2010-01-02 15:16:00

ஹெரால்டு கத்தோலிக்க வார இதழ், கடவுளைக் குறிப்பதற்கு “அல்லா” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை-கோலாலம்பூர் உயர்நீதி மன்றம் தீர்ப்பு


சன.02,2010 மலேசியாவில், ஹெரால்டு என்ற தேசிய கத்தோலிக்க வார இதழ், கடவுளைக் குறிப்பதற்கு “அல்லா” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், இதற்குத் தடைவிதித்த உள்துறை அமைச்சரின் ஆணை சட்டத்துக்குப் புறம்பானது என்றும் கோலாலம்பூர் உயர்நீதி மன்றம் தீர்ப்பு சொல்லியுள்ளது.

அத்துடன் “அல்லா” என்ற சொல், இசுலாமுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்றும் அத்தீர்ப்பில் கூறியுள்ளது.

மலேசியாவில் “அல்லா” என்ற பதம், முஸ்லீம் அல்லாத பிற வெளியீடுகளில் பயன்படுத்தப்படக் கூடாது என்று 2007ம் ஆண்டு உள்துறை அமைச்சர் தடைவிதித்தார்.

இத்தடையை எதிர்த்து, ஹெரால்டு இதழின் வெளியீட்டாளரான, கோலாலம்பூர் கத்தோலிக்க பேராயர் மர்பி பாக்யம் உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்.

திருச்சபையின் இந்த வழக்கில் ஈடுபட்டிருந்த நான்து வழக்கறிஞர்களில் ஒருவரான எஸ்.செல்வராஜா, உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளதோடு, இது ஹெரால்டுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

மலேசியாவில் கிறிஸ்தவர்கள், கடவுள் என்று குறிப்பிடுவதற்கு “அல்லா” என்ற வார்த்தையை கடந்த நானூறு வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.