2010-01-06 16:33:27

இந்தியாவில் இடம் பெறும் மரணக் கலாச்சாரம் நிறுத்தப்பட அருட்சகோதரி பிரசன்னா அழைப்பு


சன.06,2009 இந்தியாவில் சிறிய குடும்பங்களைக் கொண்டிருக்கும் போக்கு அதிகரித்து வருவதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார் இந்திய பெண் துறவு சபைகள் அமைப்பின் புதிய தலைவர் அருட்சகோதரி பிரசன்னா தாட்டில்.
அதேசமயம் நாட்டில் வளர்ந்து வரும் நவீனம், தான் என்ற கோட்பாடு, இலாபத்தை எதிர்நோக்கிய வாழ்க்கைத் தரம் ஆகியவை குடும்பங்களை இந்நிலைக்கு உள்ளாக்கி இருக்கின்றன என்றுரைத்த அவர், தற்சமயம் பலர் பிள்ளைகளைக் கொண்டிருக்க விரும்பவில்லை என்று கூறினார்.
எனவே அருட்சகோதரிகள் குடும்பங்களை அடிக்கடி சந்தித்து, தம்பதியர் அதிகக் குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதற்கு அவர்களை ஊக்குவிக்குமாறும் அருட்சகோதரி பிரசன்னா கேட்டுக் கொண்டார்.
கேரளாவின் திருக்குடும்ப துறவு சபையின் தலைமைச் சகோதரியாகிய, அருட்சகோதரி பிரசன்னா, கருக்கலைப்பு என்ற நடவடிக்கையில் இடம் பெறும் மரணக்கலாச்சாரம் நிறுத்தப்படுமாறும் அழைப்பு விடுத்தார்.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ ஒரு கோடியே பத்து இலட்சம் கருக்கலைப்புகள் வீதம் இடம் பெறுகின்றன. முறையற்ற கருக்கலைப்புகளால் ஆண்டுதோறும் ஏறத்தாழ இருபதாயிரம் பெண்கள் இறக்கின்றனர் என்று, மருத்துவ கருக்கலைப்புக்கான தேசிய கணக்கெடுப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட அருட்சகோதரிகள் மறைப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.