2010-01-02 15:05:32

சன.03, நாளுமொரு நல்லெண்ணம்: வீரமும்   தியாகமும்


வீரத்தையும் தியாகத்தையும் வாழ்வில் சரிவர கலந்து வாழ்ந்த இருவரின் பிறந்த நாள் சனவரி 3.

1760ஆம் ஆண்டு சனவரி 3 பிறந்தவர் கட்ட பொம்மன். தனது 30வது வயதில் பாளையக்காரராகப் பொறுப்பேற்றார். 9 ஆண்டுகள், 8 மாதங்கள் பொறுப்பிலிருந்த போது, ஆங்கிலேயரை எதிர்த்து போராடி, 1799ஆம் ஆண்டு அக்டோபரில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார். வீரமும், தியாகமும் இணைந்தன இந்த மாவீரனில்.

1840ஆம் ஆண்டு சனவரி 3 பெல்ஜியத்தில் பிறந்தவர் பீட்டர் தமியான். தனது 24வது வயதில் ஒரு குருவாக ஹவாய்த் தீவில் தன் பணியை ஆரம்பித்தார். அங்கு பரவி வந்த தொழுநோயைக் கட்டுபடுத்த, அந்த நோய் கண்டவர்கள் மொலாக்கா என்ற இடத்தில் தனிமை படுத்தப்பட்டனர். இந்த நோயாளிகளுக்காகத் தன்னையே முழுவதும் அர்ப்பணித்த அருட்தந்தை தமியான் 25 ஆண்டுகள் இவர்கள் மத்தியில் பணிபுரிந்து இறுதியில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு, 1889ஆம் ஆண்டு தன் 49வது வயதில் இறையடி சேர்ந்தார். சென்ற 2009ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாள் இவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.
வீரமும், தியாகமும் இணைந்தன மாவீரன் கட்ட பொம்மனிடம். தியாகமும் வீரமும் இணைந்தன புனித தமியானிடம். வீரமும் தியாகமும் இணைய வேண்டும். வீரமில்லாத தியாகம் வெகு சீக்கிரம் முடங்கிப் போகும். தியாகமில்லா வீரம் வெகு சீக்கிரம் வெறியாகிப் போகும்.







All the contents on this site are copyrighted ©.