மரியின் ஊழியர் சபையைச் சேர்ந்த அருட்சகோதரி ஆவ்லின் மேரிக்கு 2009ம் ஆண்டின் சிறந்த
இந்திய குடிமகள் விருது
டிச.30,2009 அருட்சகோதரி முனைவர் ஆவ்லின் மேரிக்கு 2009ம் ஆண்டின் சிறந்த இந்திய குடிமகள்
விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மரியின் ஊழியர் சபையைச் சேர்ந்த அருட்சகோதரி ஆவ்லின்,
கடல் வாழ் உயிரினங்கள் பற்றித் தொடர்ந்து ஆய்வு நடத்தி பல அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.
இவரின் பல சாதனைகளைப் பாராட்டி, இன்டர்நேஷனல் பப்ளிஷிங் ஹவுஸ், இவருக்கு இவ்வாண்டின்
சிறந்த இந்திய குடிமகள் விருதை வழங்கியுள்ளது. விஞ்ஞானியாகவும் தூத்துக்குடி மரியன்னை
கல்லூரியிலுள்ள திருஇதய கடல் சார்ந்த ஆய்வு மையத்தின் இயக்குனராகவும் செயல்படும் இவர்,
1999ம் ஆண்டில் அமெரிக்க உயிரியல் நிறுவனத்தின் ஆய்வுக்குழு ஆலோசர் குழுவிலும் கௌரவ உறுப்பினராகவும்
சேர்த்துக் கொள்ளப்பட்டார். பிரிட்டன் சர்வதேச உயிரியல் மையத்தினால் 20ம் நூற்றாண்டு
சாதனையாளர் விருதையும் இன்னும் பல்வேறு நிறுவனங்களின் கௌரவங்களையும் பெற்றுள்ளார். அருட்சகோதரி
ஆவ்லின் மேரி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1986ம் ஆண்டு பெற்ற இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வின்
வெளிப்பாட்டை, அவரின் பெயரை வைத்தே Juncelin என்று பெயரிட்டுள்ளது விஞ்ஞானிகள் குழு. கப்பலின்
வேகத்தையும் அதன் எடையையும் அதன் எரிபொருள் திறனையும் குறைக்கக் காரணமாக இருந்த கடல்
ஒட்டுண்ணியைக் கண்டுபிடித்ததன் மூலம், பல ஆண்டுகளாய் கடல் கம்பெனிகளுக்கு ஏற்பட்ட இலட்சக்கணக்கான
டாலர் இழப்பைத் தவிர்க்க இச்சகோதரியின் ஆய்வு உதவி செய்திருக்கிறது. 1977ம் ஆண்டு, தூத்துக்குடி
மரியன்னை கல்லூரியில் விலங்கியல் பேராசிரியையாகப் பணியைத் தொடங்கி, அக்கல்லூரியின் முதல்வராகவும்
பணியாற்றியுள்ள அருட்சகோதரி ஆவ்லின் மேரி, இந்தியாவின் ஔரங்கபாத்தில் ஒரு முனைவர் பட்டமும்
பெற்றிருப்பவர்.