2009-12-25 14:15:33

2009 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்குத் திருத்தந்தை வழங்கிய URBI ET ORBI சிறப்புச் செய்தி


“இந்நாளில் ஓர் ஒளி நம்மீது ஒளிரும், இறைவன் நமக்காகப் பிறந்துள்ளார்.”
நாள் துவங்கியுள்ளது. பெத்லகேம் குகையிலிருந்து ஒளிரும் ஒளி நம்மீது ஒளிர்கின்றது.
விவிலியமும் இன்றைய திருவழிபாடும் இயற்கையான ஓர் ஒளிபற்றிப் பேசவில்லை. மாறாக, ஒரு வித்தியாசமான சிறப்பு ஒளி பற்றி, அதாவது யாருக்காக இறைமகன் பிறந்தாரோ, அவர்களை நோக்கிய, அதாவது நம்மை நோக்கிய ஒளி பற்றி பேசுகின்றன. இந்த 'நாம்' என்பது திருச்சபையை அதாவது கிறிஸ்துவில் விசுவாசமுடைய, மேலும் அவர் பிறப்பை எதிர்நோக்கி இருக்கும் சர்வதேச குடும்பத்தைக் குறித்து நிற்கிறது.

பெத்லகேம் மாடடைக் குடிலில் நமக்காக இறைவன் வந்ததை, முதலில் மனிதக் கண்களால் கண்டுணர முடியவில்லை. புனித லூக்காவின் நற்செய்தியின்படி, அங்கே புனித யோசேப்பு மற்றும் மரியா தவிர, வான தூதர்களின் கிறிஸ்து பிறப்பு செய்தி கேட்டு வந்த ஏழை இடையர்களும் நின்றிருந்தனர். அந்த முதல் கிறிஸ்துமஸ் ஒளியானது, இரவில் மூட்டப்பட்ட நெருப்பு போன்றிருந்தது. எங்கும் இருள் நிறைந்திருந்த வேளையில், ஒவ்வொரு மனிதனையும் ஒளிர்விக்கும் உண்மை ஒளி குகைக்குள் ஒளிர்ந்தது. மீட்பு வரலாற்றில் இறைவன் எப்போதும் செயலாற்றுவது போல், இங்கும் இது எளிமையானதாய், மறைமுகமானதாய் இடம் பெற்றது. இறைவன் சிறிய விளக்குகளில் ஒளியேற்ற ஆவல் கொண்டு, அதன் வழி பெரும் பகுதிகளை ஒளிர்விக்கிறார். அதன் உட்பொருளாய் இருக்கும் உண்மையும், அன்பும் அவ்வொளி வரவேற்கப்படும்போது தூண்டுதல் பெறுகின்றன. இவ்வோளியின் தொடர்புக்கு வரும் ஒவ்வொருவரும் தாங்களே ஒளியாக மாறுகின்றனர். இதுவே திருச்சபையின் வரலாறு. எளிமையான வகையில் பெத்லகேம் குடிலில் தன் பயணத்தைத் துவக்கிய திருச்சபை இன்று, மனித குலத்தின் ஒளியின் ஆதாரமாக மாறியுள்ளது. இன்றும் இவ்வுலகின் இருளில் நெருப்பைத் தூண்டி, இயேசு பாலனின் மீட்பின் இருப்பை ஏற்றுக் கொண்டு ‘நாம்’ என்பதன் பகுதியாக மாற ஒவ்வொருவரையும் அழைக்கிறார் இறைவன்.

கடவுளின் அன்பை வரவேற்கும் 'நாம்' என்பது எங்கெங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் துன்பகரமான சூழல்களில் கூட இறைவனின் ஒளி ஒளிர்கின்றது. பாவத்தின் அடிமைத் தளையிலிருந்து மனிதனை மீட்க வந்த இறைமகனையேக் கொடையாகப் பெற்று நமக்கு வழங்கிய அன்னை மரியைப் போல் திருச்சபையும் உள்ளது. அன்னை மரியைப்  போல் திருச்சபையும் அச்சம் கொள்வதில்லை, ஏனெனில் இயேசு பாலனே அதன் பலம். அன்னைமரி, இயேசு பாலனைத் தனக்கென மட்டும் வைத்துக் கொள்ளவில்லை. உண்மையான இதயத்தோடு அவரைத் தேடுவோர் அனைவருக்குமென, இவ்வுலகில் துன்புறுவோர், வன்முறையால் பாதிக்கப்பட்டோர், அமைதிக்காய் ஏங்குவோர் என அனைவருக்கும் வழங்கினார். இன்றும் பொருளாதார நெருக்கடிகளாலும், அதைவிட மேலாக ஒழுக்கரீதி நெருக்கடிகளாலும் துன்புறும் மனித குலத்தை நோக்கும் திருச்சபை, மனித குலத்துடனான விசுவாச ஒருமைப்பாட்டுணர்வுடன் அன்றைய இடையர்களின் வார்த்தைகளை இன்று மீண்டும் உரைக்கின்றது. "பெத்லகேமுக்குப் போவோம்". அங்கே நாம் நம் நம்பிக்கையைக் கண்டு கொள்ளலாம்.

இயேசு பிறந்த புனித பூமியில் வன்முறை மற்றும் பகையுணர்வுகளைக் கைவிட்டு அமைதியில் ஒன்றிணைந்து வாழ விடப்படும் அழைப்பு, திருச்சபையின் 'நாம்' என்பதில் உயிரோட்டமுடையதாய் இருக்கின்றது. இந்தத் திருச்சபையில் 'நாம்' என்பது மத்திய கிழக்குப் பகுதியின் ஏனைய நாடுகளிலும் உள்ளது. ஈராக்கின் துன்புறும் நிலைகளையும் அப்பகுதியின் கிறிஸ்தவர்கள் நிலையையும் நாம் எங்ஙனம் மறக்க முடியும்? இந்தத் திருச்சபையின் 'நாம்' என்பது இலங்கையிலும், கொரிய தீபகற்பத்திலும், பிலிப்பின்சிலும், ஏன், ஆசியாவின் ஏனைய நாடுகளிலும் ஒப்புரவு மற்றும் அமைதியின் புளிக்காரமாய் உள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் நாடுகளிலும், காங்கோ ஜனநாயகக் குடியரசில் அநீதிகள் நிறுத்தப்படவும், மடகாஸ்கரில் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வரவும், Niger மற்றும் Guinea வில் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் துவக்கப்படவும், அனைத்து மக்களும் நம்பிக்கையில் வாழவும் திருச்சபை தன் குரலை எழுப்பி வருகிறது. ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் மக்கள் தங்கள் சுயநல மற்றும் தொழில் நுட்ப சார்பு மனநிலையை விட்டு விலகி, பொது நலனில் அக்கறை கொள்ளவும், கருவில் வளரும் குழந்தை முதல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்களுக்கான மதிப்பை வெளிப்படுத்தவும் வேண்டுமென திருச்சபை அழைக்கிறது. Hondurasல் அமைப்பு முறைகளைக் கட்டிஎழுப்ப உதவும் திருச்சபை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் 'நாம்' என்பதைத் தன் தனித்தன்மையாகக் கொண்டு, வேறு எந்த கோட்பாடுகளாலும் நிரப்பமுடியாத உண்மை மற்றும் பிறரன்பின் முழுமையில் ஒவ்வொருவரின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்து, ஐக்கியத்தின் ஆதாரமான சகோரத்துவம் மற்றும் நீதியைப் பறைசாற்றுகிறது.

தன்னை நிறுவியவரின் அழைப்புக்கு விசுவாசமாய் இருக்கும் திருச்சபை, இயற்கைப் பேரிடராலும், ஏழ்மை நிலைகளாலும் பாதிக்கப்பட்டிருப்போருடன் தன் ஒருமைப்பாட்டை அதிகரிக்கிறது. பசி, சகிப்பற்றதன்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவைகளின் காரணமாக வேறு நாடுகளில் குடியேறும் மக்களை வரவேற்று இருக்குமாறு திருச்சபை அழைப்பு விடுக்கிறது. எத்தகையச் சூழலிலும், அதாவது துன்புறுத்தப் படும்போதும், பாகுப்பாட்டுடன் நடத்தப் படும்போதும் தாக்குதல் மற்றும்  வெறுப்புணர்வுடன் கூடிய பாராமுகத்தை எதிர்நோக்கும் சூழல்களிலும் திருச்சபை தொடர்ந்து இயேசுவின் நற்செய்தியை அறிவித்து வருகிறது.
 அன்பு சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் திறந்ததாக இருக்கும் ஓர் ஐக்கியத்தின் பகுதியாக இருப்பது எத்துணை உன்னதமானது. “கடவுள் நம்மோடு” என இயேசு எனும் இம்மானுவேல் இவ்வுலகுக்கு வரக் காரணமான தூய திருத்துவத்தின் ஐக்கியமே அது. பெத்லகேமின் இடையர்கள் போல் நாமும் நன்றியிலும் மகிழ்விலும் நிறைக்கப்பட்டு, அன்பு மற்றும் ஒளியின் இந்த மறையுண்மை குறித்து தியானிப்போம் என அழைப்பு விடுத்த திருத்தந்தை, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை மீண்டும் கூறி, தன் URBI ET ORBI சிறப்புச் செய்தியை நிறைவு செய்தார்.







All the contents on this site are copyrighted ©.