2009-12-23 15:25:44

கிறிஸ்தவ பள்ளியில்  படித்ததாலேயே சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வைத் தாங்கள் பெறமுடிந்தது - கோபன்ஹாகன் உலக மாநாட்டில் கலந்து கொண்ட இரு இந்திய மாணவிகள்


டிச.23,2009 கோபன்ஹாகன் தட்பவெப்ப நிலை குறித்த உலக மாநாட்டில் கலந்து கொண்ட இரு இந்திய மாணவிகள், தங்களுக்குச் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை வழங்கியது திருச்சபையே எனக் கூறியுள்ளனர். சுற்றுச் சூழல் குறித்து இந்தியாவில் நடத்தப்பட்ட நாடு தழுவிய கட்டுரை போட்டியில் வெற்றி பெற்று, அதன் பயனாக இந்தியாவிலிருந்து சென்ற 43 அங்கத்தினர்கள் கொண்ட குழுவில் இடம் பெற்ற ரம்ஷா சஜித் (Ramsha Sajid), அத்யா துபே (Adya Dubey) என்ற இரு பெண்களும் போபாலிலுள்ள கார்மேல் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி மாணவியர். சென்ற வாரம் கொபன்ஹாகனில் நடந்து முடிந்த உலக மாநாட்டில் பங்கு பெற்ற இந்த இரு மாணவியரையும் கவுரவிக்கும் வகையில் மத்திய பிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் பேசுகையில் இந்த இரு மாணவியரும் கிறிஸ்தவ பள்ளியில்  படித்ததாலேயே சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வைத் தாங்கள் பெறமுடிந்ததேனக் கூறினர். கணணி இயந்திரங்களைப் பயன்படுத்தாத வேளையில் அவற்றின் மின்சக்தியை நிறுத்துதல், கடைகளுக்குச் செல்லும்போது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத பைகளை பயன்படுத்துதல் போன்ற பரிந்துரைகளைத் தாங்கள் கூறியதை உலக மாநாட்டு பிரதிநிதிகள் பெரிதும் வரவேற்றனர் என்று இரு மாணவியரும் கூறினர். மத்திய பிரதேசத் தலத் திருச்சபை ஏறத்தாழ 50 கத்தோலிக்கப் பள்ளிகளில் ஆரம்பித்துள்ள (Matr Chaav Abhiyan) அன்னை பூமி இயக்கத்தில் உறுப்பினரானது தனக்குப் பெருமையென்று ரம்ஷா சஜித் கூறினார்.  மத்திய பிரதேசத்தில் இந்த இயக்கத்தை முன்னின்று நடத்தும் அருட்தந்தை ஆனந்த் முட்டுங்கல் (Anand Muttungal) இந்த விழாவில் உரையாற்றுகையில், இவ்விரு மாணவியரைப் போல, இன்னும் பல்லாயிரம் இளையோர் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு பெறுவதையே திருச்சபை அதிகம் விரும்புகிறதேனக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.