2010-01-04 15:54:14

நமது நம்பிக்கை கடவுளைச் சார்ந்து இருக்கின்றது-திருத்தந்தை


சன.04,2010 திருச்சபையிலும் குடும்பங்களிலும் பிரச்சனைகள் இருந்தாலும் நமது நம்பிக்கையானது, நம்புதற்கரிய முன்னறிவிப்புகளை, ஏன் முன்கூட்டியே சொல்லப்படும் பொருளாதார அறிவிப்புகளைக்கூட சார்ந்து இல்லை, மாறாக நமது நம்பிக்கை கடவுளைச் சார்ந்து இருக்கின்றது என்று ஞாயிறன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இறைவனில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையானது, பொதுவான சமயம் உணர்வு சார்ந்ததல்ல அல்லது நம்ப வேண்டும் என்ற ஒருவகையான உணர்வில் ஊன்றிய விசுவாசமும் அல்ல, மாறாக மனிதனோடு இருக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தை இயேசு கிறிஸ்துவில் முழுவதுமாகவும் அறுதியாகவும் வெளிப்படுத்திய கடவுளில் வைப்பதாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.

தமது வரலாற்றைப் பகிர்ந்து, அன்பும் வாழ்வும் நிறைந்த தமது இறையாட்சியை நோக்கி நம்மை வழிநடத்தும் கடவுளில் விசுவாசம் வைக்கிறோம், இந்த மாபெரும் நம்பிக்கையானது, நம்மை நடத்திச் செல்லுகிறது, சிலவேளைகளில் நமது மனித நம்பிக்கைகளை சீர்படுத்துகின்றது என்றும் அவர் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட திருப்பயணிகளுக்கு தமது வழக்கமான வத்திக்கான் இல்லச் சன்னலிலிருந்து ஆற்றிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கடவுளின் திருச்சட்டம் இயேசு கிறிஸ்துவில் வாழும் நிலைக்கு வந்தது, இது, மனிதனின் இதயத்தில் எழுதப்பட்டுள்ளது, தூய ஆவியால் இது முழு மனித உருவெடுத்தது, அன்பு நண்பர்களே, மனித சமுதாயத்தின் நம்பிக்கைக்கான உண்மையான காரணம் இதுவே என்றும் அவர் கூறினார்.

இயேசு கிறிஸ்துவின் வருகையோடு தீயவனின் தீய சக்திகள் ஏற்கனவே முறியடிக்கப்பட்டுவிட்டன, எனினும் இயேசுவை தங்கள் வாழ்க்கையில் தினமும் ஏற்பதற்கு ஒவ்வோர் ஆணும் பெண்ணும் பொறுப்பு, நாம் ஒவ்வொருவரும் நமது பொறுப்புக்களுக்கு ஒத்துப்போகும் வகையில், கடவுளின் அருளோடு செயல்படுவதைப் பொருத்து 2010ம் ஆண்டு மிகவும் நல்லதாக அமையும் என்று திருத்தந்தை தெரிவித்தார்.

நம் வாழ்க்கையில் கடவுளின் திட்டத்தை தாழ்ச்சியோடும் தைரியத்தோடும் ஏற்பதற்கு அன்னைமரி உதவுவாளாக என்று மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.