2009-12-21 16:34:07

கிறிஸ்துமஸ் சிறாரின் கதையல்ல - திருத்தந்தை


டிச.21,2009 கிறிஸ்துமஸ் சிறாரின் கதையல்ல, மாறாக அது உண்மையான அமைதியைத் தேடும் மனிதருக்கு கடவுள் அளிக்கும் பதிலாக, இயேசு பெத்லகேமில் பிறந்தது நமக்கு நினைவுபடுத்துகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் ஞாயிறு நண்பகலில் திருத்தந்தையின் மூவேளை செப உரையைக் கேட்பதற்காக நின்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கானத் திருப்பயணிகளிடம், கிறிஸ்துமஸ், சாந்தா கிளாஸ், கிறிஸ்துமஸ் இனிப்புகள் ஆகியவற்றின் காலம் என்பதைவிட, அமைதிக்காக ஏங்கும் மனித குலத்திற்குக் கடவுள் அளிக்கும் பதிலாக இருக்கின்றது என்று கூறினார்.

ஞாயிறு மூவேளை செப உரையில் கிறிஸ்துமஸ் மற்றும் பெத்லகேம் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, யூதேயா நகரத்தில் இடம்பெறவிருந்த ஒரு புதிரான பிறப்பு குறித்து மீக்கா புத்தகத்திலுள்ள இறைவாக்குகள் பற்றிக் குறிப்பிட்டு உலகில் இறைமகனின் வருகைக்கான நேரம் மற்றும் இடங்களை விளக்கும் இறைத்திட்டம் பற்றிப் பேசினார்.

இது அமைதியின் திட்டம் என்றுரைத்த அவர், பெத்லகேம் புனித பூமியிலும் அகில உலகிலும் அமைதியின் அடையாளமான நகரம் என்று கூறினார்.

துரதிஷ்டவசமாக, பெத்லகேம் நிலையான அமைதியைக் குறித்துநிற்கவுமில்லை, அதனை அடையவுமில்லை, எனினும் அந்த அமைதிக்கான வழிகளையே உலகு தேடுகிறது மற்றும் அதற்காகவே காத்திருக்கிறது என்றார் திருத்தந்தை.

எனினும் கடவுள் இந்தப் பணியிலிருந்து ஒருபொழுதும் ஒதுங்கி இருப்பதில்லை, இந்த ஆண்டிலும் பெத்லகேமிலும் உலகம் முழுவதிலும், மனிதகுலமனைத்திற்கும் அமைதியின் இறைவாக்காகிய கிறிஸ்துமஸ் பேருண்மையைத் திருச்சபையில் மீண்டும் புதுப்பிக்கின்றார் என்று கூறினார் அவர்.

இவருக்கு நமது இதயக் கதவுகளைத் திறக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறோம், இறைத்திட்டத்தின் பணியில் விசுவாசத்துடன் நம்மைக் கையளிப்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.

இதனை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளாவிடினும் அவரின் ஞானம் மற்றும் நன்மைத்தனத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம், முதலில் இறையாட்சியைத் தேடுவோம், இறைபராமரிப்பு நமக்கு உதவி செய்யும் என மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.