2010-01-01 14:41:53

வத்திக்கான் பேராலயத்தில் வருட இறுதிச் செய்தியை வழங்கினார் திருத்தந்தை


சன.01,2010 இவ்வியாழன் மாலை வத்திக்கான் பேராலயத்தில் வருட இறுதி நாளன்று நடைபெற்ற மாலை இறைபுகழ் மாலைக்குக் கூடியிருந்த அனைவரையும் வாழ்த்தி, தன் வருட இறுதிச் செய்தியை வழங்கினார் திருத்தந்தை. “திருச்சபையிலும், உலகத்திலும் பல்வேறு சம்பவங்கள் நிறைந்த இந்த ஆண்டின் இறுதியில் இறைவனின் தாயான மரியாவின் விழாவையொட்டி கொண்டாடப்படும் மாலை ஜெபத்தில் காலத்திற்கும், வரலாற்றுக்கும் தலைவரான இறைவனுக்கு நன்றி கூற கூடியிருக்கிறோம். இறைமகன் மனு உருவான போது, நித்தியம் என்பது காலத்திற்குள் நுழைந்ததால், காலம் என்பது மீட்பையும், அருளையும் பெறுகிறது. இந்த கண்ணோட்டத்துடன் நாம் இந்த ஆண்டு முடிவதையும், அடுத்த ஆண்டு துவங்குவதையும் நோக்க வேண்டும். ஆண்டின் இறுதி நாளன்று மாலை திருச்சபையின் பல கோவில்களில் ஒலிக்கப்படும் நன்றி கீதம் (Te Deum) நாம் பெற்ற அனைத்து நலன்களுக்கும் இறைவனே ஊற்று என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.” என்று கூறினார் திருத்தந்தை. ரோமைய மறைமாவட்டத்திற்கு இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றியைக் கூறிய திருத்தந்தை, அஙகு கூடியிருந்த ரோம் மறைமாவட்டத்திற்கான தன் கர்தினால் பிரதிநிதி, மற்றும் ஆயர்கள், குருக்கள், மக்கள் அனைவருக்கும், ரோமை நகர மேயருக்கும், மற்ற அரசு அதிகாரிகளுக்கும் தன் வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்குவதாகக் கூறினார். ரோமைய மாநகரில் வாழும் அனைவரும், சிறப்பாக கடினமான சூழ்நிலைகளில் வாழும் மக்கள் இறைவனின் அருகாமையை உணரும் வண்ணம் அவர்களுக்காகச் சிறப்பாக வேண்டுவதாகக் கூறினார். ரோமை மறைமாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பல்வேறு செயல் பாடுகளையும் குறிப்பிட்டு அவைகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்தினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.