2010-01-01 14:34:47

நாளுமொரு நல்லெண்ணம்


சன.01,2010 பனிப்போர் உச்சத்தில் இருந்த நேரத்தில் அமெரிக்காவிற்கும் உருசியாவிற்கும் இடையில் வான்வெளியில் யார் பெரியவர் என்ற போட்டி இருந்தது. உருசியா முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப, அமெரிக்கா நிலவிற்கு மனிதனை அனுப்பியதாக சொல்ல... ஒரே போட்டிதான்.
எனவே வான்வெளி குறித்த ஆராய்ச்சி கூடங்களில் என்ன ஆராய்ச்சிகள் நடக்கின்றன என்பதை இரு நாடுகளும் பரம இரகசியமாக வைத்திருந்தார்கள்.
அந்த நேரத்தில் விண்வெளியில் ஓடங்களை அனுப்பும் பொழுது குறிப்புகளை எழுத அமெரிக்கர்கள் சிரமப்பட்டார்கள்
மை நிரப்பப்பட்ட பேனாவை உபயோகித்தால் அதிலுள்ள மை முழுவதும் வெளியே வந்துவிடுகிறது. பந்து முனை பேனாவை உபயோகித்தால் அதில் உள்ள அடர்த்தி அதிகமுள்ள மை இறங்கவே இல்லை. இறுதியில், பல மில்லியன் டாலர்களை செலவழித்து ”ஜெல்” போன்ற மையைக் கண்டுபிடித்தார்கள்.
அதை வைத்து விண்வெளியில் குறிப்புகளை எழுதினார்கள்.
வழக்கம் போல் இதையும் பரம இரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால் உருசியர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி எழுதுகிறார்கள், அவர்கள் மை எதாவது கண்டுபிடித்துள்ளார்களா என்று குழப்பம் வேறு.
பனிப்போர் முடிந்த பின், அமெரிக்காவும், உருசியாவும் கூட்டு சேர்ந்து விண்வெளி சோதனைகள் நடத்திய போது, ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொன்னாராம்: “பார்த்தீர்களா, விண்வெளியில் எழுதுவதற்கென்று நாங்கள் பல மில்லியன் டாலர்களை செலவு செய்து ஒரு மை கண்டுபிடித்துள்ளோம். நீங்கள் இது போல் மை கண்டுபிடித்துள்ளீர்களா?”
உருசியர்  சொன்ன பதில்: “இல்லை. நாங்கள் குறிப்புகளை பென்சில் வைத்தே எழுதுகிறோம்.”
மிக எளிமையான, திறமையான முடிவு.அன்பர்களே, வாழ்வில் செயல்படும் போது, என்ன செய்கிறோம் என்பது ஒருவகைக் கேள்வி. எப்படி செயல்படுகிறோம் என்பது வேறுவகைக் கேள்வி. இரண்டுக்கும் விடை தேடுவது, இரண்டையும் இணைத்து செயல்படுவது வாழ்க்கையில் வெற்றிகளைக் கொணரும்.







All the contents on this site are copyrighted ©.