2010-01-02 15:10:22

தாய்லாந்தினர் அமைதி மற்றும் அன்புக் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டுகளாய் வாழ அழைப்பு


சன.02,2010 தாய்லாந்து மக்கள் அமைதி மற்றும் அன்புக் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டுகளாய் வாழுமாறு அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்களும் புத்தமதத் தலைவர்களும் தங்கள் தங்கள் மதத்தவர்க்கு இப்புத்தாண்டில் அழைப்பு விடுத்துள்ளனர்.

பாங்காக் பேராயர் Francis Xavier Kriengsak Kovithavanij, புத்தாண்டு தினத்தன்று கத்தோலிக்கருக்கு விடுத்த செய்தியில், நம் சமூகங்களில் அன்புக் கலாச்சாரத்தை ஒன்றிணைந்து கட்டி எழுப்புவோம் என்று கூறியுள்ளார்.

தாய்லாந்தின் ஏறத்தாழ ஆறு கோடியே முப்பது இலட்சம் மக்களில் ஏறத்தாழ 95 விழுக்காட்டினர் புத்தமதத்தினர். மூன்று இலட்சம் பேரே கத்தோலிக்கர். எனவே கத்தோலிக்கர், குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், தங்களின் சிறு சிறு செயல்கள் மூலம், சமுதாயத்திற்குக் கொடையாகவும், அதன் வழியாக அமைதியை ஏற்படுத்துகின்றவர்களாகவும் அமைய முடியும் என்று பேராயரின் செய்தி கூறுகின்றது.

புத்தமத ஆன்மீக்த் தலைவர் Sakolmahasangkaprainayok விடுத்த செய்தியில், தாய்லாந்து புத்தமதத்தினர், உலகில் அமைதியின் செய்தியை ஊக்குவிப்பவர்களாகச் செயலாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.