2010-01-06 16:38:54

திருக்காட்சி திருவிழா திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


அன்பு சகோதர சகோதரிகளே, இன்று நாம் திருக்காட்சி திருவிழாவைச் சிறப்பிக்கிறோம். அன்று இவ்வுலக சக்திகளின் முன்னிலையில் இஸ்ராயேல் மக்கள் துயர்களை அனுபவித்த போது, கடவுளின் வல்லமை சக்தியற்றதுபோல் உலகக் கண்களுக்குத் தோன்றியபோது, உலக மனிதர்கள், தலைவர்கள் உன்னத ஒளி முன்னால் தலைவணங்கி நிற்கும் ஒரு காட்சியை மனக் கண்ணில் கண்டார் இறைவாக்கினர் இசையாஸ். ஆனால், இன்றும் இயேசுபாலன் முன் வந்து வணங்கியவர்கள் பெரும் மன்னர்கள் அல்ல, ஆனால் பெருமளவில் தெரியப்படாத ஞானிகள். இவர்கள் அங்கு நட்சத்திரம் காட்டும் புதிய பாதையின் தொடக்கமானார்கள். வரலாற்றில் ஒன்றன்பின் ஒன்றாய் பெரும் எண்ணிக்கையில் வந்தக் கூட்டத்தின் முதன்மையானார்கள். இயேசுபாலன் சக்தியற்றவாராக, சிறு குழந்தையாய்த் தோன்றினாலும், மனித இதயங்களில் ஆழமான, மிக உன்னதமான மகிழ்வை வழங்கும் சக்தி கொண்டவராயிருந்தார். விண்மீனின் வழிகண்டு அப்பாலனை நெருங்கும் அனைவரும், அன்றைய மூன்று ஞானிகள் பெற்ற அனுபவத்தைப் பெறலாம். அந்த ஞானிகள் கொணர்ந்த தங்கமும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் தினசரி தேவைகளுக்குப் பயனற்றதாக இருக்கலாம். ஆனால், அன்றையக் கீழை நாடுகளில் இது ஒருவரைக் கடவுளாகவும், மன்னராகவும் அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் பரிசுகள். அவரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் பரிசுகள். இப்பரிசுகளை வழங்கிய மூன்று ஞானிகளும் மீண்டும் ஏரோதிடம் செல்லவில்லை. வேறு பாதை காட்டப்படுகிறார்கள். புதிய பாதையில் செல்கிறார்கள். வரலாற்றில் எண்ணிக்கையற்றோர் இவ்விண்மீனைப் பார்த்துள்ளனர். ஆனால், சிலரே அதன் செய்தியைப் புரிந்துள்ளார்கள். ஒரு சிலரால் முடிந்தது ஏன் ஏனையோரால் முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் தங்களால் எல்லாம் முடியும் என நம்புபவர்கள். தாழ்ச்சி எனும் பண்பு இங்கு குறைபடுகிறது. விண்மீன் காட்டும் பாதையே நம் பாதை. நமக்கான பாதையைக் கண்டுகொள்ளவும், நம்மை மீட்டுக்கொள்ளவும் இறைவன் தன் வல்லமை மூலம் உதவுகிறார். அவரிடம் ஞானிகளின், மாசற்றோரின் இதயத்தைத் தரும்படி வேண்டுவோம். அதன் வழி அவரின் கருணை நிறை விண்மீனைக் காண முடியும் என தன் மறைபோதகததை வழங்கிய திருத்தந்தை, திருப்பலிக்குப் பின் மூவேளை ஜெப உரை வழங்கி அனைவருக்கும் ஆசீரையும் அளித்தார்.







All the contents on this site are copyrighted ©.