2010-01-01 14:31:18

திருத்தந்தையின் புத்தாண்டு தின மூவேளை ஜெப உரை


சன.01,2010 அன்னைமரியின் கண்காணிப்பின் கீழ் ஒரு புத்தாண்டைத் துவக்க நமக்குத் தந்துள்ளார் இறைவன். இந்நாள் தெய்வீகத் தாய்மையின் பெருவிழாவாய்ச் சிறப்பிக்கப் படுகிறது. 2010ஆம் ஆண்டின் முதல் நண்பகல் மூவேளை ஜெபத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வு கொள்கிறேன். நம் பொது வீடாக இருக்கும் இவ்வுலகில் பொது நலனுக்காய் நல்லவைகள் பலவற்றை இவ்வாண்டில் ஆற்ற முடியும் என உங்களோடு இணைந்து நானும் நம்புகின்றேன். இவ்வுலகின் இயற்கைக் கொடைகளை ஞானத்துடனும் நீதியுடனும் நிர்வகிப்பது, அமைதிக்கான ஒரு முன் நிபந்தனை என்பது அனைவராலும் பகிரப்படும் ஒத்த கருத்தாகும். அமைதியை வளர்க்க விரும்பினால், இயற்கையைப் பாதுகாப்போம் என்பதே இவ்வாண்டு அமைதி தினத்திற்கான என் செய்தி.  தட்பவெப்பநிலை குறித்த புதிய வழிகாட்டுதல்களின் தேவை குறித்து கோபன்ஹாகனில் உலகத்தலைவர்கள் கூடி விவாதித்த வேளையில், சுற்றுச்சூழல் குறித்த என் செய்தி வெளியிடப்பட்டது. அதே வேளை, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் தனியார்களின், குடும்பங்களின், தல அரசுகளின் கடமைகளையும் வலியுறுத்த விழைகிறேன். ஒரு புதிய வாழ்க்கை முறையைக் கைகொள்வதற்கான செயலூட்டமுடைய மன நிலை மாற்றத்திற்கான தேவை தற்போது உள்ளது. இயற்கையைப் பாதுகாத்து பராமரிப்பது நம் பொறுப்பாகிறது. இயற்கையைக் குறித்து கற்று, மதிப்பதற்கான கல்வி தேவைப்படுகிறது. அமைதியைக் கட்டிஎழுப்புவதற்கு உதவும் வகையிலான நடவடிக்கைகளை அனைத்து நிலைகளிலும் நாம் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

நாம் நம் உடன் வாழும் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஓர் சுற்றுச் சூழலை வழங்கும் நோக்குடன், நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையைக் குறித்து அதிகக் கவனம் செலுத்த வேண்டும். மனித வாழ்வுக்கான இன்றைய மதிப்பென்ன? ஆயுதம் தாங்கிய அனைத்து குழுக்களின் மனச் சான்றிற்கும் இந்நாளில் அழைப்பொன்றை விட ஆவல் கொள்கிறேன். நிறுத்துங்கள், சிந்தியுங்கள், வன்முறைகளைக் கைவிடுங்கள் என அவர்களை நோக்கிக் கூற விழைகிறேன். சில வேளைகளில் இது இயலக் கூடாததாக இருக்கலாம். அனால், இதை நிறுத்த வேண்டும் என்ற மனத் துணிச்சல் இருந்தால், கடவுள் நிச்சயம் உதவுவார், நீங்களும் கடந்த காலங்களில் மறந்து போயிருந்த அந்த அமைதியின் மகிழ்வு உங்கள் இதயங்களில் எதிரோலிப்பதைச் செவி மடுப்பீர்கள். நான் உங்களுக்கான இவ்விண்ணப்பத்தை அன்னை மரியை நோக்கி வைக்கிறேன். இன்றையத் திருவழிபாட்டுக் கொண்டாட்டம், புனித யோசேப்பும், மரியாவும் பிறந்து எட்டு நாளான பாலன் இயேசுவை மோசேயின் சட்டப்படி கோவிலுக்கு எடுத்துச் சென்று விருத்தசேதனம் செய்ததைப் பற்றியும், அவருக்கு இயேசு என்ற பெயரிடப்பட்டதையும் குறிக்கின்றது. 'கடவுள் மீட்கிறார்' என்ற பொருளுடைய இப்பெயர், இயேசுவே இறைச்சாயல், ஒவ்வொருவருக்கும் அனைவருக்குமான ஆசீர் மற்றும் உலகின் அமைதி என்ற இறைவெளிப்பாட்டின் நிறைவாகும். அமைதியின்  இளவலாம் மீட்பருக்குப் பிறப்பளித்த அன்னை மரியே, உமக்கு நன்றி! என தன் மூவேளை ஜெப உரையை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் பல்வேறு மொழிகளில் வாழ்த்துக்களையும் வழங்கினார்.
இப்புத்தாண்டு உங்களை அபரிமிதமான மகிழ்ச்சியில் நிரப்புவதாக. உலகமெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் அன்னைமரியின் பரிந்துரை  மூலம், இயற்கையைப் பாதுகாப்பவர்களாகவும், மன்னிப்பு, ஒப்புரவு, மற்றும் அமைதியை கவனமுடன் ஊக்குவிப்பவர்களாகவும் இருப்பார்களாக என இவ்வுலக அமைதி தினத்தில் செபிக்கிறேன் என வாழ்த்தினார் பாப்பிறை. மூவேளை ஜெப உரையின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் பாப்பிறை.







All the contents on this site are copyrighted ©.