்தையும், மூதாட்டியான தாயும் நல்ல பதவியில் இருக்கும் 45 வயது மகனும் அமர்ந்திருந்தனர். மகன் மடிக்கணணியில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க, தந்தை கேட்டார், "அது என்ன?" என்று. மகன் சொன்னான், "இது மடிக்கணணி." என்று. சிறிது நேரத்தில் தந்தை மீண்டும் இது என்ன என்று கேட்க, மகனிடம் அதே பதில். 4 முறைகள் அதே கேள்வி அதே பதில். 5வது முறை கேட்டபோது, மகனுக்குத் தாங்க முடியாத எரிச்சல். தந்தையைப் பார்த்து கோபத்தில் கத்திவிட்டார். தந்தையின் முகத்தில் எவ்வித சலனமுமில்லை. மூதாட்டியான தாயின் கண்களில் நீர் எட்டிப்பார்த்தது. எழுந்து அறைக்குச் சென்று அத்தந்தை எழுதிய 43 ஆண்டுகளுக்கு முன்னான நாட்குறிப்பு ஒன்றைத் திறந்து படிக்கச் சொன்னார். மகன் வாசித்துப் பார்த்தான். "இரண்டு வயதான என் மகனுடன் அமர்ந்திருந்தேன். குருவி ஒன்று பறந்து வந்து அருகில் அமர்ந்தது. என்ன என என் மகன் கேட்டான். "குருவி" என்றேன். 23 தடவைகள் அதே கேள்வியைக் கேட்டான். 23 தடவையும் பொறுமையாகப் பதில் சொன்னேன். எனக்குக் கோபம் வரவில்லை. அவனது ஆர்வத்தைக் குறித்து பெருமையடைந்து, ஒவ்வொருமுறையும் அணைத்துக் கொண்டேன்."
43 வருடங்களுக்கு முன் எழுதிய அந்த நாட்குறிப்பை வாசித்த மகனுக்கு அடக்க முடியாமல் கண்ணீர் வெளிப்பட்டது. தந்தையை அப்படியே அணைத்துக் கொண்டார்.

வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள நிதானம் தேவை.நிதானமே, பிரச்சனை எனும் பனி அகற்றும் சூரிய ஒளி.







All the contents on this site are copyrighted ©.