2010-01-06 16:32:47

திருத்தந்தை: கீழ்த்திசை ஞானிகள் விஞ்ஞானிகளாய் இருந்தாலும் இறைவனின் செய்திக்குத் திறந்த மனதுடையவராய் இருந்தனர்


சன.06,2009 மூன்று கீழ்த்திசை ஞானிகளிடம், தாழ்ச்சியும் செவிமடுப்பதற்கான திறனும் முக்கிய பண்புகளாக விளங்கிய அதேவேளை, அவர்கள், உண்மையை நேர்மையுடன் தேடும் இன்றைய ஞானிகளுக்கு எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றார்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவான இப்புதன் காலையில் வத்திக்கான் பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்திய பின்னர், நண்பகலில் வளாகத்தில் காத்திருந்த ஏறத்தாழ அறுபதாயிரம் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை நிகழ்த்திய திருத்தந்தை, விண்மீனும், திருமறைநூல்களும் இஞ்ஞானிகளின் பயணத்திற்கு வழிகாட்டிகளாக இருந்தன என்றார்.
இந்த ஞானிகள், விண்மீன்கள் மற்றும் மக்களின் வரலாற்றை அறிந்திருந்தவர்கள், பரவலான கண்ணோட்டத்தில் சொல்ல வேண்டுமானால் இவர்களும் அறிவியல் அறிஞர்களே, எனினும் அவர்கள் தங்கள் சொந்த அறிவில் திருப்தி கொள்ளாமல், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் கடவுளின் அழைப்புக்கும் திறந்த மனதாய் இருந்தார்கள், தாங்கள் செல்ல வேண்டிய இடம் பற்றி அறிவதற்கு யூதமதக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் விளக்கம் கேட்பதற்கு வெட்கப்படவில்லை என்றும் திருத்தந்தை கூறினார்.
தங்கள் பயணத்தின் உச்ச கட்டமாக குழந்தையை அதன் தாய் மரியாவோடு கண்டார்கள், இவர்கள் ஏமாற்றமடைந்திருக்கலாம், துர்மாதிரிகை அடைந்திருக்கலாம், ஆனால் உண்மையான ஞானிகள் என்ற விதத்தில், அவர்கள் வியத்தகு வழிகளில் தம்மை வெளிப்படுத்திய பேருண்மைக்குத் திறந்த உள்ளம் கொண்டவர்களாய் இருந்தார்கள் என்றார் அவர்.
மேலும், சிறார் சிறாருக்கு உதவுகின்றனர் என்ற தலைப்பில் இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட உலக சிறார் மறைபோதக தினத்தைக் குறிப்பிட்டு ஐந்து கண்டங்களிலும் பணிசெய்யும் சிறார் நற்செய்திப் பணியாளருக்குத் தமது வாழ்த்துக்களையும் மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை.
உண்மையான ஞானத்தின் மாதிரிகையான அன்னைமரியா இறைவனை உண்மையாகத் தேடுவதற்கும் அறிவிக்கும் விசுவாசத்திற்குமிடையே, அறிவியலுக்கும் வெளிப்பாட்டிற்குமிடையே ஆழமான நல்லிணக்கத்தில் வாழவும் உதவுவாளாக என்று மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
பின்னர், 1950ம் ஆண்டு பாப்பிறை 12ம் பத்திநாதரால் உருவாக்கப்பட்ட உலக பாலர் சபை தினம் இப்புதனன்று சிறப்பிக்கப்படுவதைக் குறிப்பிட்டு ஐந்து கண்டங்களிலும் நற்செய்தி பணியாற்றும் சிறார்க்குத் தம் வாழ்த்துக்களைக் கூறினார் அவர்.
இன்னும், சனவரி 7ம் தேதி கிறிஸ்துமசை சிறப்பிக்கும் கீழைரீதி திருச்சபைகளுக்கும் தம் வாழ்த்துக்களைக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.