2010-01-04 16:02:12

இளையோர் எயட்ஸ் நோயாளிகள் மீது கவனம் செலுத்த வியட்நாம் காரித்தாஸ் திட்டம்


சன.04,2010 வியட்நாமில் இளையோர் மத்தியில் எயட்ஸ் நோய் மற்றும் அந்நோய்க் கிருமிகள் வேகமாகப் பரவி வருதால் அதனைத் தடுப்பதற்கு அந்நாட்டுத் தலத்திருச்சபை மிகுந்த கவனம் செலுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

வியட்நாமின் சுயென் தென் மறைமாவட்டத்தில் கிறிஸ்துமஸையொட்டி உருவாக்கப்பட்ட காரித்தாஸ் அமைப்பின் நடவடிக்கைகள் பற்றிப் பேசிய அதன் இயக்குனர் அருள்திரு ஜோசப் நுகுயென் வான் வியட், அம்மறைமாவட்டத்தில் ஏறத்தாழ எட்டாயிரம் பேர் எய்ட்ஸ் நோயாளிகள், இவர்களில் பெரும்பாலானோர் 16க்கும் 20 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று தெரிவித்தார்.

வியட்நாமில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பலர் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் தங்கள் நோய்க் குறித்து வெளிப்படையாகச் சொல்லாமல் இருக்கின்றனர் என்று, 70 வயதான குரு ஜோசப் தெரிவி்ததார்.

வியட்நாம் கம்யூனிச அரசால் 32 ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்டிருந்த அந்நாட்டு கத்தோலிக்கக் காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, 2008ம் ஆண்டு அக்டோபரில் மீண்டும் உருவாக்கப்பட்டது. அது, தற்சமயம் அந்நாட்டின் 26 மறைமாவட்டங்களில் 14 கிளைகளைத் தொடங்கியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.