2010-01-04 16:04:06

இந்திய அறிவியல் ஆராய்ச்சியில் அரசியல் குறுக்கீடு மற்றும் அதிகார வர்க்கத்தினரின் குறுக்கீடு இருக்காது- பிரதமர் மன்மோகன் சிங்


சன.04,2010 இந்திய அறிவியல் ஆராய்ச்சியில் அரசியல் குறுக்கீடு மற்றும் அதிகார வர்க்கத்தினரின் குறுக்கீடு இருக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபட கூறியுள்ளார்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஞாயிறன்று 97-வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 21-ம் நூற்றாண்டில் இந்தியா அறிவியல் துறையில் வல்லரசாக வேண்டும். அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைவதன் மூலம்தான் இந்த இலக்கை எட்டமுடியும் என்றார்.

தேசிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து செயல்படத் தொடங்கும். இந்த வாரியம் தன்னிச்சையான அமைப்பாகச் செயல்படும். இந்த வாரியத்தில் முன்னணி விஞ்ஞானிகள் இடம்பெறுவர். ஆராய்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவியை இந்த வாரியம் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

பருவநிலை மாறுபாடு, நீர் வளத்தை சிறப்பாக பயன்படுத்துவது, உணவுப் பாதுகாப்பு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களாகும். அறிவியல் துறை வளர்ச்சியின் மூலம்தான் இப்பிரச்னைகளை வெல்ல முடியும் என்ற பிரதமர், தற்போது இந்திய விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் நிலை உள்ளது. வருங்காலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனைவரும் அறிவியல் ஆய்வுக்காக இந்தியாவைத் தேடிவரும் நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்று உரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.