2009-12-29 16:15:31

விவிலியத் தேடல்:


RealAudioMP3
இன்னும் ஒரே ஒரு நாள். 2009ஆம் ஆண்டு விடைபெறும். அதற்கு அடுத்த நாள் 2010ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கும். விடை பெறும் ஆண்டு, வருகின்ற ஆண்டு... இந்த நாட்களில் பல்வேறு எண்ணங்கள் மனதில் நிறையும்; அதே நேரம் ஒரு சில எண்ணங்கள் மனதை வருத்தும். ஒருவரை வழியனுப்பும் போது, அல்லது ஒருவர் பணி ஒய்வு பெற்று செல்லும்போது சொல்லப்படும் நன்றியுரைகள் நீளமானதாய் இருக்கும். 2009ஆம் ஆண்டை வழியனுப்பும் போது மனதில் நன்றி மேலோங்கியிருந்தால் நன்றாக இருக்கும். நன்றி சொல்வதற்கு நூறு காரணங்கள் இருக்கும்... அமர்ந்து இன்னும் ஆழமாக யோசித்தால், இந்த நூறு பல நூறாக, குறைந்தது 365ஆக, ஆயிரமாக மாறும். அது நம் மனதைப் பொறுத்தது.
நாம் நன்றி சொல்லுக்கூடிய காரணங்களில் ஒன்றாக நான் இப்போது பார்க்க விழைவது நம் குடும்பங்களை. அன்பர்களே, நம் இல்லங்களில், குடும்பத்தினருக்கு என்றாவது நன்றி சொல்லியிருக்கிறோமா? ஒருவேளை, நம் இல்லங்களில் நடைபெறும் செபக் கூட்டங்களில் நன்றி சொல்லியிருப்போம். ஆனால், நான் சொல்வது வித்தியாசமான நன்றி நிகழ்வு. இந்த நன்றிகூறும் நிகழ்வை நான் இப்படி கற்பனை செய்து பார்க்கிறேன். குடும்பத்தில் அனைவரும், ஒரு மேஜையில் அமர்ந்து உணவை உண்ணும்போதோ, அல்லது TV போன்று கவனத்தைத் திசை திருப்பும் எந்தவித நிகழ்வும் இல்லாத ஒரு நேரத்தில் அனைவரும் அமர்ந்து   ஒவ்வொருவரும் அந்த ஆண்டு தன் குடும்பத்தி னரிடமிருந்து பெற்ற நன்மைகளை எடுத்துச் சொல்லி, ஒருவருக்கொருவர் நன்றி சொன்னால் எப்படி இருக்கும்?
“ஓ, அது செயற்கையாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏன் நன்றியெல்லாம் சொல்லவேண்டும்? அது அவரவர் கடமை தானே. பிரமாதமாக, அல்லது பிரமிக்கும் வகையில் ஏதாவது ஒன்று நடந்தால், அந்த நேரத்தில் இந்த உணர்வுகளைச் சொல்லலாம். தினம், தினம் நடக்கும் செயல்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டுமா?” இப்படி ஓடும் உங்கள் எண்ண ஓட்டங்களுக்கு என் பதில் இது: அன்பு உள்ளங்களே, கடந்த ஒரு வாரமாக அல்லது புதுமைகளைப் பற்றி விவிலியத்தேடலில் நான் அவ்வப்போது கூறிய ஒரு கருத்தை மீண்டும் சொல்கிறேன். வானத்தைப் பிளந்து கொண்டு வரும் அற்புதங்கள் மட்டும் புதுமைகள் அல்ல. சந்தடி இல்லாமல், கதவைக் கூட தட்டாமல் உரிமையோடு நம் உள்ளத்தில் நுழையும் நல்லவைகளும் புதுமைகள் தாம்.
சப்தமில்லாமல் வாழ்வில் நுழையும் புதுமைகளில் குடும்பங்களும் அங்கு தினமும் நடக்கும் புதுமைகளும் அடங்கும். இந்த தினசரிப் புதுமைகள் நடக்கும் போது இவைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு, இவை இல்லாமல் போகும் போது இவைகளுக்காக ஏங்குவதில்லையா? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நம்மைச் சுற்றி நாம் சுவாசிக்கும் காற்று எப்போதும் இருக்கிறது. சுவாசிக்கும் திறமை நமக்கு இருக்கிறது. என்றாவது ஒரு நாள் அந்தக் காற்றுக்கு, அல்லது நம் சுவாசத்திற்கு நன்றி சொல்லியிருக்கிறோமா? இல்லை. ஆனால், நீச்சல் தெரியாமல், தண்ணீரில் விழுந்து மூழ்கிக்கொண்டிருக்கிறோம். அல்லது, மின்சக்தி தடைபட்டு liftல் மாட்டிக் கொண்டு அந்த இருட்டில் மூச்சடைப்பதைப் போல் உணர்கிறோம். அல்லது, ஆஸ்த்மாவினால் துன்பப்பட்டு, மூச்சுவிட முடியாமல் தவிக்கிறோம். இந்த நேரங்களில், சுவாசத்தைப் பற்றி நினைப்பதில்லையா? அல்லது, அந்த பயங்கரமான சூழ்நிலைகளிலிருந்து தப்பி வந்ததும், மீண்டும் சுவாசிக்க ஆரம்பித்ததும்... நாம் சுவாசிக்க முடிகிறதே என்பதற்காக நன்றி சொல்வதில்லையா?
சில குடும்பங்களில் யாராவது மிகவும் உடல் நலம் குன்றியிருக்கும் போது, ஏறக்குறைய சாகும் தருவாயில் இருக்கும்போது  அவர்களது கைகளைப் பற்றிக்கொண்டு, நன்றி கூறுவது, மன்னிப்பு கேட்பது என்று ஆழமான உள்ளப் பரிமாற்றங்கள் நடக்கின்றனவே. இப்படி உள்ளத்திலிருந்து எழும் ஆழ்ந்த பரிமாற்றங்கள் ஏன் அன்றாட நிகழ்வாக அல்லது, அவ்வப்போது நடக்கும் ஒரு நிகழ்வாக மாறுவதில்லை? ஒன்றை இழக்கும் போது  அல்லது இழக்கும் நிலையில் இருக்கும் போதுதான் அதன் சிறப்பை உணர வேண்டுமா?
நமது குடும்பங்களில் தினம் தினம் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த ஆண்டு நிறைவடையும் நேரத்தில் இந்த அற்புதங்களை நினைத்து, அசைபோட்டு நன்றி சொல்வோம். அதற்கு உதவியாக, இன்றைய நற்செய்தியின் ஒரு பகுதியையும், சென்ற ஞாயிறு நாம் வாசித்த நற்செய்தியின் இறுதி வரிகளையும் மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். 
லூக்கா நற்செய்தி 2: 36-40
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார். ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
லூக்கா நற்செய்தி 2 51-52
பின்பு இயேசு அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

இந்த வரிகளுடன் லூக்கா இயேசுவின் குழந்தைப் பருவத்தை முடிக்கிறார். அதன் பின் தொடர்வது இயேசுவின் திருமுழுக்கு, பணி வாழ்வு... இயேசு வாழ்ந்தது முப்பத்து மூன்று ஆண்டுகள் என்று பாரம்பரியம் சொல்கிறது. இந்த 33 ஆண்டுகளில் 3 ஆண்டுகளே அவர் பணி வாழ்வில் செலவிட்டார். மீதி 30 ஆண்டுகளை ஒரு குடும்பத்தில் செலவிட்டார். அந்த குடும்பத்தில் தான் அவர் உடல் வலிமை, ஞானம் அனைத்தும் பெற்றதாக நற்செய்தி சொல்கிறது.  பணி செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் அவர் தன் குடும்பத்தில் 10 ஆண்டுகள் தயாரித்ததைப் போல் தெரிகிறது. 3:30 என்ற இந்த கணக்கே இயேசு குடும்ப வாழ்க்கைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைச் சொல்லாமல் சொல்கிறது.
குடும்ப வாழ்வு என்பதை... குடும்பத்திற்காக வாழ்வது, குடும்பத்தில் வாழ்வது, அல்லது குடும்பமே வாழ்வாவது என்ற கோணங்களில் சிந்திக்கலாம்.
புதிதாக மணமான ஒரு மனிதன் தன் மனைவி மேல் மிக அதிகம் அன்பு கொண்டிருந்தார். அந்த அன்பை நிரூபித்து காட்ட, அவர் ஒவ்வொரு நாளும் கடுமையான சாகசங்களைச் செய்தாராம். ஒரு நாள் ஆழமான கடலில் பல மைல்கள் நீந்தினார். அடுத்த நாள், மிக உயர்ந்த மலை மீது ஏறினார். அதற்கும் அடுத்த பல நாட்கள் கடினமான ஒரு பாலை நிலத்தில் உணவோ நீரோ இன்றி கடந்து வந்தார். எல்லாம்... தன் மனைவியின் மீதுள்ள அன்பை நிரூபிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள். இப்படி பல நாட்கள் தன் சாதனைகளை முடித்து விட்டு வீட்டுக்கு அவர் வந்த போது, அவர் மனைவி வேறொருவரை மணந்து கொண்டு வேற்றூர் சென்றுவிட்டாராம். 
குடும்பத்திற்காக வாழ்பவர்கள் செய்யக்கூடிய ஒரு தவறை இந்தக் கதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. குடும்பத்திற்காக வாழ்பவர்கள் செய்யக்கூடிய தவறு என்ன? அவர்கள் குடும்பத்திற்காக இரவும் பகலும் செய்யும் வேலைகளால், குடும்பத்தையே மறந்து, குடும்பத்தை விட்டு அதிக நேரம் வெளியிலிருப்பது தான்.
குடும்பத்திற்காக வாழ்வது போதாது. குடும்பத்தில் வாழவேண்டும். ஆனால், குடும்பத்தில் வாழ்பவர்களெல்லாம் குடும்பத்துடன் வாழ்கின்றனர் என்றும் சொல்லிவிட முடியாது. இல்லையா? ஒரு சிலர் குடும்பத்தில் உடலளவில் வாழ்ந்தாலும், மனதளவில் மனைவியிடமிருந்தும், பிள்ளைகளிடமிருந்தும் பல மைல்கள், ஏன்? பல உலகங்கள் தள்ளி  தூரமாய் வாழ்வதையும் பார்க்கிறோம். இந்த தூரத்தை, இந்த வெற்றிடத்தை நிரப்ப பல முயற்சிகள், வேறு பல விளைவுகள்... நாம் வாழும் இந்த நாட்களில் இந்த வெற்றிடத்தை நிரப்ப TV மிக அதிகமாகப் பயன்படுகிறதோ என்ற பயம் எனக்கு.
TV நம் வாழ்க்கையில் உண்டாக்கும் தாக்கத்தைக் கூறுவதற்காக சொல்லப்படும் ஒரு சிறுகதை. கணவனும், மனைவியும் TVக்கு முன் அமர்ந்திருக்கின்றனர். பல ஆண்டுகள் இப்படியே அமர்ந்திருக்கின்றனர் இவர்கள். ஒரு நாள் மின்சக்தி தடைபடுகிறது. TV உயிரிழந்ததும் இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கின்றனர். அப்போது கணவன் தன் மனைவியைப் பார்த்து "ஹலோ, உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கேனே" என்கிறார். மனைவியும் அப்படியே சொல்கிறார். பின்னர் தங்கள் பெயர்களைப் பரிமாறுகின்றனர், தங்கள் முகவரிகளைச் சொல்கின்றனர். இருவருக்கும் ஒரே ஆச்சரியம் என்னவென்றால் இருவரின் முகவரிகளும் ஒரேபோல் இருப்பதுதான். இந்த ஆச்சரியத்தைப் பற்றி அவர்கள் இன்னும் பேச முயலும் போது, மின்சாரம் திரும்ப வருகிறது, TV உயிர் பெறுகிறது, அவர்கள் பேச்சு அத்தோடு நின்று போகிறது.
மிகைப்படுத்தி சொல்லப்பட்டுள்ள ஒரு கதைதான். ஆனால், இதைப் போன்ற ஒரு அனுபவம் நமக்கு இருப்பதில்லையா? ஒரே கூரைக்கடியில் வாழ்ந்தாலும் நம் குடும்பங்களில் எத்தனை பேர் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் அன்னியர்களைப் போல், தூரப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.
இப்படி அன்னியப் படுவதற்கு ஒரு காரணம்? காயங்கள்... மனதில் உண்டாகும் காயங்கள். இந்தக் காயங்களை ஆற்றுவதற்கு பல வழிகள் இருந்தாலும், காயங்களுடனே வாழ்ந்து அந்தக் காயங்கள் புரையேறிப்போகும் அளவுக்கு விட்டு விடுவதால், புரையேறிப் போன கையையோ, காலையோ வெட்டுவது போல் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வதுதான் ஒரே வழி என்ற சூழ்நிலை உருவாகிறது. சமுதாயத்திற்கு பயந்து, குடும்பப் பெயர் கெட்டுவிடும் என்று பயந்து, விவாகரத்து செய்யாமல் ஒரே கூரைக்கடியில் அன்னியர்களைப் போல் வாழும் பல குடும்பங்களை நம் எல்லாருக்கும் தெரியும். இவர்களது உள்ளங்களில் ஆணிவேர் விட்டு வளர்ந்திருக்கும் காயங்களை வேரோடு இறைவன் களைந்தெறிய வேண்டுமென இவர்களுக்காக வேண்டிகொள்வோம்.
இந்தக் காயங்களை ஆற்றுவதற்கு ஒரு நல்ல வழி என்ன? ஞாபகச் சக்தியை இழப்பது. நான் சொல்வது வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால், மருத்துவரான Bernie Siegel என்பவர் எழுதிய புத்தகத்தில் இந்த கருத்தை உள்ளடக்கிய ஒரு கதை சொல்லப்பட்டுள்ளது. கதையின் நாயகனே இந்தக் கதையை நமக்குச் சொல்கிறார்: சில ஆண்டுகளுக்கு முன்னால், என் வீட்டு கூரை மீது வேலை செய்துகொண்டிருந்த நான், கீழே விழுந்தேன். அப்போது என் தலை தரை மீது மோதியது. நினைவிழந்தேன். கண் விழித்தபோது, ஒரு அழகான பெண் என் பக்கத்தில் கவலையோடு நின்றதைப் பார்த்தேன். "என்னங்க, எப்படி இருக்கு இப்ப?" என்று கேட்ட பெண்ணை ஆச்சரியமாகப் பார்த்தேன். அவர் ஏன் என்னை ‘என்னங்க’ என்று கூப்பிட வேண்டும் என்று கேட்டேன். அப்போது அவர், "நான் உங்க மனைவி. அதனாலதான்." என்றார். அதற்கு பின் அவர் ஐந்து அழகானக் குழந்தைகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். "இவங்க நம்மப் பிள்ளைங்க." என்றார். பின்னர், ஒரு அழகான வீட்டுக்குள் என்னைக் கூட்டிச் சென்றார். அந்த வீடு, அங்கு இருந்த எல்லாமே மிக அழகாக இருந்தன; எல்லாருமே அழகாகத் தெரிந்தனர். இந்த அழகையெல்லாம் நான் இவ்வளவு ரசித்ததற்கு ஒரே காரணம்? நான் கூரையிலிருந்து விழுந்து, தலையில் அடிபட்ட உடன், என் ஞாபகச் சக்தியை இழந்துவிட்டேன். கடந்த காலத்தில் நடந்த எல்லாவற்றையும் மறந்து விட்டேன். அதனால், எல்லாமே புதிதாக, நன்றாக, அழகாகத் தெரிந்தது. இப்படி ஓர் ஆண்டு கழிந்தது. என் வாழ்வில் மிக அழகியக் காலம் அது. ஆனால், அந்த ஓர் ஆண்டு கழிந்ததும், திடீரென ஒரு நாள் என் நினைவுகள் திரும்பின. அதற்கு பின் எல்லாமே பழைய நிலைக்குத் திரும்பின. என்னால் மீண்டும் திரும்பி வந்த என் பழைய வாழ்க்கையைச் சமாளிக்க முடியவில்லை. ஒரு மனநிலை மருத்துவரின் உதவியை நாடினேன். அப்போதெல்லாம் என் மனதில் அடிக்கடி வந்த ஒரு ஏக்கம்: "ஒவ்வொரு நாளும் விழிக்கும் போது முந்தைய நாள் நினைவுகளெல்லாம் அழிந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"
ஏக்கம் நிறைந்த கதை இது. ஆனால் ஒரு பாடம் தெளிவாகிறது. எல்லாவற்றையும் தினம் தினம் மறந்து, வாழ்க்கையைப் புதிதாக ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கலாம். அல்லது வள்ளுவர் சொன்னது போல், "நன்றல்லது அன்றே மறந்து" வாழலாம். அது நம் கையில்... இல்லை, மனதில் உள்ளது.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று ஆரம்பித்து, குடும்பத்தைப் பற்றி சொல்லப்படும் பல்வேறு கூற்றுகள் குடும்பத்தை ஒரு பள்ளியாக, ஆலமரமாக, கோவிலாக, இன்னும் பலவாக உருவகிக்கின்றன. என் மனதில் படுவது இதுதான். குடும்பம் ஒரு புதுமை. தினம் தினம் நடக்கும் ஒரு புதுமை.
இந்தப் புதுமையை தினம் தினம் ரசிக்க ஆரம்பித்தோம் என்றால், நமது குடும்ப உறவுகள் ஆழப்படும். அந்த ஆழத்தில் மூழ்கினால், முத்தெடுக்க முடியும். குடும்பமே வாழ்வாகும். அதிசயங்களை, புதுமைகளை அனுபவிக்கும் குடும்பங்கள் தாங்கள் பெற்ற மகிழ்வை, புதுமைகைளை மற்றவர்களுடன் பகிர் ஆரம்பிப்பார்கள். அவர்களது குடும்பம் விரிவடையும். இயேசு, மரியா, யோசேப்பு என்று ஆரம்பித்த திருக்குடும்பம் அந்த மூவரோடு, நாசரேத்தொடு நின்று விடாமல், இன்னும் பலரைத் தங்கள் குடும்பமாக மாற்றியது.
சலனமற்ற குளத்து நீரில் ஒரு புள்ளியில் உண்டாகும் மாற்றம் வட்ட அலைகளாக பரவி குளம் முழுவதையும் நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள். உலகம் என்ற குளத்தில் இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒரு குடும்பம் திருக்குடும்பமாக மாறி, புதுமைகளைப் பரப்ப ஆரம்பித்தால்... அந்த அன்பு அலைகள் உலகம் முழுவதும் பரவினால்...  அன்பு உள்ளங்களே, இந்த அழகான கற்பனையுடன் இந்த ஆண்டை முடிப்போம். வரும் ஆண்டிலும் நமது குடும்பங்களில் புதுமைகள் ஆரம்பித்து, உலகமெனும் குடும்பத்தில் பல புதுமைகள் தொடரட்டும், பெருகட்டும்...







All the contents on this site are copyrighted ©.