2009-12-21 16:33:08

ஆப்ரிக்காவில் ஒப்புரவு இடம் பெறுவதற்குத் திருச்சபையின் ஈடுபாடு குறித்து திருத்தந்தை விளக்கம்


டிச.21,2009 இவ்வுலகில் ஒப்புரவிற்கு, குறிப்பாக ஆப்ரிக்காவில் ஒப்புரவிற்கானத் திருச்சபையின் ஈடுபாடு குறித்து இத்திங்களன்று திருப்பீட உயர் அதிகாரிகளைச் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைக் கூறிய போது தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

புனித பவுல் ஆண்டு முடிந்து குருக்களின் ஆண்டு துவங்கியுள்ள இவ்வேளையில் 2009ம் ஆண்டின் தனது நடவடிக்கைகளைத் திரும்பிப் பார்ப்பதாக உரைத்த பாப்பிறை, இவ்வாண்டில் ஆப்ரிக்கத் திருச்சபையே முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது எனத் திருப்பீட உயர் அதிகாரிகளிடம் கூறினார்.

முதலில் காமரூன் மற்றும் அங்கோலா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள உயிர் துடிப்புடைய தலத்திருச்சபைகளின் நடவடிக்கைகளைக் காணவும் ஆப்ரிக்காவுக்கான ஆயர்கள் மாநாட்டில் உரோம் நகரில் பங்கு கொள்ளவும் முடிந்தது குறித்தும் எடுத்துரைத்தார் அவர்.

ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கான பணி குறித்து கலந்துரையாடிய ஆப்ரிக்கத் தலத் திருச்சபை அங்குள்ள மக்களின் துன்பங்களை அறிந்துள்ளதாகவும் ஒப்புரவும் நீதியும் அமைதிக்கான முன் நிபந்தனைகள் என்பதை உணர்ந்து மக்களிடையே சேவையாற்றுவதாகவும் கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் இடம் பெற்ற ஒப்புரவு நடவடிக்கைகளையும் ஆப்ரிக்காவுக்கான எடுத்துக்காட்டாகக் காட்டினார் பாப்பிறை.

கடவுளுடன் ஒப்புரவு கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்தியம்பினார் அவர்.

இவ்வாண்டில் புனித பூமிக்கும் யோர்தானுக்குமான திருப்பயணம் மற்றும் செக் குடியரசுக்குமானத் திருப்பயணங்கள் வெற்றியடைந்தது குறித்தும் தனது மகிவ்ச்சியை வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.